திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வேலை வாய்ப்பா... சொந்தத் தொழிலா?

வேலை வாய்ப்பு ஜோதிட விளக்கங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேலை வாய்ப்பு ஜோதிட விளக்கங்கள்!

- ஜோதிடர் ரா.சுப்பிரமணியன் -

வேலை வாய்ப்பு அல்லது சுயதொழில் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி இன்றைய இளைஞர்கள் பலருக்கும் உண்டு. வேலையா, தொழிலா எதைத் தேர்ந்தெடுத்தால் ஜெயிக்கலாம் இந்தக் கேள்விக்கு ஜோதிடரீதியாக பதில் காண இயலும்.

வேலை வாய்ப்பா... 
சொந்தத் தொழிலா?

ற்காலச் சூழலில் சொந்தமாக பிசினஸ் செய்து பார்த்தால் என்ன என்ற முனைப்பே அதிக இளையோரிடம் தென்படுகிறது. ஆர்வமும் உழைப்பும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் அதேவேளையில், சிற்சிலருக்கு பிசினஸில் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. போட்டிகள் நிறைந்த தொழில்களில் மேற்கொண்டு முதலீடுகள் செய்யமுடியாமல் தேக்க நிலையைச் சந்திப்பவர்களும் உண்டு. அதேபோல் வேலை தேடும் அன்பர்களில் சிலருக்குத்தான் விரும்பிய நிறுவனங்களில் படிப்புக்கேற்றபடி வேலை அமைகிறது.

ஒருவரின் வேலை அல்லது தொழில் வாய்ப்புகளை அவரின் ஜாதக நிலை மற்றும் நடப்பு கிரக தசா-புக்தி நிலைகள் எடுத்துக்காட்டும். ஜன்ம லக்னம், லக்னாதிபதிக் கிரகம் ஆகியவற்றின் பலம் பலவீனத்தை அறிந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

ஜன்ம லக்னத்திலிருந்து 6-வது வீடு, வேலை செய்து ஜீவனம் செய்யும் அமைப்பைக் காட்டும். எனவே, இந்த இடம் மற்றும் இந்த இடத்தின் அதிபதிக் கிரகத்தின் நிலையை ஆராய்தல் அவசியம். அதேபோல், ஜீவனஸ்தானமாகிய 10-ம் இடம், தொழில் மூலம் வருமானம் வருவதைச் சுட்டுக்காட்டும். 10-ம் வீடு, அதன் அதிபதிக் கிரகத்தின் நிலைகளைப் பொறுத்து தொழில் லாப-நஷ்ட விஷயங்களைக் கணிக்கலாம்.அதேபோல் ஒருவரின் தொழில், வேலை வாய்ப்பை அறிய அவரின் நடப்பு தசா-புக்தி நிலைகளையும் ஆராய வேண்டும்.

ஆக லக்னம் - லக்னாதிபதி நிலை, 6-ம் இடம் - இந்த இடத்தின் அதிபதிக் கிரகம், 10-ம் இடம் - பத்தாம் இடத்தின் அதிபதி, நடப்பு தசா-புக்தி ஆகிய அம்சங்களை ஆராய்ந்து, வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் குறித்த சாதக பாதகங்களை அறியலாம். ஒருவரின் ஜாதகத்தில் 6-ம் இடத்தின் அதிபதி 10-ம் இடத்தின் அதிபதியைவிட பலமாக அமைந்திருந்தால், அந்த நபர் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுவது நல்லது. சுய ஜாதகப்படி அரசு வேலையா, தனியார் வேலையா என்பதையும் கணிக்க இயலும்.

ஜாதகத்தில் 6-ம் வீட்டு அதிபதியைவிட 10-ம் வீட்டு அதிபதி பலம் பெற்றிருந்தால், ஏதேனும் தொழில் ஆரம்பித்து வருமானம் ஈட்டலாம். குறிப்பாக அந்தப் பத்தாம் வீட்டு அதிபதி கிரகத்துக்கு உரிய தசா-புக்தி காலங்களில் தொழில் தொடங்கினால் அமோக வெற்றி பெறலாம்.

வேலை வாய்ப்பா... 
சொந்தத் தொழிலா?

சிலர் இருக்கிறார்கள்... அவர்களின் ஜாதகத்தில் 6 மற்றும் 10-ம் வீட்டு அதிபதிகள் சமபலத்துடன் இருப்பார்கள். இப்படியான அன்பர்கள், வேலைக்குச் சென்றுகொண்டே தொழிலிலும் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்கலாம்.ஒருசிலர், எவ்வித வேலைக்கும் செல்லாமல் தொழிலிலும் ஈடுபடாமல் சோம்பேறியாகச் சுற்றித் திரிவார்கள். இவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் லக்னம், லக்னாதிபதி, 6 மற்றும் 10-ம் வீட்டு அதிபதி கிரகங்கள் பலவீனமாக இருப்பதை அறியலாம். ஆனாலும், ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பதற்கேற்ப, அவரின் ஜாதகத்தில் 7-ம் இடம் பலம் பெற்று இருப்பின் மனைவி வழியில் யோகம் கூடிவரும். நீதித்துறையில் அதிகாரியாகப் பணிசெய்யும் ஒருவர் ஜோதிட ஆலோசனைக்கு வந்தார். பணியை விட்டுவிட்டுத் தொழில் தொடங்க ஆசைப்படுவதாகக் கூறினார். அவரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில், அவர் நடப்புப் பணியில் நீடிப்பதே சிறப்பு என்று வழிகாட்டினேன். அவரின் ஜாதகத்தில் ஜன்ம லக்னாதிபதி புதன். அவர் 12-ல் மறைவு பெற்றாலும் குருபகவானின் பார்வை பெறுவது வலுவைத் தரும்.

6-ம் வீட்டு அதிபதி செவ்வாய். இவர் விருச்சிகத்தில் ஆட்சி நிலையில் உள்ளார். இத்துடன் சந்திரன் சேர்க்கை. ஆகவே சந்திர மங்கள யோக அமைப்பு. சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம் பெற்றாலும், ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இருப்பது நீசபங்கம். ஆக, 6-ம் வீடும் அதன் அதிபதிக் கிரகமும் பலம் என்பது விளங்குகிறது. 10- வீட்டு அதிபதி குரு. இவர் 4-ம் வீட்டில் உள்ளார். இவரே கேந்திரம் 7, 10-ம் வீடுகளுக்கு அதிபதி. ஆகவே ஆதிபத்ய தோஷம். மேலும் தொழில் காரகரான சனி 5-ல் அமைந்துள்ளார். அவர் இருக்கும் இடத்திலிருந்து எண்ண வரும் 12-ல் குரு இருப்பது நன்மை தராது.

இந்த ஜாதகருக்கு சந்திர தசை நடைபெறுகிறது. அடுத்து வரவிருப்பது செவ்வாய் தசை. மொத்தத்தில் 6-ம் வீட்டு அதிபதி வலுவாக இருப்பதும், கிரக தசை நிலைகளும் அரசு வேலையில் தொடர்வதே நல்லது என்பதைச் சுட்டிக்காட்டின. நமது பரிந்துரையை ஏற்று பணியில் தொடர்ந்த அந்த அன்பர், விரைவில் உயர்பதவியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய வடிவில் மச்சம் இருக்கிறதா?

மச்சங்களின் வடிவ லட்சணம் சார்ந்தும் சில குணாதிசயங்களை விவரிக்கின்றன, அங்கலட்சண சாஸ்திரம் சார்ந்த நூல்கள்.

மச்சம் உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மிகச் சிறிய புள்ளி வடிவில் இருப்பின், அவர்களின் இயல்பு மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாருடனும் தாராளமாகக் கலந்து பழகமாட்டார்கள். தனிமையாக ஒதுங்கியிருப்பார்கள். அவர்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவர் உயர்ந்த சிந்தனைவாதியாக இருப்பார். எனினும், ஏதேனும் ஒருவகையில் பணப்பற்றாக்குறை இருக்கும்.

மிளகைவிடவும் சற்றுப் பெரிதான அளவில் மச்சம் அமைந்திருக்கிறது எனில், அந்த அன்பர்கள் ஏதேனும் ஒரு துறையில் அறிஞர்களாகவோ மேதைகளாகவோ திகழ்வார்கள். சிலர், மகான்களாகவும் மிளிர்வார்கள். இவர்கள், சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.

ஒருவருக்குக் கொட்டைப் பாக்கு அளவு மச்சம் இருப்பின், அவர் புரட்சிகர சிந்தனைகள் மிகுந்தவராக இருப்பார். பிறரின் கண்டிப்பும் எதிர்ப்பும் இவர்களின் லட்சியத்தை எதுவும் செய்ய இயலாது.

- சம்ஹிதா