Published:Updated:

உத்தியோகத்தில் உயர்வு... தொழிலில் மேன்மை... உங்களுக்கு எப்படி?

தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்

ஜோதிடர் செய்யனூர் ரா.சுப்பிரமணியன்

த்தியோகம் - தொழில் யோகம், வருமான வாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான காலம் இது. தற்காலத்தில் படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் படிப்புக்கு ஏற்ற வேலைக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், தற்போதைய சூழலில் பெருந்தொற்றின் பாதிப்பால் புதிய வேலையைத் தேட வேண்டிய நிலையிலும், நலிவடைந்துபோன தங்களின் வியாபாரத்தை மீண்டும் நிமிர்த்த வேண்டிய நிலையிலும் பலரும் உள்ளார்கள்.

உத்தியோகத்தில் உயர்வு, நல்ல வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் லாபம்... இவை நல்லபடியாக அமையவேண்டும் எனில் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் பலம்பெற்றுத் திகழவேண்டும். ஜாதகத்தில் 10-ம் இடமே ஜீவன ஸ்தானம் ஆகும். அந்த இடத்துக்கு அதிபதியான கிரகம், அந்த ஜாதகருக்கான தொழில் அல்லது வேலை அமைவதில் முக்கிய பங்காற்றும். இதுபற்றி விரிவாகக் காண்போம்.

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் 10-ம் இடம் தொழில் அல்லது ஜீவன ஸ்தானம். அதன் பதிபதியை ஜீவனாதிபதி என்கின்றன ஜோதிட நூல்கள். இந்தக் கிரகத்தின் நிலையைக் கொண்டு ஒருவருக்கு என்னமாதிரியான தொழில் அல்லது உத்தி யோகம் அமையும் என்பதைக் கணிக்கலாம்.

நாடிக் கிரந்தங்கள் கூறும் விளக்கம் ஒன்று உண்டு. அதன்படி ஜீவன ஸ்தானமாகிய 10-ம் வீட்டின் அதிபதிக் கிரகம் நிற்கும் நட்சத் திரத்தையும் (சாரம்) கவனத்தில்கொள்ள வேண்டும். ஆக, ஜீவன ஸ்தானத்தின் அதிபதிக் கிரகம், அந்தக் கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் அதிபதிக் கிரகம் ஆகியவற்றின் தன்மையே ஒருவரது ஜீவனத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உதாரண விளக்கத்தைப் பார்த்தால் இன்னும் எளிமையாகப் புரியும். ஜாதகர் ஒருவரின் லக்னம் விருச்சிகம். அவரது ஜாதகத்தில் பத்தாம் இடம் சிம்மம். இதுவே ஜீவன ஸ்தானம். சிம்மத்தின் அதிபதி சூரியன். இவர் இந்த ஜாதகத்தில் நிற்கும் இடம், சுப வீடான கடகம் (லக்னத்திலிருந்து 9-ம் வீடு). புனர்பூசத்துக்கான அதிபதி குரு. இந்த ஜாதகப்படி, லக்னத்துக்குக் குரு யோகக்காரகர். இந்த ஜாதகர், தான் சார்ந்திருக்கும் துறையில் உயர்பதவியில் சிறப்புற்றுத் திகழ்வார்.

உத்தியோகத்தில் உயர்வு... தொழிலில் மேன்மை... உங்களுக்கு எப்படி?

ஆக இந்த ஜாதகத்தில் பத்தாம் இடத்து அதிபதி கிரகமும் (சூரியன்), அவர் நிற்கும் நட்சத்திரத்து அதிபதி கிரகமும் (குரு) நல்ல நிலையில் இருப்பதால், நல்ல வேலை வாய்ப்பும் அதில் உயர்ந்த நிலையும் அடையலாம் என்பது பலன் விளக்கம். இந்த வகையில் ஜாதகத்தில் ஜீவன - நட்சத்திர அதிபதிகளாக என்னென்ன கிரகங்கள் அமைந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இனி பார்ப்போம்.

சூரியன்: அரசு வேலை அல்லது அரசாங்கம் தொடர்பான வேலை, மருத்துவம், தந்தை வழியில் தொழில் நடத்துதல், பொன், வெள்ளி, ரத்தினக் கற்கள் விற்பனை, அதிகாரம் - அந்தஸ்து உள்ள தலைமைப் பொறுப்பு வாய்க்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சந்திரன்: கற்பனை வளம் கொண்ட எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர் என ஜாதகர் திகழ்வார். மருத்துவப் பொருள்கள், விவசாயம், தாய்வழி தொழில் நடத்தும் யோகம் ஆகியவை அமையவும் வாய்ப்பு உண்டு.

செவ்வாய்: வீரதீரச் செயல்களில் ஈடுபடக் கூடிய வேலை - ராணுவம், காவல்துறை, விமானி, கணினித் துறை, பொறியியல், ரியல்எஸ்டேட், அறுவை சிகிச்சை ஆகியவை சார்ந்த தொழிலோ, வேலையோ அமையும்.

புதன்: கல்வித் துறை, ஆசிரியர் பணி, விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர், வான சாஸ்திர நிபுணர், ஜோதிடர், சிற்பம் - ஓவியக் கலை, புத்தக வியாபாரம், செய்தி-ஒளிபரப்புத் துறை ஆகியவை சார்ந்த பணி அல்லது வேலை அமையும்.

குரு: அதிகாரம் வாய்ந்த வேலை அமையும். வங்கி, தபால்துறை, நீதித் துறை, மதத் தலைவர் அல்லது போதகர், பண்டிதர் ஆகிய பணிகள் அமையலாம். இவை சார்ந்த தொழிலும் மேன்மை தரும்.

சுக்கிரன்: கலைத்துறையில் உயர்வு கிடைக் கும். சினிமா, டி.வி., நாடகம், ஓவியம், சங்கீதம், வாகனப் பணிகள், வாசனைத்திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், அலங்காரம், உணவுப் பொருள்கள் சார்ந்த தொழில் அமையும். இந்தத் துறைகளில் பணி அமைந்தால் முன்னேற்றம் காணலாம்.

சனி: கடின உழைப்பைத் தரும். கட்டடம் அல்லது சுரங்கம் சார்ந்த பணி அமையும். கட்டட மேஸ்திரி, நில ஆராய்ச்சி, எண்ணெய், இரும்பு வியாபாரம் விவசாயப் பணிகள் அமையும். ஜீவனத்தைத் தீர்மானிக்கும் கிரகமாக சனி அமைந்த ஜாதகர்கள் தத்துவமேதையாக விளங்கும் வாய்ப்பும் உண்டு.

ராகு: ஜீவனத்தைத் தீர்மானிக்கும் கிரகமாக ராகு அமையப் பெற்றால் சகலவிதமான தொழில்களிலும் ஜாதகர் ஈடுபடுவார். குறிப்பாகக் கணிதம், பெளதிகம், ஆராய்ச்சி-கண்டுபிடிப்பு, பத்திரிகைத் துறை, பொறி யியல், மெடிக்கல் துறைகளில் மேன்மை உண்டாகும்.

கேது: சட்டம், நீதித் துறை, மருத்துவம், அரசியல் மற்றும் மருந்து சார்ந்த தொழில் அல்லது வேலை அமையும்.

மொத்தத்தில் அவரவர் ஜாதகத்தில் ஜீவனஸ்தானத்தின் நிலை, ஜீவனத்தைத் தீர்மானிக்கும் கிரகங்களின் அமைப்பு நிலை ஆகியவற்றைத் துல்லியமாக ஆராய்ந்து, அதற்கேற்ப முயற்சி செய்தால், வாழ்வில் வெற்றி பெறலாம்.