Published:Updated:

சுக்கிரனால் சுபயோகம் வேண்டுமா?

சுக்கிரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுக்கிரன்

சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி.

சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால் ஏழ்மையில் தள்ளுவான். வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச்செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்கவைத்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான்.

பூமியிலிருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும் பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் என்னும் வரிசையில் ஓடு பாதைகளும் இருக்கும்.

ராசிச் சக்கரத்திலும் சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில் புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும் பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும் பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பக்கத்து வீட்டு புதன் - விவேகத்துடனும் மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய்- சுறுசுறுப்புடனும் நம்மை இயங்கவைப்பார்கள். புதனின் சேர்க்கையால் விவேகமும் கலப்பதால் செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வாயுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலைதூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி. அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி செயல்படும் தகுதியை இழக்க நேரிடும்.

சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித் தன்மையை இழந்துவிடுவான் சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை’ என்கிறார் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம். ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலைகளும் அவனால் ஏற்படுபவையே. மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச்செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித் தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால் விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒருங்கே கிடைப்பது அரிது. அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் என்னும் கருத்தை உணர்த்துகிறான் சுக்கிரன்!

சுக்கிரன், களத்திர காரகனாகவும் விவாக காரகனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு, இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருள்களில் ஈர்ப்பு, புதிய பொருள்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன். அழகிலும் அழகிய பொருள்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன்.

கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தானமாக அமைந்தால் பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால் தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; அதையும் காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான்.

இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்திய சுகத்தைத் தந்து விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4-லும் 8-லும் பாப கிரகம் இருக்க... ‘சதுரச்ர’ தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.

விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். ‘காரகன்’ என்றால், நடைமுறைப்படுத்த வேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில் தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான்.

லக்னத்திலிருந்து 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்குவான். 7-ம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான்.

சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டி விடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பான்.

மகர லக்னம் துலாத்தில் சுக்கிரன்; துலாம் 10-ம் வீடு; அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும்... சிம்ம லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன்; ரிஷபம் 10-ம் வீடு; அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக்குறையை உண்டுபண்ணுவான்.

சுப கிரகங்களோடும் அவற்றின் பார்வை பட்டும் சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவ தும் இன்பமயமாக வாழலாம்.

கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால், சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக் கொண்டு பலனை அளிப்பான்.

இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால் இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர்.

சுக்கிரன்
சுக்கிரன்

தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2, 7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்கவைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக்கொண்டிருக்கிறான் சுக்கிரன்.

ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு ‘சுக்கிரம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை. சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத்தமே! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக்காட்டு.

இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு வாழ்வில் நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடுபாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச்செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும் இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண...).

சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மை யானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக்காட்டும். அதாவது, கிராமச்சூழலிலும் (ரிஷப ராசி) நகரச்சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.

சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. ‘சுக்கிர சாந்தி’ என விரிவான வழிபாட்டை `சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். ‘சும் சுக்ராயநம:’ என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என `மந்திர மஹோததி’ சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை ‘சும் சுக்ராய நம:’ எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும்.

‘பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்

ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்’

- என்னும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்கி வழிபடுங்கள்; வாழ்வு வளம் பெறும்.

(14.6.2011 இதழிலிருந்து...)

சில எளிய பரிகார முறைகள்...

னுதினமும் ஸ்ரீதுர்கையை வணங்கி வழிபட வேண்டும்.

ஸ்ரீலட்சுமிதேவியே சுக்கிரனுக்கு அதி தேவதை ஆகிறாள். அவள் விஷ்ணுவின் மனைவி. பூமியாகவும், செல்வமாகவும், பெண்மையாகவும், மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் என அவளே எல்லாமுமாகவும் இருக்கிறாள். ஆகவே, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால் நன்மைகள் பெறலாம்.

பட்டாடைகள், தயிர், பாலாடைக் கட்டி, வாசனைப் பொருள்கள், சர்க்கரை, பசுஞ்சாணம், சூடம், ஆடைகள்... இவற்றை ஏழைப் பெண்ணுக்கு வெள்ளியன்று, மாலை வேளையில் தானம் செய்யலாம்.

மேலும் குதிரை, சந்தனக்கட்டை, தங்கம், அரிசி, நிலங்கள் ஆகியவற்றையும் தானம் செய்யலாம். இதனால் சுக்ரபகவானின் திருவருளைப் பெற்றுச் சிறக்கலாம்.

- சுப்ரமணியம், சென்னை-44