Published:Updated:

மருத்துவ சிகிச்சைக்கும் நாள் நட்சத்திரம் உண்டா?

மருத்துவ சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ சிகிச்சை

? குளிகன், எமகண்டம் ஆகியவற்றை உபகிரகங்கள் எனச் சொல்கிறார், ஜோதிடர் ஒருவர். உபகிரகங்கள் மொத்தம் எத்தனை, நவகிரகங்களைப் போல் உப கிரகங்களும் பலாபலன்கள் வழங்குமா? -அ.வ.சுந்தரராஜன், காரைக்குடி

! சூரியன் முதலான நவகிரகங்களோடு உப கிரகங்கள் குறித்தும் பல தகவல்களை ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. உபகிரகங்கள் ஒன்பது. அவை: குளிகன், எமகண்டகன், அர்த்தபிரஹரணன், காலன், தூமம், வியதிபாதன், இந்திர தனுசு, உபகேது மற்றும் பரிவேடன்.

தூமம் என்பது புகைப்படலமாகவும், வியதிபாதன் - எரிகற்கள் மற்றும் எரிநட்சத்திரங்களாகவும், பரிவேடன் என்பது சூரியன் மற்றும் சந்திரனை சுற்றிக் காணப்படும் வளையமாகவும், இந்திர தனுசு என்பது வானவில்லாகவும், உபகேது என்பது கேதுவின் தோற்றத்துடனும் திகழும் எனும் குறிப்புகள் உண்டு.

மருத்துவ சிகிச்சைக்கும் நாள் நட்சத்திரம் உண்டா?

குளிகனின் சேர்க்கை அசுபத்தையும் எமகண்டனின் சேர்க்கை சுபத்தையும் நல்கும் என்பது பொதுவான கருத்து. அதேபோல், காலன் எனும் உபகிரகம் ராகுவைப் போன்று பலன் தரும். அர்த்தபிரஹரணன் நல்ல நிலையிலிருக்கும்போது நன்மையையும் தீய இடங்களில் இருக்கும்போது தீமையும் தரும். இந்தத் தகவல்களை `ஜாதக பாரிஜாதம்’ எனும் நூல் விளக்குகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? சில நாள்களுக்குமுன் விரும்பத் தகாத கனவு ஒன்றைக் கண்டேன். ஆனால், `கனவு கண்டது பகலில் தூங்கும் போது என்பதால், அந்தக் கனவு பலிக்காது; கவலை வேண்டாம்’ என்கிறார்கள் நண்பர்கள். பகல் கனவு பலிக்காதா?

- கே.சேதுராமன், களக்காடு

! பொதுவாக பகலில் காணும் கனவுகள் பலிக்காது என்பார்கள். பகலில் தூங்கக் கூடாது என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை!

1. பகல் நேரத்தில் காணும் கனவுகள்.

2. காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள்.

3. நீண்ட நேரம் தொடர்ச்சியாகக் காணும் கனவுகள்.

4. நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள்.

இப்படியான கனவுகள் பலிக்காது. அதேநேரம், அதிகாலைப் பொழுதில் காணும் தெளிவான கனவுகள் அடுத்து வரும் நாள்களில் பலிக்கும்.கனவுகள் கண்டபிறகு, மறுபடியும் தூங்கி விட்டால் கனவின் பலன் குறைவு. கெட்ட கனவுக்குப் பின்னர் நல்ல கனவு வந்தாலும்கூட கெட்ட கனவுகள் பலிக்கும் என்பார்கள்.

இப்படி, தீய கனவுகள் கண்டால் தானம், வழிபாடு, மந்திர ஜபம், யாகம், தியானம் போன்றவற்றைச் செய்து, வரப்போகும் கெடுபலனைக் குறைக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? முற்காலத்தில், ஒருவர் நோய்வாய்ப்பட்ட நாள் - நட்சத்திரத்தைக் கணித்தே, அந்த நோய் குணமாகுமா இல்லையா என்பதைக் கூறுவார்களாமே... மருத்துவத் திலும் ஜோதிடத்தின் பங்களிப்பு உண்டா?

- ரேணுகா சிவராமன், மதுரை-3

!நவீன காலத்தில் பலவிதமான அறிவியல் இயந்திரங்களின் உதவியோடு நோய்களைப் பற்றி அறிந்து மருத்துவம் செய்கிறார்கள். ஆனால், இப்படியான எந்தவித வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், நம் ரிஷிகள் தவம் எனும் சீரிய சக்தியால் நவகோள்களையும் சாட்சியாக்கி, மனிதனுக்கு உண்டாகும் நோய் முதலான அத்தனை பாதிப்புகளையும், அவற்றை குணமாக்குவதற்கான காலநேரத்தையும், வழிமுறைகளையும் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது வியப்புக்கு உரியது. மருத்துவ சிகிச்சையோடு தொடர்புடைய ஜோதிடத் தகவல்கள் நம்முடைய பழைமையான நூல்களில் உள்ளன.

1. பாவத்தில் உள்ள கிரகம்.

2. பாவாதிபதி.

3. பாவத்தைப் பார்க்கும் பிற கிரகங்கள்.

4. பாவாதிபதியைப் பார்க்கும் பிற கிரகங்கள்.

5. 6-ம் பாவத்தின் இயற்கை காரகர்களாகிய சனி மற்றும் செவ்வாயின் நிலை.

6. லக்னத்தின் பலம் மற்றும் பலவீனம்.

7. லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனம்.

8. லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு இருபுறமும் அசுபர் இருக்க `பாவகர்த்தரி யோகம்’ ஏற்பட்டு இருத்தல்.

9. சந்திரனின் நிலை.

10. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் அசுபர்.

இப்படியான ஜோதிடக் கூறுகளைக் கணித்து, அதற்கேற்ப பலன் சொல்வார்கள்; மருத்துவ சிகிச்சைகளும் கொடுக்கப்படும்.

அதேபோல், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர், தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்களையும் குறிப்பிடுகின்றன ஜோதிட நூல்கள். அவை: அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய 16 நட்சத்திரங்கள் உகந்தவை.

? சமீபத்தில் ஜோதிடர் ஒருவர், `உங்கள் மகனுக்குச் சுக்ரதோஷம் உள்ளது; பரிகாரம் செய்யவேண்டும்’ என்கிறார். பொதுவாக, சுக்ரன் யோக வாழ்வு அருள்பவர் என்றுதானே கூறுவார்கள். அவரால் தோஷமும் ஏற்படுமா?

- கே.ராமலட்சுமி, வள்ளியூர்

! சகலவிதமான சுகபோகங்களையும் கொடுப்பவர் சுக்கிரன். அதேநேரம், சுக்கிரன் இருக்கும் இடம், உடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து சிலருக்கு மோசமான பலன்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக, சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும். இதைப் போக்குவதற்கு நவக்கிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்யவேண்டும். இதற்குப் பெயர் ‘சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும், சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை; எந்தப் பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.

- பதில்கள் தொடரும்....

விகாரி வருட - சந்திர கிரகணம்

னி மாதம் 31 (16/17-7-19) செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில், சந்திர கிரகணம் சம்பவிக்கிறது - சோமோபராக புண்ணிய காலம். 3/4 கேது கிரஸ்தம் உத்திரகோளம்.

ஸ்பரிசம்: இரவு நாழிகை 49:02 வினாடி (இரவு 1:37)

மத்யமம்: இரவு நாழிகை 52:38 வினாடி (இரவு 3:03)

மோக்ஷம்: இரவு நாழிகை 56:12 வினாடி (இரவு 4:29)

16.7.19 அன்று மதியம் மூன்று மணிக்குள் போஜனம் செய்யவேண்டும். உத்திராட நட்சத்திரக்காரர்கள் கிரகணப் பரிகாரம் செய்யவேண்டும். பூராடம், திருவோணம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் கிரகண சாந்தி செய்யவேண்டும்.

கிரகண காலத்தில் சொல்லவேண்டிய ஸ்லோகம்

யோஸெள வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மத:

ஸஹஸ்ரநயன: சந்த்ர க்ரஹபீடாம் வ்யபோஹது

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com