Published:Updated:

கேள்வி - பதில்: ‘மனை வாங்கும் முயற்சி பலன் தருமா?’

நீங்கள் சொல்வது சரியே. பொதுவாக 4-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் ஆகியவை தாமாகவே அமைந்துவிடும்.

பிரீமியம் ஸ்டோரி

? எனது லக்னம் மீனம். லக்னத்திலிருந்து 4-ல் சுக்ரன் இருப்பதால், சொந்த வீடு யோகம் உண்டு என்கிறார் ஜோதிடர் ஒருவர். ஆனாலும் வீடு வாங்கும் முயற்சியில் தொடர்ந்து தடைகள் உண்டாகின்றன, ஏன்?

- கே.கோகுலகிருஷ்ணன், ஆரணி

நீங்கள் சொல்வது சரியே. பொதுவாக 4-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் ஆகியவை தாமாகவே அமைந்துவிடும். ஒருவேளை வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும். அதேபோல், 4-ல் சுக்ரன் அமையப்பெற்ற ஜாதகர்களுக்கு, எத்தகைய அமைப்புள்ள வீடும் துன்பம் தராது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

உங்கள் ஜாதகத்துக்கு வருவோம். மீன லக்னம். லக்னத்துக்கு 4-ம் வீட்டுக்கு உரிய புதன் 7-ல் அமைந்துள்ளார். எனவே, சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும். ஆனாலும் குறிப்பிட்ட ஒரு ஜோதிட விதியைச் சொல்லியாக வேண்டும். அதாவது தனுசு, மீனம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும், 4-ல் சுக்கிரன் இருந்து, நல்ல வீடுவாசல் அமைந் தாலும், வீட்டில் அமைதிக் குறைவு காணப்படும். ஆகவேதான் முயற்சியில் தடைகள் உண்டகின்றன.

இதற்கு வாஸ்து சாஸ்திரம் பயன்படாது. நீங்கள் மீன லக்னத்தில் பிறந்திருப்பதால், சுக்ர ப்ரீத்திக்குரிய பரிகாரம் செய்யலாம்.

வெள்ளிக் கிழமைகளில், அருகிலுள்ள பெருமாள் ஆலயங் களுக்குச் சென்று, அங்கு அருளும் தாயாருக்கு மலர்மாலைகள் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். விரைவில் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.

கேள்வி - பதில்: ‘மனை வாங்கும் முயற்சி பலன் தருமா?’

? எங்கள் மனையில் நீரோட்டம் பார்க்க சென்றோம். பழைய முறைப்படி நீரோட்டம் காணும் ஒருவரை நண்பர் அழைத்து வந்திருந்தார். அந்த நபர் மனையில் புற்று ஒன்றைக் கண்டதுமே, நீர் வளம் மிக்க இடம் என்று கூறிவிட்டார். அவர் கூறியதை ஏற்கலாமா?

-எம்.பாலமுருகன், தேனி

முற்காலத்தில் குறிப்பிட்ட வடிவம் கொண்ட குச்சிகள் அல்லது கம்பிகள் கொண்டு நிலத்தடி நீர் குறித்து அறிந்து சொல்வார்கள். அவர்களில் சிலரிடம் தெய்வ சக்தி மிகுந்து இருப்பதாகவும் நம்பிக்கை உண்டு. புற்றுகளைக் கொண்டும் நீரோட்ட வளத்தை நம் முன்னோர் அறிந்துள் ளார்கள். இதுபற்றி கூவ சாத்திரம் விளக்குகிறது.

கொண்டை இடப்பட்ட பெண்களின் கூந்தல் போன்று நீண்டு உயரமாக இருக்கும் புற்று, கொடிப் புற்று ஆகும். அதன் கீழ் சுமார் 20 அடி ஆழம் தோண்டினால் நீர் பெருகும்; மேலும் 5 அடி தோண்டினால் நிலத்தடியில் பெரிய ஓடையே பாய்வதை அறியலாம் என்றும் தகவல் உண்டு.

உருண்டையான அமைப்பில் தாழ்ந்து அமைந்துள்ள புற்று, பிட்டான் புற்று எனப்படும். அது இருக்கும் இடத்தில் கிணறு வெட்டினால், சுமார் 16 சாண் அளவு ஆழத்திலேயே நீர் கிடைக்கும். பெரிய துளைகளுடனும் கூம்புகளுடன் திகழும் புற்று ‘ஆயிலைப் புற்று’ ஆகும். இதில் கரையான்கள் மொய்த்தவண்ணம் இருக்கும். இந்த இடத்தில் 12 சாண் அளவு ஆழத்திலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும் என்கிறது கூவசாத்திரம்.

? என் மகன் ஜாதகப்படி களத்திர காரகன் சுக்கிரன் 3-ல் உச்சம் பெற்றிருக்கிறார். இந்தத் தருணத்தில் பெண் பார்க்கலாமா? ஏற்கெனவே, ஒன்றிரண்டு முயற்சிகள் தடைப் பட்டுவிட்டன. கிரக பாதிப்புகள் ஏதேனும் உள்ளனவா... விளக்குங்களேன்.

- கா.பரமேஸ்வரன், கோவை-1

நீங்கள் குறிப்பிடுவது போல், மகன் ஜாதகத்தில் களத்திரக் காரகனான சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறார். என்றாலும், களத்திர ஸ்தானத்துக்கு உரிய சந்திரன், சுக்கிரனுடன் சேர்ந்திருக்கிறார். ஆகவே, திருமண முயற்சிகளில் தடை ஏற்படு கிறது. நீங்கள் தக்க ஜோதிடரிடம் ஆலோசித்து உரிய பரிகாரம் செய்வதன் மூலம், தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.

மேலும், ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்துக்கு உரிய செவ்வாய் 12-ல் மறைவு பெற்றிருப்பதும் இல்லற வாழ்க்கை அமைவதற்கு ஒரு தடையாக உள்ளது.

அவரை அனுதினமும் முருகப்பெருமானை வழிபடச் சொல்லுங்கள்; விரைவில் நல்லது நடக்கும். வரும் கந்த சஷ்டி தினத்தில் முறைப்படி விரதம் இருந்து, சஷ்டிக் கவசம் படித்து கந்தக் கடவுளை வழிபடுச் சொல்லுங்கள். விரத பலன்கள் நன்மைகளை அளிக்கும். கந்தன் திருவருளால் கல்யாணம் விரைவில் கூடிவரும்.

? புது முயற்சி ஒன்றின் பொருட்டு பிரச்னம் பார்க்கவுள்ளோம். பிரச்னம் பார்க்கும் போது அதற்கான இடம் தகுந்ததாக இருக்க வேண்டும் என்கிறார் முதியவர் ஒருவர். எந்தெந்த இடங்களில் வைத்து பிரச்னம் பார்க்கலாம்?

- சி.முருகேசன், திருச்சி-3

உண்மைதான். பிரச்னம் மூலம் தீர்வு வேண்டி கேள்வி கேட்கப்படும் இடங்கள், மனத்துக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தருவனவாக இருக்க வேண்டும்.

அடர்ந்த கானகம், ஆள்கள் வசிக்காத வீடுகள், நீர் அருகிலுள்ள இடங்கள் ஆகியவற்றை அவசியம் தவிர்க்கவேண்டும்.

பூக்களும், கனிகளும் நிரம்பிய மரங்கள் உள்ள பகுதிகள், தங்கம் நவமணிகள் நிரம்பிய இடம், பசுஞ்சாணம் மெழுகி தூய்மைப்படுத்தப்பட்ட இடங்கள், மங்கலம் நிரம்பிய மந்திரம் ஒலிக்கும் ஸ்தலங்கள்... இப்படியான இடங்களில் வைத்து பிரச்னம் கேட்கலாம்.

- பதில்கள் தொடரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு