திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

வாஸ்து ஹோமத்துக்கு என்னென்ன மந்திரங்கள்?

வாஸ்து பகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
வாஸ்து பகவான்

வாஸ்து பகவானை முன்னிட்டு பஞ்சபூதங்களையும் திருப்தி அடையச் செய்கிறோம் என்பதே இந்த வாஸ்து பூஜையின் முக்கியமான அம்சம்.

? வாஸ்து ஹோமம் செய்யும்போது என்னென்ன மந்திரங்கள், எந்த தேவதைக்கான துதிகளைக் கூறி வணங்க வேண்டும்?

- கே. சந்தானமூர்த்தி, கடையம்

! வாஸ்துவுக்கான பிரதான ஹோமத்துக் கென நான்கு மந்திரங்கள் இருக் கின்றன. ஒவ்வொன்றையும் தலா நான்கு முறை சொல்லி வணங்க வேண்டும் என்கிறது மந்திர சாஸ்திரம்.

‘நீதான் இந்தப் பூமியின் புதல்வனாக விளங்குகிறாய். பூமி முழுவதும் நிரம்பி இருக்கிறாய். எனவே, நான் செய்யும் இந்தப் பூமி பூஜையினாலும், வாஸ்து பூஜையினாலும், வாஸ்து சாந்தியினாலும், திக்பாலக பூஜைகளாலும் நீ திருப்தி அடைந்து என் வீட்டில் வாழப்போகும் இரண்டு கால் உடையவர்களையும் நான்கு கால் உடையவற்றையும் (மனிதர்களையும் கால்நடை செல்வங்களையும்) நன்றாக வாழவைக்க வேண்டும். `ஸ்தோஸ்பதய இதம் ந மம...' அதாவது, இவை என்னுடையவை அல்ல’ என்று சொல்லி வழிபடுவர். `என்னுடையது அல்ல’ என்னும்போதே அது ‘உன்னுடையது' என்று சொல்வதாக அர்த்தம்.

இங்ஙனம் வாஸ்து பகவானை முன்னிட்டு பஞ்சபூதங்களையும் திருப்தி அடையச் செய்கிறோம் என்பதே இந்த வாஸ்து பூஜையின் முக்கியமான அம்சம்.

நிலத்துக்கு பூமி பூஜை செய்கிறோம். ஆகாயத்துக்கு அதிபதி பிரம்மா. அந்த பிரம்மாவுக்கு வீட்டின் மையத்தில் பூஜை போடுகிறோம். நீர்க் கடவுளாகிய வருணனுக்கு மேற்குப் பக்கத்தில் பலி சமர்ப்பிப்போம். அடுத்து அக்னி பகவானுக்கு, அக்னி மூலையில் பலி சமர்ப்பணம். வாயுவுக்கும் பலி உண்டு. இப்படி பஞ்ச பூதங்களுக்கும் பூஜை, புனஸ்காரம் செய்து வழிபடுகிறோம்.

வாஸ்து பகவான்
வாஸ்து பகவான்

உலகத்தைப் பொறுத்தவரை பஞ்சபூதங் களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ரிக் வேதம், அக்னி வழிபாட்டுடன்தான் தொடங்குகிறது. எனினும், பஞ்சபூதங்களையும் ரிக் வேதம் பிரதானமாகக் குறிப்பிடுகிறது. அக்னிக்கு ஏராளமான மந்திரங்களும் அதற்கு அடுத்தபடியாக ஜலம், வாயு, ஆகாசம், பூமி என்கிற பூதங்களுக்கும் மந்திரங்கள் இருக்கின்றன. மற்ற தெய்வங்களும் தேவதைகளும் யஜுர் வேத காலத்திலிருந்தே சொல்லப்படுகின்றன.

எனவே, பஞ்சபூதங்களைத் திருப்திப் படுத்தும் வாஸ்து பூஜை முக்கியமாகிறது. வாஸ்து பூஜையின் இரண்டாவது மந்திரமாக, ‘இந்த வீட்டில் வசிக்கப்போகிறவர்கள் எல்லோரும் உன் பார்வையிலேயே நிரந்தரமாக இருந்து நலமாகவும் மகிழ்ச்சியோடும் விளங்க வேண்டும். அவர்களுக்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் ஆரோக்கியத்தையும் நீ வழங்க வேண்டும்’ என்று வேண்டுகிறோம்.

முற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் பசுக்களை வளர்ப்பார்கள். அந்தக் காலத்தில் ஒருவர் எவ்வளவு மாடுகள் வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது செல்வ வளம் தீர்மானிக்கப்படும். இந்தக் காலத்திலும்கூட மாடு 10,000, 15,000 ரூபாய் என்று விலை போகிறது. இப்போதும் மாடு வைத்திருப்பவர் செல்வந்தர்தான். இதைக் குறிக்கும் விதத்தில் மூன்றாவது மந்திரத்தில் ‘வீட்டில் இருக்கும் பசுக்களும் குதிரைகளும் தகப்பன் பிள்ளை உறவு போன்ற நட்போடு விளங்க அருள் செய். அதற்கான ஆகுதியை இதோ தருகிறேன்’ என்று சொல்கிறோம். இது வாஸ்துவுக்கு நாம் கொடுப்பதை அவரிடமே பதிவு செய்கிற விஷயம். ஏதோ நாம் செய்தோம், அது போகிற போக்கில் அப்படியே காற்றோடு போய்விடக் கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் மந்திரம் இது.

அடுத்ததாக, ‘இந்த பூமியிலேயே பெரிய அரக்கனாக வந்து விட்டாய். உனக்கு அடிபணிந்து போகவே விரும்புகிறேன். நாம் நட்புடையவர்களா கவே இருப்போம். அதனால் எங்களுக்கு நல்லதைக் கொடுப்பாயாக’ என்பது நான்காவது மந்திரம். இவை வேத மந்திரங்கள். இவற்றை குரு மூலமாக கற்க வேண்டும் என்பதால், மூல மந்திரங்களை இங்கே கொடுக்கவில்லை.

இந்த நான்கு மந்திரங்களையும் தலா நான்கு முறை சொல்லி செய்யும் ஹோமங்கள்தான் பதினாறு பிரதான ஹோமங்கள். ஹோமம் முடிப்பதற்காகச் செய்யப்படுவது ஜெயாதி ஹோமம். இது யஜுர் வேதத்தில் இருக்கிறது. எந்தக் காரியத்திலும் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இதை செய்கிறோம்.

இப்போது, ‘அஷ்டதிக் பாலகர்கள், வாஸ்து புருஷன், பஞ்ச பூதங்கள் ஆகியவர்களுடன், கிரகங்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா’ என்று உங்கள் மனத்தில் கேள்வி எழும். ‘இருக்கிறது!’ என்பதுதான் பதில்.

சூரியனின் அதி தேவதை அக்னி. சனிக்கு - எமன். ராகுவுக்கு-நிருதி. சந்திரன் திக்பாலகராகவும் உள்ளார்; கிரகமாகவும் வீற்றிருக்கிறார். தண்ணீருக்கு - வருணன். ஈசானன் பிரதான தேவதை. ஈசான திசையில்தான் எல்லா தேவதைகளும் குடியிருக்கிறார்கள். அதனால்தான் பூஜை புனஸ்காரங்கள் அனைத்தும் ஈசான திசை நோக்கிச் செய்யப்படுகின்றன. வாஸ்து பூஜையும் ஈசான திசையில்தான் செய்யப்படும். முதல் கல்லை ஈசான திசையில் மட்டுமே வைப்பார்கள். புதனுக்கு அதி தேவதை விஷ்ணு. பிரகஸ்பதிக்கு அதிதேவதை பிரம்மா. இப்போது விளங்குகிறதல்லவா, அஷ்ட திக்பாலகர்கள்- பஞ்ச பூதங்கள்- ஈசான திசை- கிரகங்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு?

நவீன விஞ்ஞானத்தின்படி பூமியும் ஒரு கிரகம் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பூமிக்கு ஈர்ப்பு விசை உள்ளதால் வணங்க வேண்டும் என்று நம் முன்னோர் சொல்லிவைத்திருப்பதால் பூமியில் படுத்திருக்கும் வாஸ்து புருஷனின் உடலில் வீற்றிருக்கும் தேவர்களை வணங்கி ஆகுதி தருகிறோம்.

வாஸ்து
வாஸ்து

? கிரகப்பிரவேசம் செய்வதற்கு நல்ல நாள் பார்ப்பது அவசியம்தான். ஆனால், வீடு கட்ட தொடங்கும்போதும் நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்கிறார்களே... எந்த நட்சத்திரத்தில் வீடு கட்ட தொடங்கலாம்?

- எம்.பவித்ரா, தூத்துக்குடி

! ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம் (நல்லது).

புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை மத்திமம் (பரவாயில்லை). மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம் (கூடாது). அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை விசேஷமானவை. உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை மத்திமம். மற்றவை கூடாத ராசிகள்.

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய ஐந்து மாதங்களில் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது. ஆனால், இந்த மாதங்களில் வாஸ்து நாள்கள் வரும்போது தொழிற்சாலை கட்ட ஆரம்பிக்கலாம்.

அதேபோல் வீடு கட்டிமுடித்து கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியவை விசேஷமானவை. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்ற நட்சத்திரங்களில் கிரகப்பிரவேசம் செய்யக் கூடாது.

வைகாசி மாதம் மற்றும் ரிஷப ராசிக்குரிய நட்சத்திர நாள்கள் கிரகப்பிரவேசத் துக்கு மிகவும் விசேஷம்.

? வருடத்தின் எல்லா மாதங்களிலும் வீடு கட்டலாமா அல்லது குறிப்பிட்ட மாதங்களை விலக்க வேண்டுமா. அதேபோல் வாஸ்து நாள்கள் எப்போதும் மாறாது என்கிறார்களே... அது உண்மைதானா?

- எம். பரமசிவம், காரைக்குடி

! ஜோதிஷ பிரம்ம ரகசியம் என்ற நூலில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வீடு கட்டுவதால் உண்டாகும் பலன்களையும் குணக்கேடுகளையும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.

சித்திரை மாதத்தில் வீடு கட்டினால், சுகமாக இருக்கும். வைகாசியில் தனவிருத்தி உண்டாகும். ஆனியில் வீடு கட்டக் கூடாது.

ஆடியில் சுபத்தைக் கொடுக்கும். ஆவணியில் வீடு கட்டினால், வேலைக்காரர்களே இருக்க மாட்டார்கள். புரட்டாசியில் கட்டினால் வியாதி வரும். ஐப்பசியில் கட்டுவது விசேஷம். கார்த்திகையில் கட்டினால் நிறைய பணம் சேரும்.

மார்கழி மாதத்தில் கட்டக் கூடாது. கட்டினால், குடும்பத்துக்கே மோசம் வரும். தை மாதத்தில் கட்டினால், எண்ணியதெல்லாம் நிறைவேறும். மாசியில் கட்டினால் ரத்தினங்கள் சேரும். பங்குனியில் வீடுகட்டக் கூடாது.

வருடத்துக்கு ஸ்திரமான எட்டு வாஸ்து நாள்கள். இவை எப்போதும் மாறாதவை.

10-ம் தேதி சித்திரை: 8 - 9:30

21-ம் தேதி வைகாசி: 9:12 - 10:42

ஆனி: வாஸ்து நாள் கிடையாது.

11-ம் தேதி ஆடி: 6:48 - 8:18

6-ம் தேதி ஆவணி: 2:24 - 3:54 (மதியம்) இதில் வீடாக இல்லாத கோயில், தொழிற்சாலை முதலியவை கட்டலாம்.

புரட்டாசி: வாஸ்து நாள் கிடையாது.

11-ம் தேதி ஐப்பசி: 6:48 - 8:18

8-ம் தேதி கார்த்திகை: 10:00-11:30

மார்கழி: வாஸ்து நாள் கிடையாது.

12-ம் தேதி தை: 9:12 - 10:42

23-ம் தேதி மாசி: 9:12-10:42

பங்குனி: வாஸ்து நாள்கள் இல்லை.

? கிரகப்பிரவேசத்தின்போது அஷ்டம சுத்தி, கிரகயோகம் எல்லாம் பார்க்க வேண்டுமாமே..?

- கே.ஜெயந்தி, திருச்செந்தூர்

! எந்த முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம் செய்கிறோமோ, அதற்கு எட்டாவது வீட்டில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியவை இருக்கக் கூடாது. புதன் தனித்திருந்தால் தவறில்லை. சூரியன் அல்லது செவ்வாயுடன் சேர்ந்து இருக்கக் கூடாது. ராகு - கேதுவும் இருக்கக் கூடாது. இதையே அஷ்டம சுத்தி என்பார்கள். எந்த முகூர்த்தம் பார்த்தாலும் இந்த அஷ்டம ஸித்தியையும் பார்ப்பர்.

அடுத்து கிரகயோகம். அதாவது சொந்த வீட்டில் வசிக்கும் யோகம். ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால், வீடு அமையும். வீட்டு விஷயத்தில் செவ்வாய்க்கு முக்கியமான ஸ்தானம் உண்டு. செவ்வாய்தான் பூமி புத்திரன் ஆயிற்றே! வீடு கட்டும்போது செவ்வாய் புக்தி, செவ்வாய் இருக்கக் கூடிய இடம், செவ்வாயின் தசை ஆகியன கிரக யோகம் தரும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com