Published:Updated:

சகுனம், நிமித்தம் இரண்டும் வெவ்வேறு சாஸ்திரமா?

! `எதிர்பாராமல் நிகழ்வது சகுனம்; எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த பலனைக் குறிப்பால் உணர்த்துவது நிமித்தம் என்பார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

?திருமணம் தொடர்பான சில கேள்வி களுக்குப் பதிலளிக்கும்போது, சுயம்வர பார்வதி ஹோமம் செய்யும்படி நீங்கள் பரிந்துரைத்திருந்தீர்கள். பொருளாதாரச் சூழல் காரணமாக ஹோமம் செய்ய இயலாத வர்களுக்கு, வேறு பரிகாரம் உண்டா?

- ஆர்.ஹேமா பத்மநாபன், திருநெல்வேலி

! எதற்கும் நேரங்காலம் கூடி வர வேண்டும் என்பார்கள். அதுவும் திருமணம் கைகூடுவது என்பது நம் கையில் இல்லை. ‘இந்தப் பெண்ணுக்கு இவன்தான் மணமகன்’ என்பது என்றைக்கோ எழுதிவைத்த ஒன்றாக இருந்தாலும், அந்த வரனைக் கைப்பிடிக்க காலம், சூழல் எல்லாம் கனிந்து பொருந்தி வரவேண்டும்.

திருமண தாமதம் - தடைகளால் பாதிப்படைந்தவர்கள், திருமணமாகிக் கருத்து வேறுபாடுகளாலோ வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழும் கணவன்-மனைவி ஆகியோர் சுயம்வர பார்வதி ஹோமத்தைச் செய்யலாம்.

அதேபோல், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் இந்தச் சுயம்வர பார்வதி ஹோமத்தைச் செய்து தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

எவ்வளவு சிரத்தையோடு இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ, அந்த அளவுக்கு பலன் பெற முடியும். எனவே, மிகுந்த சிரத்தையோடு இதைச் செய்யவேண்டும். மட்டுமன்றி, வேதம், மந்திரம், கடவுள், வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை நிச்சயம் காப்பாற்றும்.

இந்தச் சுயம்வர பார்வதி ஹோமத்தை உரிய முறையில் செய்யுமளவு என்னிடம் போதிய பண வசதி இல்லை. முறைப்படி அந்தணர்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு உரிய தட்சணையைக் கொடுக்கக் கூட என்னால் இயலாது’ என்று சிலர் நினைக்கலாம். அதற்காகக் கலங்க வேண்டாம். இப்படிப்பட்டவர்கள், இந்த ஹோமத்துக்கான மூல மந்திரத்தை ஒருநிலைப்பட்ட மனதுடன் பூஜையறையில் அமர்ந்து ஜபித்து வந்தால் போதும். நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

அந்த மூல மந்திரம் இதோ:

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி

யோகேஸ்வரி யோகேஸ்வரி

யோக பயங்கரி யோக பயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய

முக ஹ்ருதயம் மம வசம்

ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா.

?என் உறவினரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவர் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உண்டா?

- மீனாக்ஷி சுந்தரம், சங்கரன்கோவில்

! பொதுவாக கிரக நிலைகளில் சூரியன் 1, 2 அல்லது 3-ம் இடத்திலும், சுக்கிரன் 5, 6 அல்லது 7-ம் இடத்திலும் இருந்தால் பிரிந்த மனைவி திரும்புவது கடினம்தான். சுக்கிரனைப் பொருத்தவரையில், ஜாதகத்தில் அவர் தன் வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகி மீண்டும் உதயமாகி இருந்தாலும் மனைவி திரும்பி வருவாள். தங்கள் உறவினரின் ஜாதகத்தில் சுக்கிரன் நிலையைக் கவனித்தால், பிரிந்துசென்ற அவரின் மனைவி வெகு விரைவில் திரும்பி வருவார். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்குச் சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து, நெய்விளக்கு ஏற்றிவைத்து, செவ்வரளி மலர்களால் அவளின் நாமாக்களைக் கூறி அர்ச்சித்து வழிபடச் சொல்லுங்கள். விரைவில் நல்லது நடக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

?சகுனம் - நிமித்தம் இரண்டும் வெவ்வேறா? `விரிச்சி சாஸ்திரம்’ என்றால் என்ன?

- மு.சண்முகவேல், சென்னை-74

! `எதிர்பாராமல் நிகழ்வது சகுனம்; எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த பலனைக் குறிப்பால் உணர்த்துவது நிமித்தம் என்பார்கள். தலைவனைப் பிரிந்த தலைவி அவனது வருகைக்காகக் காத்திருக்கிறாள். இந்த நிலையில், அவளது பிரிவுத் துயரை போக்குவது போன்று நன்னிமித்தமாகப் பல்லி ஒலி எழுப்பியதாம். அது அவளுக்கு ஆறுதல் தந்தது. அகநானூற்றுப் பாடல்களில் ஒன்றில் இப்படியான தகவல் காணக் கிடைக்கிறது.

இப்படிப் பல்லி, பறவையினங்கள் மூலம் நிமித்தம் கண்டது போன்று, விரிச்சி கேட்டல் என்ற வழக்கும் இருந்துள்ளது. ‘விரிச்சி’ என்பது நல்ல சொல்லைக் குறிக்கும். விரிச்சி கேட்போர் வீட்டில் உள்ள வயதான பெண்கள், ஊரின் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சொல்வார்கள். அல்லது தங்களின் வீட்டில் மணல் பரப்பிய பந்தலில் அவர்கள் அமர்ந்திருக்க, ஊரார் அங்கு வந்து விரிச்சி கேட்பது உண்டு.

மணி ஒலித்துக்கொண்டிருக்க, நாழியில் (முகத்தல் அளவை பாத்திரம்) நெல் இட்டு நீரும் ஊற்றி, சிறிது முல்லைப் பூக்களையும் போட்டு கையில் ஏந்திய வண்ணம் விரிச்சியை (அசரீரியை) எதிர்பார்த்து நிற்பர். அப்போது காதில் விழும் சொற்களைக் கொண்டு, செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை அறிந்தனர்.

சகுனம், நிமித்தம் இரண்டும் வெவ்வேறு சாஸ்திரமா?

விரிச்சி கேட்பது போன்றே `வேலன் கழங்கு குறிகேட்டல்’ எனும் வழக்கமும் நடைமுறையில் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன.

?ஜாதகத்தில் 10-ம் இடத்தில் சூரியன் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். 10-ல் சூரியன் இருந்தால், அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்கிறார் பெரியவர் ஒருவர். எனக்கு 10-ல் சூரியன்; அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா?

- செ.கோபிநாத், கோவை-2

! எந்தவொரு பலனுக்கும் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பார்த்துத் தெளிய வேண்டும். பொதுவாக ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசாங்கத்தில் மதிப்பு, அரசு வேலை ஆகியவை சாத்தியப்படும் என்பார்கள்.

ஜாதகத்தில் 10-ம் வீட்டில் சூரியன் அமைந்தி ருந்தால், மழலைச் செல்வம், வாகன வசதி, புகழ், புத்திசாலித்தனம், செல்வம், வலிமை, நற்பெயர், அரசனுக்குச் சமமான அந்தஸ்து ஆகியவை வாய்க்கும். என்றாலும் மற்ற கிரகங்களின் நிலைகளையும் துல்லியமாக ஆராய்ந்தே உரிய பலனைத் தெரிந்துகொள்ள முடியும்.

?சமீபத்தில் நண்பர் ஒருவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டா என்பதை அறிய ஜோதிடர் ஒருவரை அணுகினோம். அவர், சந்தான திதி நன்றாக இருப்பதால் குழந்தைப்பேறு நிச்சயம் உண்டு என்பதாக விளக்கினார். அதென்ன சந்தான திதி?

- கே.சங்கரநாராயணன், சென்னை-56

! திதிகளைத் தொடர்புபடுத்தி ஒருவரின் புத்திர பாக்கியம் எவ்வாறு அமையும் என்பதை விளக்குவதே `சந்தான திதி’ எனும் பகுதியாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமே திதி. அமாவாசையில் தொடங்கி அடுத்து வரும் 14 திதிநாள்கள் சுக்லபட்சம் - வளர்பிறை திதி நாள்கள் ஆகும். பெளர்ணமியில் தொடங்கி அடுத்து வரும் 14 நாள்கள் கிருஷ்ணபட்சம் - தேய்பிறை திதி நாள்கள் ஆகும்.

இந்தத் திதிநாள்களை குறிப்பிட்ட முறையில் கணக்கிட்டு சந்தான திதியைக் காண்பார்கள். அந்தத் திதி வளர்பிறையானால் குழந்தைப் பேறு உண்டு; தேய்பிறையானால் குழந்தை பிறப்பதில் தாமதம் அல்லது பாதிப்பு உண்டு என்று அறியலாம். மட்டுமன்றி சந்தான திதியாகக் கணக்கிடப் படும் திதியானது அமாவாசை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி, சஷ்டி, சதுர்த்தசி, துவாதசி என அமைந்தால் (இரு பட்சங்களிலும்) குழந்தைப் பேற்றில் பாதிப்பு உண்டு என்கின்றன ஜோதிட நூல்கள்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார், வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு