திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

`குழந்தைப்பேறு வாய்க்குமா?’

குழந்தைப்பேறு
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைப்பேறு

ஒருவருக்குத் திருமணம் நடைபெறுவதற்கு குரு பலம் அவசியம் என்பார்கள். ஆனால், திருமணம் நடைபெறுவதற்குக் கோசாரரீதியாகவும் சில விதிமுறைகள் உள்ளன.

? எங்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை இல்லை. பல பரிகாரங்களைச் செய்துவிட்டோம். ஜாதகப்படி, எங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?

- எஸ்.முருகன், பெங்களூரு

!உங்கள் ஜாதகத்தைத் துல்லியமாக ஆய்வு செய்து பார்த்ததில், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. நீங்கள் துலா லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். சூரியன் லாபஸ்தானத்தில் உள்ளார். சகல விதமான வசதி வாய்ப்புகளும் ஏற்படும்.

துலா லக்னத்தில் பிறந்திருக்கும் தங்கள் மனைவியின் ஜாதகத்தில், புத்திர ஸ்தானமான 5-ம் வீட்டில் புத்திரகாரகரான குரு இருப்பதால், குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படுகிறது. எனினும் குருவுடன் செவ்வாயும் சேர்ந்திருப்பதால் `குரு மங்கல யோகம்’ என்ற சிறப்பான யோகம் உள்ளது. எனவே, இரண்டு குழந்தைகள் பிறப்பதற்கான யோகம் உண்டு. சஷ்டி திதிகளில் விரதமிருந்து முருகனை வழிபடவும். வேறு பரிகாரம் எதுவும் தேவையில்லை.

? என் மகளுக்குத் திருமணம் தடைப் பட்டு வருகிறது. அவளின் ஜாதகப்படி திருமண யோகம் உண்டா, பரிகாரம் ஏதேனும் செய்யவேண்டுமா?

- ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை - 24

!ஒருவருக்குத் திருமணம் நடைபெறுவதற்கு குரு பலம் அவசியம் என்பார்கள். ஆனால், திருமணம் நடைபெறுவதற்குக் கோசாரரீதியாகவும் சில விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, களத்திர ஸ்தானத்துக்குரிய அதிபதியின் தசை அல்லது புக்தி நடைபெறும்போது திருமணம் நடைபெறும். ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசியில், கோசார சுக்கிரன் வரும்போதும் திருமணம் நடைபெறும்.

7-ம் வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருந்தால், திருமணம் நடைபெறுவதில் தடைகளும் தாமதமும் ஏற்படவே செய்யும். ஆனால், அந்த இடத்தில் இருக்கும் பாபகிரகங்களுக்குக் குருவின் பார்வை ஏற்பட்டிருந் தால் திருமணம் நடைபெறுவதில் தடை எதுவும் இருக்காது. உங்கள் மகள் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார். லக்னாதிபதி கும்பத்திலிருந்து, ஐந்தாம் பார்வையால் மிதுனத்தில் இருக்கும் கேதுவைப் பார்க்கிறார். எனவே, விரைவில் திருமணம் நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டு வருவது நல்லது.

? பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறேன். பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் ஓரளவேணும் நிவாரணம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

- பி.சிவசங்கர், சென்னை - 80

!ஜாதகத்தில் செல்வம் மற்றும் சுகங்களைக் குறிக்கும் பாவங்கள், 2-ம் இடம் என்னும் தன ஸ்தானமும் நான்காம் இடமான சுகஸ்தானமும் ஆகும். ஒருவருடைய வாழ்க்கை சுகமாக இருக்க வேண்டுமென்றால், இந்த இரண்டு ஸ்தானங்களும் சுபவலிமை பெற்றிருக்கவேண்டும். இந்த ஸ்தானங்களில் ராகு, கேது, செவ்வாய், சூரியன், சனி போன்ற அசுப கிரகங்கள் இருக்கக்கூடாது.

குழந்தைப்பேறு
குழந்தைப்பேறு

நீங்கள் கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். லக்னத்துக்கு 4-ம் இடமான கன்னியில் இருக்கும் ராகுவை, கும்ப குரு தன்னுடைய 9-ம் பார்வையால் பார்க்கிறார். தாங்கள் பொருளாதாரரீதியாக ஓரளவு முன்னேற்றம் காண வேண்டுமானால், வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள ஆலயத்துக் குச் சென்று துர்கை அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வரவும். விரைவில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.

? என் மகளின் திருமணம் தாமதம் ஆகிறது. பலரும் கடுமையான தோஷம் இருப்பதாகச் சொல்லி அச்சுறுத்து கிறார்கள். தாங்கள்தான் நல்ல வழி சொல்ல வேண்டும்.

- எஸ்.ஜானகி, வேலூர் - 1

!உங்கள் மகள் மிதுன லக்னத்தில் பிறந்திருக் கிறார். களத்திர ஸ்தானத்துக்கு அதிபதியான சுக்கிரன் 8-ம் வீட்டில் நீசம் பெற்றிருக்கிறார்; குரு 6-ம் வீட்டில் மறைவு பெற்றிருக்கிறார். எனவேதான் திருமணம் தாமதமாகிறது. களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி குரு ஆகியோருக்கு உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

குருவுக்கு உரிய ஹோமத்தைச் செய்வதுடன், சுக்கிர ப்ரீதியாக சுமங்கலி பூஜை செய்வது சிறப்பான பரிகாரமாகும். இதன் மூலம் திருமணத் தடை நீங்கி, விரைவில் நல்ல இடத்தில் வரன் அமையும். வாழ்த்துகள்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com