தொடர்கள்
ஜோதிடம்
Published:Updated:

மனப் பிணிகளுக்கு கிரகங்கள் காரணமாகுமா?

கிரகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரகங்கள்

கிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பார்கள்.

? நவகிரக ஹோமம் செய்யும்போது நிறைவில் ஒன்பது கிரகங் களுக்குமான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டுமா?

- கே.பரமசிவம், திருநெல்வேலி-2

! ஹோமத்தின் முடிவில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றபடி கிரக சாந்தி செய்யும்போது சில பாராயணங்களைச் செய்ய வேண்டும். ஒருவரின் கிரக நிலையில் சூரியன் சரியில்லாத இடத்தில் இருந்தால், அவர்கள் ஹோமம் செய்யும்போது ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஆறு தடவை பாராயணம் செய்வது நல்லது.

அதேபோல் சந்திரனால் பாதிப்பு என்றால், `துர்க்கா சப்த ஸ்லோகி’ (துர்க்கையைப் பற்றிய ஏழு ஸ்லோகங்கள் அடங்கியது) பத்து தடவை சொல்லலாம். செவ்வாய் கிரகத்தால் பாதிப்பு என்றால், ருண மோசன மங்கள ஸ்தோத்திரத்தை ஏழு தடவை பாராயணம் செய்யலாம். புதன் கிரகம் சரியில்லை எனில், பாகவதத்தில் வரும் கிருஷ்ணாவதாரம் பதினேழு தடவை பாராயணம் செய்யலாம்.

குருவால் பாதிப்பு ஏற்பட்டால், வேத மந்திரங்களைச் சொல்ல வேண்டும். சுக்கிரன் சரியில்லாமல் இருந்தால், லட்சுமி சகஸ்ரநாமம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் இருபது தடவை பாராயணம் செய்ய வேண்டும். சனி சரியில்லாமல் இருந்தால், நவக்கிரக ஹோமத்தோடு ஐயப்ப சகஸ்ரநாமம், ஆஞ்சநேய சகஸ்ரநாமம், அனுமன் சாலீஸா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பத்தொன்பது தடவை சொல்ல வேண்டும்.

இதேபோல் ராகுவால் பாதிப்புகள் இருந்தால், விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆஞ்சநேய சகஸ்ர நாமம் பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். கேது சரியில்லாமல் இருந்தால், புருஷ சூக்தம், விநாயக சகஸ்ரநாமம் அல்லது கணபதி அதர்வசீர்ஷம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஏழு தடவை பாராயணம் செய்ய வேண்டும்.

? ஹோமம் செய்யும்போது `பல தானம்’ செய்ய வேண்டும் என்கிறார்களே... பல தானம் என்றால் என்ன விளக்குங்களேன்.

- கே.முருகன், விருதுநகர்

நவகிரக ஹோமத்தின் விசேஷமான அம்சமே இது! கெடுதல்களைக் களைந்து வாழ்க்கையில் நல்ல அம்சங்கள் திரும்பவும் வருவதற்காக செய்யப் படுவதுதான் நவகிரக ஹோமம்.

கிரகங்கள்
கிரகங்கள்

பலமுள்ள பொருள்களை தானம் செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். பல தானம் என்றால் இதுதான். வஸ்திரம், தானியம், தட்சணை, பிரதிமை போன்றவற்றைத் தரலாம் (நவக்கிரக பிரதிமைகளை வெள்ளியால் செய்து தானம் தரும் வழக்கமும் உண்டு).

அதேபோல், ஹோமம் நிறைவு பெற்றதும் நவகிரகங்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்பது கலசங்களில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து அதை யாருடைய பாதிப்புக்காக ஹோமம் செய்கிறோமோ, அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

குடும்பத்தில் எல்லோரும் செய்துகொண்டாலும் தப்பில்லை. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அதை பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.

? ஜனன ஜாதகத்தில் நான்காம் இடமும் நான்காம் இடத்து அதிபதியும் நல்ல முறையில் இருப்பதால் சொந்த வீடு யோகம் உண்டு என்கிறார் எங்கள் ஜோதிடர். எனது ஜாதகப்படி சொந்த வீடு எப்போது அமையும்?

- கே.பாலாஜி, கோவை-2

!பொதுவாக, ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 3, 4, 5, 6, 8 போன்ற இடங்களில் அமைந்திருந்தால் சொந்த வீடு அமைவதில் சிரமங்கள் ஏற்படும். ஒருவேளை சொந்த வீடு வாய்த்தாலும் அனுபவிப்பதில் தடைகள் எழவும் வாய்ப்பு உண்டு என்பார்கள்.

4-ம் வீட்டின் அதிபதி, மற்ற இடங்களில் இருந்தால் சொந்த வீடு யோகம் சிரமமின்றி வாய்க்கும்.

தங்கள் ஜாதகத்தில் ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 2-ம் வீட்டில் அமைந்திருப்பதால் இயற்கையாகவே நல்ல வீடு, வாசல் அமைந்துவிடும். இளவயதிலேயே நன்மைகளை அடைவீர்கள். கல்வி, கலை ஞானம் ஆகியவற்றாலோ, தாய்வழி உறவுகளின் மூலமோ வீடு வாசல் அமைத்துக்கொள்ளும் யோகம் உண்டு.

மற்ற கிரக நிலைகளைவைத்துப் பார்க்கும்போது ஓரிரு வருடங்களுக்குள் சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. ஒருமுறை சிறுவாபுரிக்குச் சென்று முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு வாருங்கள். விரைவில் புது இல்லத்தில் குடிபுக அருள்புரிவார் அந்த வள்ளல்.

? மருத்துவ சிகிச்சைக்குத் தொடர்பான தகவல்களும் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டா? மன நோய்க்கான காரணத்தைக் கிரக அமைப்புகள் மூலம் கணிக்க முடியுமா?

- மீனாட்சி நடராஜன், திருப்பரங்குன்றம்

! மருத்துவ சிகிச்சையோடு தொடர்புடைய ஜோதிடத் தகவல்கள் குறித்து ஏற்கெனவே ஒரு கேள்விக்குப் பதிலளித்துள்ளோம். பாவத்தில் உள்ள கிரகம், பாவாதிபதி, பாவத்தைப் பார்க்கும் பிற கிரகங்கள், பாவாதிபதியைப் பார்க்கும் பிற கிரகங்கள், ஆறாம் பாவத்தின் இயற்கை காரகர்களாகிய சனி மற்றும் செவ்வாயின் நிலை, லக்னத்தின் பலம் மற்றும் பலவீனம், லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனம், லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு இருபுறமும் அசுபர் இருக்கும் நிலை, சந்திரன் நிலை, கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் அசுபரின் நிலை... இப்படியான நிலைகளை ஆராய்ந்து, நோய் குறித்த பலன்களைச் சொல்வார்கள்.

நீங்கள் மனநோய் ஏற்படக் காரணமான கிரக நிலை குறித்து கேட்டுள்ளீர்கள்.

கிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பார்கள். ஜாதகத்தில் சந்திரன் பலமற்ற நிலையில் இருந்தால் மனம் தொடர்பான பிணிகள் உண்டாகும்.

உதாரணத்துக்குச் சில...

  • பலவீனமான சந்திரன் சனியுடன் இணைந்து 12-ம் இடத்தில் இருப்பது.

  • தேய்பிறைச் சந்திரன் அசுபருடன் இணைந்து 1, 5, 8, 9-ம் வீடுகளில் இருப்பது.

  • தேய்பிறைச் சந்திரன் புதனுடன் அஸ்தமனம் ஆகி லக்னத்தில் இருப்பது.

  • சந்திரன் ராகுவுடன் லக்னத்திலிருந்து 5 மற்றும் 9-ம் இடத்தில் அசுப கிரகம் இருப்பது.

  • பலவீனமான சனி 8-ம் வீட்டில் சந்திரனுடன் இருப்பது.

  • இதுபோன்ற அமைப்புகள் மனம் தொடர்பான பிணிகளுக்குக் காரணமாக அமையும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com