பிரீமியம் ஸ்டோரி

?சுயமாகத் தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். தற்போதைய சூழலில் வேண்டாம் என்று தள்ளிப் போட்டுள்ளேன். ஓரிரு மாதங்கள் கழித்து சொந்தத் தொழிலில் இறங்கலாமா, என் ஜாதக நிலை எப்படி உள்ளது?

-கே.கார்த்திகேயன், தூத்துக்குடி

! தங்களின் ஜாதகப்படி தற்போது சுக்ர தசை நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு கேது தசை தொடங்கும். ஜாதகத்தில் 10-ம் வீட்டில் கேது அமர்ந்திருக்கிறார். அந்த இடத்துக்கு உரியவர் சூரியன். அவரும், 10-ம் இடத்தில் இருக்கும் கேதுவும் வர்க்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள்.

ஆக, ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு சுயதொழில் குறித்து முயற்சி செய்யலாம். கேது தசை நடக்கும் காலத்தில் தங்களுக்கு சுயதொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்; எதிர்பார்த்த லாபத்துடன் முன்னேற்றம் உண்டாகும்.

நீங்கள், ஒருமுறை குலதெய்வத்தை தரிசித்து வரலாம். பயணம் செய்ய முடியாத நிலை என்றால், வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து வழிபாடு நடத்தலாம். தொழில் தொடங்குமுன் குலதெய்வத்துக்கு உரிய வழிபாட்டைச் செய்வதால், அமோக வெற்றி பெற அருள் கிடைக்கும்.

? அடுத்தடுத்த பிரச்னைகளால் தொடர்ந்து பொருளாதாரப் பிரச்னை யில் சிக்கித் தவிக்கிறேன். எனது பணக் கஷ்டம் எப்போது தீரும்?

- ஜி.வடிவேல், கோவில்பட்டி

! ஒருவரின் ஜாதகத்தில் குபேர யோகம் அமையப்பெற்றிருந்தால், உரிய காலத்தில் அளவற்றச் செல்வங்களைப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார். அதேநேரம், ஜாதகத்தில் தனம் மற்றும் சுக ஸ்தானங்களில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகியவை அமையப் பெற்றிருந்தால், அவர் எவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வறுமையை அனுபவிக்க நேரிடும்.

ஆனால், அந்த இடத்துக்குக் குருவின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், உரிய பரிகாரங்கள் மூலம் பணக்கஷ்டத்திலிருந்து விடுபட முடியும். தங்களின் ஜாதகத்தில் சுக ஸ்தானத்தில் கேது இருந்தாலும் அவருக்குக் குருவின் பார்வை இருப்பதால், எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும்.

நீங்கள், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றிவைத்து, மகாலட்சுமி ஸ்துதிகளைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், முன்னேற்றம் ஏற்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

?என் மகளுக்குக் கல்யாண யோகம் எப்போது, ஜாதகப்படி பரிகாரம் ஏதேனும் செய்யவேண்டுமா?

- எஸ்.பவித்ரா, கோவை-3

`பணக் கஷ்டம் எப்போது தீரும்?’

! திருமணம் ஒருவருக்குத் தடைப்படுவதற் கான பல காரணங்கள் ஜோதிட சாஸ் திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.திருமண முயற்சிகளை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் குருபலம் வந்து விட்டதா என்றுதான் பார்க்கிறார்கள். குரு பலம் அவசியம்தான். ஆனால், அதுமட்டுமே போதுமானதாக இருக்காது. திருமணத்தைக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு உரிய கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெறவேண்டியதும் அவசியம்.

மேலும், ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் எந்த இடத்தில் உள்ளாரோ, அந்த இடத்துக்குச் சுக்கிரன் கோசாரத்தில் வரும்போது, திருமண வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் கூடி வரும். அதேபோல், ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் பாவத்தில் சனி, ராகு, கேது ஆகியோர் இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்த இடத்துக்குச் சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், தோஷம் நிவர்த்தியாகி திருமணம் கூடி வரும்.

மேலும் திருமணம் வம்ச விருத்திக்கானது என்பதால், புத்திரகாரகரான குரு கோசாரப்படி நல்ல இடங்களுக்கு வரும்போதும் அந்த இடங்களுக்குக் கோசார குருவின் பார்வை ஏற்படும்போதும் திருமணம் நடைபெறும் என்கின்றன, ஜோதிட சாஸ்திர நூல்கள்.

தங்களின் மகள் கடக லக்னம் துலாம் ராசியில் பிறந்திருக்கிறார். லக்னத்துக்கு 7-ல் அதாவது தனது சொந்த வீட்டில் சனி இருக்கிறார். அந்த வீட்டுக்குக் குருவின் பார்வையும் ஏற்பட் டிருக்கிறது. ஆகவே, அடுத்து வரும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் கூடி வரும்.

தங்களின் மகளை, அனுதினமும் பூஜையறை யில் நெய் தீபம் ஏற்றிவைத்து, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அம்பாளை வழிபடச் சொல்லுங்கள். அன்னையின் திருவருளால் விரைவில் திருமணம் கூடிவரும்.

?எனக்கு அடிக்கடி ஏதேனும் உடலநலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆயுள் பாவம் குறித்து சஞ்சலப்படுகிறேன். ஜாதகப்படி என் ஆயுள் பலம் குறித்து அறிய விரும்புகிறேன்.

- மு.கிருஷ்ணன், பழநி

! கவலை வேண்டாம். தங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் மேஷ லக்னத்தில் செவ்வாய் உள்ளார். லக்னாதிபதி, ஜீவனைத் தரும் குரு மற்றும் சுக்கிரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திரங்களில் இருக்கும்போது, ஆயுள் பலப்படும் என்கின்றன ஜோதிட நூல்கள். அதேபோல், தங்கள் ஜாதகத்தில் சந்திரனும் நல்ல நிலையில் உள்ளார்.

தற்போது சுக்ரதசை முடிவடையும் நிலையில் உள்ளது. சுக்ரனால் அதீத பலன் கிடைக்க வில்லை என்றாலும் வருத்தம் இல்லாத வாழ்வைத் தருவார் என்று சொல்லலாம். ஆகவே, நம்பிக்கையுடன் இருங்கள். தங்களுக்கு ஆயுள் கெட்டி. தினமும் `மணியே மணியின் ஒளியே...’ எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலைப் படித்து அம்பாளை வழிபட்டு வாருங்கள்; தங்களின் மன சஞ்சலம் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு