Published:Updated:

`சொந்த வீடு அமையுமா?’

`சொந்த வீடு அமையுமா?’
பிரீமியம் ஸ்டோரி
News
`சொந்த வீடு அமையுமா?’

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

?சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில், அந்தக் குழந்தைக்கான ஜாதகக் கணிப்பு துல்லிய மாக இருக்குமா?

- எம்.சுபலட்சுமி, காரைக்குடி

! சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பும் ஜாதகக் கணிப்பும் குறித்த இதே போன்றதொரு கேள்விக்கு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளோம். முன்ஜன்மத்தில் ஏற்பட்ட வினைப் பயன்களை அனுபவிக்கவே இந்தப் பிறவி அமைகிறது.

என்னதான் நாம் `இந்த நேரத்தில்தான் குழந்தை பிறக்கவேண்டும்’ என்று திட்டமிட் டாலும், டாக்டர் நேரத்துக்கு வரமுடியாமல் இருப்பது, மின் தடை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் பிரச்னை என்று பல தடைகள் ஏற்பட சாத்தியமிருக்கிறது. ஆக, நாம் திட்டமிட்ட நேரத்தில்தான் குழந்தை பிறக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குழந்தை எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த நேரத்தில்தான் பிறக்கும். மேலும் சிலர், ‘என் பிள்ளையும் உன் பிள்ளையும் ஒரே நேரத்தில்தான் பிறந்தார்கள். ஆனால், உன் பிள்ளையைப் போல் என் பிள்ளை மகிழ்ச்சியாக இல்லையே’ என்று சொல்வார்கள். சில நொடி வித்தியாசம் இருந்தாலும் குழந்தையின் ஜாதகப் பலன்கள் மாறிவிடும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

?ஜாதகப்படி எனக்குச் சொந்த வீடு பாக்கியம் உண்டா. வீடு கட்டுவது அல்லது வாங்குவதாக இருந்தால், நான் பணி செய்யும் ஊரிலேயே சொந்த வீட்டை அமைக்கலாமா?

- கே.சங்கரநாராயணன், பொள்ளாச்சி

`சொந்த வீடு அமையுமா?’

!நீங்கள் விருச்சிக லக்னக்காரர். ஜாதகப்படி குரு 8-ல் மறைவு; 7-ம் பார்வையால் தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஆகவே, வீடு கட்டும் பணிக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாது.

எனினும், 4-ம் வீட்டுக்கு உரிய கிரகமான சனி 12-ல் இருக்கிறார். ஆகவே, வீட்டின் மூலம் பெரிய லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேநேரம், பூமிக்காரகனான செவ்வாய் சாதகமான அமைப்பில் திகழ்வதாலும் சந்திரமங்கள யோகம் இருப்பதாலும் பூமி மூலமாக ஓரளவு லாபம் வரும் என்று தெரிகிறது.

‘அபிப்ரவாச:’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவருக்கு அவர் பிறந்த ஊரில் அவரது நினைவாக ஒரு வீடு அல்லது வாழ்வாதாரம் இருந்தால், அவருடைய ஆயுள் விருத்தியாகும் என்பது பொருள். எனவே சொந்த ஊரில் வீடு வாங்குவது நல்லது.

?கர்ப்பா தானம் செய்யத் தகுந்த நாள்கள் குறித்து ஜோதிட நூல்களில் விளக்கங்கள் உண்டா?

- கே.பரமேஸ்வரன், பேட்டை

!பெண் ரஜஸ்வலையான பிறகு (மாதவிடாய் ஏற்பட்ட பிறகு) பதினாறு நாள்தான் ருது கால நாள்கள். அந்தப் பதினாறு நாள்களில் முதல் நான்கு நாள்கள் கர்ப்பா தானம் பண்ணக்கூடாது. 11, 12-வது நாள்களிலும் முகூர்த்தம் சுகம் இல்லை. பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தசி, அஷ்டமி ஆகிய நாள்களிலும் பிள்ளை வேண்டி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது.

கர்ப்பாதானம் செய்யும்போது அக்னி, வாயு, சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களுக்கு ஆஹுதி கொடுத்து வழிபட வேண்டும். நெய்யைத் தேய்த்துக் குளிக்கவேண்டும். வெள்ளை ஆடை அணிந்து சூரிய தரிசனம் செய்ய வேண்டும். முதியோரையும் வயதான சுமங்கலிகளையும் வணங்கவேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள்.

பெண் விலக்காகி ஐந்தாம் நாளில் இருந்து பதினாறாம் நாள்வரை உள்ள தினங்களில் தவிர்க்கவேண்டிய தினங்கள் போக மீதி நாள்களில் ஆறு, எட்டு, பத்து, பதினான்கு, பதினாறாம் நாட்களில் கர்ப்பாதானம் செய்தால், ஆண் குழந்தை பிறக்கும்; ஐந்து, ஏழு, ஒன்பது, பதின்மூன்று மற்றும் பதினைந்தாம் நாள்களில் கர்ப்பாதானம் செய்தால் பெண் குழந்தை பிறக்கும் என்று பிருஹத் ஸம்ஹிதை என்கிற நூலை எழுதிய வராகமிஹிரர் சொல்கிறார்.

எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் - குழந்தைப் பேறு இருக்கிறதா என்றெல்லாம் விவரிக்கும் பகுதி அது.

அல்ப புத்ர லட்சணம் (ஓரிரு குழந்தைகளே பிறக்கும் அடையாளம்), குழந்தையே இல்லாமல் போவதற்கான லட்சணம், குழந்தைப் பேறுக்கு இருக்கும் தடைக்கான காரணங்கள், அவற்றை மாற்றுவதற்கான பரிகார மார்க்கங்கள் என்பதை எல்லாம் ஆராயும் `சந்தான பரிகரணம்’ என்கிற ஒரு பாகமே ஜோதிடத்தில் உண்டு. அதன்படி உரிய பரிகாரங்களைச் செய்து அருள்பெற்றார்கள் முன்னோர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

?என் ஜாதக்கப்படி நல்ல உத்தியோகம் எப்போது அமையும். எந்தத் துறை சார்ந்த உத்தியோகத்தை ஏற்றால் முன்னேற்றம் உண்டாகும்?

- கே.ராமச்சந்திரன், தூத்துக்குடி

!தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் 5-ல் உள்ளார். கேது 2-ம் வீட்டில் அமைந்திருக்கிறார். அது தன ஸ்தானம். ஆகவே, சம்பாதிப்பது முழுவதும் செலவாகிவிடும் வாய்ப்பு உண்டு; சிக்கனம் தேவை.

10-ம் இடத்துக்கு சனியின் உபகோளான மாந்தியின் பார்வை உள்ளதால், நல்ல வேலை அமைவது தடைப்படுகிறது. தற்போது சுக்கிர தசை நடந்தாலும்கூட, என்ன செய்வது என்று புரியாத குழப்ப நிலையில் இருக்கிறீர்கள். தெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.

ஜாதகப்படியும், 10-ம் பாவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், கர்ம தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. தினமும் வீட்டில் நெய்விளக்கு ஏற்றிவைத்து, விநாயகரையும் அம்பாளையும் வழிபட்டு வாருங்கள். பிரதோஷ தரிசனமும் வழிபாடும் தடைகளை நீக்கும். விரைவில் நிலைமை மாறும்; நல்லதொரு வாய்ப்பும் தேடி வரும். கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வேலை சார்ந்த துறையில் நீங்கள் ஜொலிக்க முடியும்.

- பதில்கள் தொடரும்...