Published:Updated:

‘நெற்றியில் மச்சம் இருக்கலாமா?’

இதுபோன்ற கல்யாண தோஷங்களை நீக்கி, விரைவில் திருமண பாக்கியம் கைகூட அருளும் வழிபாடுதான் சுயம்வர பார்வதிஹோமம்.

பிரீமியம் ஸ்டோரி

? புதிய வீட்டுக்கான கட்டடப் பணியைத் தொடங்கவுள்ளோம். புதிய வீட்டில் தோட்டத் தில் மரக்கன்றுகள் நடவுள்ளோம். எந்த விருட்சங்களைத் தவிர்க்கவேண்டும். வாஸ்துப்படி பூஜை அறை எந்த இடத்தில் அமைந்தால் நல்லது?

- சி.கார்த்திகேஸ்வரி, பரமன்குறிச்சி

முன்பு வீட்டின் கட்டுமானத்துக்கும் மரங்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. பெரும்பாலும் தேக்கு, வேங்கை ஆகிய மரங்களைப் பயன் படுத்துவதுவார்கள். கட்டுமானத் துக்கு மட்டுமன்றி, வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் குறித்தும் சில விளக்கங்கள், விருட்ச சாஸ்திரம் முதலான ஞான நூல்களில் உண்டு.

பருத்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி, எருக்கு, புளி, இலவு மரங்களை இல்லத்தில் வளர்த்தால் அஷ்டலட்சுமியும் இடம் பெயர்வர். அத்தி, ஆல், இச்சி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, மகிழம், விளா மரங்களைப் பயன்படுத்தினால் செல்வம் அழியும்; ஆயுள் குறைவு ஏற்படும்.

பூஜையறை குறித்து கேட்டுள்ளீர்கள். வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகின்றனவோ, அந்த இடத்தைப் பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்!

‘நெற்றியில் மச்சம் இருக்கலாமா?’

? என் மகளுக்குத் திருமணம் நடைபெறு வதில் தடைகள் உள்ளன என்கிறார் ஜோதிடர். பரிகாரமாக சுயம்வர பார்வதி ஹோமம் செய்யச் சொல்கிறார். எனக்கு அந்த ஹோமம் குறித்து விளக்கம் தேவை.

- எஸ். சந்திரசேகரன்,
திருவாரூர்

தங்கள் மகளின் ஜாதகப்படி, மேலோட்டமாகப் பார்த்தால் தோஷம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். எனினும், 8-ம் வீட்டில் குரு பார்வை இல்லாமல் செவ்வாய் இருப்பது தோஷமாகும். ஆகவே தோஷ பரிகாரம் செய்து பலன் அடையலாம்.

இதுபோன்ற கல்யாண தோஷங்களை நீக்கி, விரைவில் திருமண பாக்கியம் கைகூட அருளும் வழிபாடுதான் சுயம்வர பார்வதிஹோமம். திருமணத் தடை நீங்கவும், எந்த விதச் சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்- பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது.

தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை மணந்தார். பார்வதிதேவிக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணையைக் கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம்.

இந்த ஹோமத்துக்கு அரச சமித்து, சர்க்கரைப் பொங்கல், நெய், குங்குமம் ஆகியவற்றை திரவியங்களாகப் பயன்படுத்துவார்கள். இவை தவிர, தாமரைப் பூவையும் சேர்த்துக் கொண்டு ஹோமம் செய்தால், மனதுக்கு இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள்.

சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதற்கான தியான மந்திரங்களில் ஒன்றின் அர்த்தத்தைச் சொல்கிறேன்.

‘பார்வதிதேவி உதய கால சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறாள். அவள் கழுத்தில் இருக்கும் மாலையில் வாசமுள்ள மலர்கள் இருப்பதால், வண்டுகள் வட்டமிடுகின்றன. எல்லோரும் பிரமிக்கும் அளவுக்கு அவளது தோற்றம் அழகாக இருக்கிறது. பரமேஸ்வரனை மெதுவாக நெருங்கி அவள் மாலையிடுகிறாள். அந்த பார்வதிதேவி, எந்த விதமான வேண்டு தலையும் சாதித்துக் கொடுக்கக் கூடியவள். எனது ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டு அவளை நமஸ்கரிக்கிறேன்.’

இதையே தினமும் மனத்தில் தியானித்து, வீட்டில் திருவிளக்கையே பார்வதிதேவியாக பாவித்து வழிபட்டு வந்தால், உங்கள் மகளுக்கு விரைவில் மணப்பேறு வாய்க்கும்.

? அங்கலட்சண சாஸ்திரப்படி மச்சங்களுக்கும் பலன் உண்டு என்று படித்திருக்கிறேன். எனக்கு நெற்றியில் மச்சம் அமைந்துள்ளது. இதனால் உண்டாகும் பலன் என்ன? மச்சங்கள் எந்தெந்த இடங்களில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

- கோ.விஸ்வநாதன்,
தூத்துக்குடி

நெற்றியில் மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்துக்கான அம்சம். விருப்பம்போல் வாழ்க்கை அமையும். உங்களுக்கு, மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும். இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள். பிறருக்குக் கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். சிலருக்கு மூக்கிலும் மச்சம் இருக்கும். அவர்கள் முன்கோபிகளாக இருப் பார்கள். கனிவான பேச்சு இருக்காது. எப்போதும் `சிடுசிடு’வென பேசுவார்கள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள். அதேநேரம், பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், அவர்கள் சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகளில் விருப்பம் இருக்காது.

உதடுகளில் மச்சம் அமையப்பெற்றிருக்கும் நிலை, பெருஞ் செல்வத்தைக் குறிக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும் புகழை இவர்கள் எய்தக்கூடும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு