திருத்தலங்கள்
Published:Updated:

கடக ராசி நேயர்களே நீங்கள் இப்படித்தான்!

கடக ராசி
பிரீமியம் ஸ்டோரி
News
கடக ராசி

கடக ராசிக்கான குணாதிசயங்கள் -சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கர்க்கடக ராசியைக் கடக ராசி என்பார்கள். கர்க்கடக லக்னத் துக்கு அதிபதி சந்திரன். ராசிச் சக்கரத்தின் 90 முதல் 120 பாகை வரை கர்க்கடக லக்னம் பரவியிருக்கும். இங்கு குரு உச்சம் பெற்றிருப்பார். செவ்வாய் நீசம் பெற்றுவிடுவார். இது ஜலராசி; சர ராசி. நண்டு வடிவம் கொண்டது.

கடக ராசி நேயர்களே
நீங்கள் இப்படித்தான்!

ண்டு- அதிக கால்களைக் கொண்ட ஊர்வன இனம். ஜலத்திலும் பொந்துகளிலும் குடியிருக்கும். கீட ராசி (புழு இனம்) என்றும் சொல்வதுண்டு. விஷ ஜந்துவில் அடங்கும். பூச்சிப் புழுக்களை உட்கொண்டு காலம் தள்ளினாலும், நரி போன்ற உயிரினங்களுக்கு உணவாக மாறிவிடும்.

த்ரிகோணமான 5-ம்(விருச்சிகம்) ராசிக்கும், கேந்திரமான 10-ம் (மேஷம்) ராசிக்கும் அதிபதியாக இருக்கும் செவ்வாய், இந்த லக்னத்துக்கு யோககாரகனாக மாறி நல்ல பலனை அளிப்பார்.

லக்னாதிபதி 5-ல் (விருச்சிகம்) நீசம் பெற்றும், 5-க்கு உடைய செவ்வாய் கடகத்தில் அதாவது, லக்னத்தில் நீசம்பெற்றும் இருப்பதால், இவ்விருவரின் செயல்பாடு மனத்துக்குப் பிடித்த அளவில் பெருமை அளிக்காது. யோககாரகனான செவ்வாய், மகரத்தில் உச்சனாகவும்; சந்திரன் ரிஷபத்தில் உச்சனாகவும் மாறுவதால், 7-லும் 11-லும் அவ்விருவரும் அமர்ந்தால், அமர்க்களமான வாழ்க்கைச் செழிப்பும் பலரது பாராட்டும் உண்டாகும்.

கடகத்தில் சுக்கிரன் அமர்ந்து, மகர ராசி லக்னமானால், பெண் ஆசையில் திருப்தி வராமல் தவிப்பதும் உண்டு. அதிபதி சந்திரன் மனத்துக்குக்காரகன். சஞ்சலமான மனம், உலகவியல் சுகத்தை அளிக்கும் 11 (வ்ருஷபம்) மற்றும் 4-க்கு (துலாம்) உடைய சுக்கிரன் அனுகூலமின்றி இருப்பதால், பெண்ணாசையில் முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் தொடர்ந்து ஈடுபட்டு கலக்கமுறும். 9-க்கு (மீனம்) உடைய குரு இங்கு உச்சம் பெற்றிருந்தால், வாழ்க்கையில் தடை யில்லாத முன்னேற்றம் உண்டு.

புனர்பூசம் கடைசி பாதம், பூசம், ஆயில்யம் இந்த நட்சத்திரத்துடன் இணைந்த சந்திரன், மாறுபட்ட பலனை அளிப்பான். முதல் நவாம்சத்தில் நட்சத்திர (பு.பூசம்) நாதன் குருவோடு இணைவதால்... 6-க்கு (தனுசு) உடையவனாக இருந்தாலும் 9-க்கும் (மீனம்) உடையவனாக இருப்பதால், பாக்கியாதிபதி என்ற நோக்கில், ஏறக்குறைய பிறந்து 4 வருடங்கள் வரையிலும் நல்ல பலன் அனுபவத்துக்கு வரும்.

அடுத்து வரும் 4 நவாம்சங்களில், நவாம்சாதிபதிகளுடன் இணைந்த பூச நட்சத்திரநாதன் சனி, உடல் உபாதைகளைத் தோற்றுவித்து அலைக்கழிக்க வாய்ப்பு உண்டு. கடைசி நான்கு நவாம்சங்கள் ராசி நாதன் புதனோடு இணைந்து, பலன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவான். சனி - 19, புதன் - 17... ஆக 36 வருடங்கள், ஜாதகரின் இளமைச் சந்தியில் செழிப்பை ஏற்படுத்துவர். சனி பலம் பொருந்தியிருந்தால், தொழில் கல்வியில் சிறப்புறச் செய்து, செல்வச் செழிப்புடன் வாழ வைப்பார்.

கடக ராசி நேயர்களே
நீங்கள் இப்படித்தான்!

கடகத்தில் முதல் அம்சகமும், விருச்சிகத்தில் 5-வது அம்சகமும், மீனத்தில் 9-வது அம்சகமும் ‘வர்கோத்தமம்’ பெற்று இருப்பது மட்டுமே, சந்திரனின் அம்சக பலமாக விளங்கும் (சுபம் வர்கோத்தமே ஜன்ம). கடகத்தில் முதல் அம்சகத்தில், சந்திரன்... அதாவது கடகராசி அதிபதி வர்கோத்தம பலம் பெற்றிருப்பார். நட்சத்திராதிபதி குருவின் இணைப்பும், அத்துடன் ஐந்துக்கு ஐந்தான பாவாத் பாவமான 9-க்கு உடையவனாகத் திகழும் குருவின் சிறப்பும்... முதல் அம்சகத்தில் நீசம்பெற்ற செவ்வாய் வர்கோத்தமம் பெற்று உயர்ந்து இருப்பதாலும், 5-க்கும் 10-க்கும் உடைய செவ்வாய் யோககாரகனாக மாறி சிறப்புப் பெற்று இருப்பதாலும்... முதல் அம்சகத்தில் பிறந்தவரின் வாழ்வில் இன்னல்கள் தென்பட்டாலும் அதையும் தாண்டி, வளமான வாழ்க்கையை சந்திப்பார்.

2-வது அம்சகத்தில் சூரியனின் தொடர்பு வலுவிழந்து காணப்படும். நட்சத்திராதிபன் (பகையான) சனியின் சேர்க்கையும் துயரத்தை இரட்டிப்பாக்க உதவும். 3-வதில் புதன், 4-ல் சுக்கிரன், 5-ல் செவ்வாய், 6-ல் குரு, 7-ல் சனி, 8-லும் சனி, 9-ல் குரு - இப்படி ராசிநாதன் இவர்களது சேர்க்கையில், அவர்களின் பலாபலத்தை ஒட்டி விகிதா சாரப்படி பலனளிப்பதால், இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையே மனித இனத்துக்கு உண்டு என்பதை உறுதி செய்யும்.

மொத்தத்தில் சந்திரனும், செவ்வாயும், குருவும் பலம் பெற்றவர்களாக அமைந்தால், நெருடல் இல்லாத வாழ்க்கை அமையும். அப்படியே நெருடல் தென்பட்டாலும், மனம் நெருடலை ஏற்கத் தயங்காது.

கடக ராசி நேயர்களே
நீங்கள் இப்படித்தான்!

ராமருடைய அவதாரக் காலத்தைச் சுட்டிக் காட்டும் தறுவாயில் கர்க்கடக லக்னம், முதல் அம்சகத்தில் சந்திரன், சூரியன் மேஷத்தில் உச்சன், ஐந்துக்கு ஐந்து 9-க்கு உடைய குரு உச்சன் என்று அந்த வேளையின் பெருமையை விளக்கியுள்ளனர். அவர் வாழ்க்கையில் இன்னலைச் சந்தித்தாலும் அதை மனம் ஏற்றுக்கொண்டு உணர்ந்து அனுபவித்தது; துவண்டுபோகவில்லை. இது, இன்னலிலும் மனம் துயரத்தை உணராது என்பதற்குச் சான்று.

இந்த லக்னத்துக்கு யோககாரகனான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றோ, விருச்சிகம், மேஷம் ஆகியவற்றின் ஸ்வக்ஷேத்திர பலவானாகவோ இருப்பதைவிட, கடகத்தில் முதல் நவாம்சகத்தில் நீசம் பெற்று, வர்க்கோத்தமத்தில் உயர்ந்து... மனத்துக்குக் காரகனான வர்க்கோத்தமம் பெற்ற சந்திரனுடனும் உச்சனான குருவோடும் இணைந்து தரும் பலமானது, மனிதனை தெய்வீகத்தன்மைக்கு உயர்த்தும் என்ற விளக்கங்கள் ஜோதிடத்தின் பெருமைக்குச் சான்று.

தேய்ந்தும் வளர்ந்தும் செயல்படும் சந்திரன், இந்த ராசிக்காரர்களின் வாழ்விலும் இன்ப- துன்பங்களைச் சந்திக்கவைப்பார். அதேநேரம் மனதுக்குக் காரகனாக இருக்கும் சந்திரனே ராசிநாதனாக மாறுவதால், செயல்பாட்டில் தெளிவை ஏற்படுத்துவார். ஐந்திலோ, ஒன்பதிலோ சந்திரன் வர்கோத்தம பலம் பெற்றிருந்தால், ஜாதகர் தளராத மனத்துடன் சங்கடங்களை ஏற்று, துன்பத்தை இன்பமாக்க விழைவார்.

சந்திரன் ஜலமயன்; நண்டு -ஜலத்துடன் இணைந்தது. பல கால்களைப் பெற்று ஓரிடத்தில் நிற்காமல் அசைந்து கொண்டிருக்கும். கடக ராசியும் சர ராசி. இப்படி அனைத்தும் அசைந்துகொண்டே இருக்கும் இயல்பில் முழுமை பெற்றுத் தென்படுவதால், எந்த விஷயத்திலும் தடுமாற்றத்துடன் செயல்படும் பாங்கு, இந்த ராசிக் காரர்களிடம் இருக்கும். வெற்றியை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலை அவர்களைவிட்டு அகலாது. இப்படியும் சொல்லலாம்... வெற்றி உறுதி என்று தெரிந்தாலும், அதை எட்டும்வரை மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

பலம் பொருந்திய சுக்கிரனோடு ராசிநாதன் சந்திரன் இணைந்தால், பகுத்தறிவாளனாகத் தென்படுவர். உயர்ந்த பதவியை எட்டிப்பிடிக்க இயலாமல் மனம் தடுமாறும்போது, தோல்வியை மறைக்க உயர்ந்த மனிதர்களைத் தூற்றுவதைப் போர்வையாகப் பயன்படுத்தும் மனம். அஷ்டமாதிபதி சனியாக இருப்பதால், நீண்ட ஆயுளைப் பெற்று மகிழும். துக்ககாரகன் 8-ல் இருந்தால் ஆயுளை நீட்டிப்பான் என்கிறது ஜோதிடம்.

இந்த ராசியினருக்கு சந்திரனின் வழிபாடு கை கொடுக்கும். ‘சம் சந்திராயநம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி சந்திரனை ஆராதிக்கலாம். செவ்வாயும், குருவும் நன்மை யைச் செய்வதால், பணிவிடையில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ‘கும்குஜாய நம: கும் குரவே நம:’ என்ற மந்திரத்தை ஓதி வழிபடலாம்.

விரிவாகப் பணிவிடை செய்ய காலம் இல்லைஎன்றாலும், அந்த மந்திரங்களை மனதில் அசைபோட்டு வணங்கலாம். சந்திரனையும் செவ்வாயையும், குருவையும் ஒரு நொடியா வது நினைத்தால் போதும்; அவர்கள் சாந்நித்தியம் மனதில் தோன்றினால், மனத்தில் இருந்து விருப்பமான ஆணைகள் மட்டுமே வெளிவரும். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.

(அடுத்த இதழில் சிம்ம ராசி குணாதிசயங்கள்...)

தண்ணீர் ஆழம் மயன் சொல்லும் நுட்பம்!

பூமியின் அடியில் நீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் உள்ளது, என்ன சுவையில் இருக்கும், எந்த திசையில் அல்லது எந்த இடத்தில் நிலத்தடி நீர் உள்ளது, அதை எப்படி அடைவது என்பது குறித்த அரிய தகவல்களை கூபப் பிரஸ்னம் எனும் ஜோதிட ஆரூடம் தெளிவுபடுத்துகிறது.

மய மதத்தில் மயன், புதுமனையில் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்பதை அறியும் நுட்பத்தை `தொடுகுறி’ என்ற பெயரில் விவரிக்கிறார்.

சிறுவன் ஒருவனைக் கிழக்கு நோக்கி நிற்கச் செய்யவேண்டும். மற்றொரு சிறுவனைக் கொண்டு முதலாமவனின் உடலைத் தொடச் சொல்ல வேண்டும். அப்போது இரண்டாவது சிறுவன் முதலாம வனின் தலை, தோள் மற்றும் உடலின் வடமேற்கு பாகத்தில் தொட் டால், அந்த இடத்தில் நிலத்துக்கு அடியில் 7 முழத்தில் தண்ணீர் உண்டு. அதேபோல் முகம், கண், தொடை ஆகியவற்றை தொட்டாலும் 7 முழ ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்.

கழுத்து, நெற்றி, வலது கால் ஆகிய இடங்களில் தொட்டால், 11 முழ ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். மார்பு, தென்கிழக்கு பாகங்களில் தொட்டால் அதிக ஆழம் தோண்ட வேண்டியது இருக்கும்.

விரல் மற்றும் உடலின் தென்கிழக்கு பாகங்களில் தொட்டால், 9 முழம் ஆழத்திலும், இடுப்பு, பாதம் ஆகிய பகுதிகளைத் தொட்டால் அந்த இடத்தில் நீர் இல்லை எனவும் அறியமுடியும் என்கிறார் மயன்.