திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

10 பொருத்தங்கள் மட்டும் போதுமா?

திருமணப் பொருத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமணப் பொருத்தம்

இரண்டு பேருடைய ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரியான ஆயுள் பாவம் இருக்கவேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது,10 பொருத்தங்களை மட்டும் பார்க்காமல் மேலும் சில அம்சங்களையும் கவனிக்கவேண்டும். ஆண் பெண் இருவரின் ஜாதகங்களிலும் உள்ள முக்கியமான அம்சங்களைத் தனித்தனியே ஆய்வுசெய்த பிறகே பொருத்தம் பார்க்க வேண்டும். தனித்தனியே அந்த ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களாக இருக்கின்றனவா எனப் பார்ப்பது மிகவும் முக்கியம்.

அடுத்ததாக, அந்த ஜாதகர்கள் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்க இருக்கும் தசா புக்திகளைப் பார்க்கவேண்டும்.

இரண்டு பேருடைய ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரியான ஆயுள் பாவம் இருக்கவேண்டும். ஒருவருக்குக் குறைந்த கால வாழ்க்கையும் மற்றொருவருடைய ஜாதகத்தில் நீண்ட ஆயுள் பாவமும் இருந்தால் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கக் கூடாது.

இல்லறம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், தாம்பத்திய உறவு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். அதற்கு, இருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறாரா என்பதைக் கவனிக்கவேண்டும்.

செவ்வாய்தோஷம் இருக்கிறதா, இல்லையா... இருந்தால் தோஷம் நிவர்த்தியாகி இருக்கிறதா என்ற கோணத்தில் இருவருடைய ஜாதகத்தையும் பரிசீலிக்கவேண்டும். அதேபோல், நாகதோஷம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒருவேளை நாகதோஷம் இருந்தால், அந்த தோஷம் பாதிக்காதபடி ஏதேனும் விதிவிலக்கான கிரக அமைப்புகள் இருக்கின்றனவா என்றும் ஆய்வு செய்யவேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, அடுத்தடுத்த ராசிகளில் உள்ளவர்களுக்கு மணமுடிக்கக் கூடாது. ஏனென்றால், ஏழரைச் சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலகட்டங் களில் இருவருமே மிகவும் சிரமப்படுவார்கள். இருவருக்கும் இடையே சண்டைச் சச்சரவு மற்றும் மனமாச்சர்யங்கள் ஏற்படும்.

திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம்

குறிப்பாக, ஜாதகக் கட்டத்தில் 2, 5, 7, 8, 9 ஆகிய ஐந்து இடங்களையும் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டும். 2-ம் இடம் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு உரியது. 5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம்; வம்ச விருத்திக்குக் காரணமாகும். 7-ம் இடம் கணவன் மனைவி அந்நியோன்யத்துக்கும், 8-ம் இடம் ஆயுள் பாவத்துக்கும், 9-ம் இடம் சுகங்களை அனுபவிப்பதற்கும் காரகத்துவம் பெறுகின்றன. ஆகவே, இந்த ஐந்து ஸ்தானங்களையும் கவனமாக ஆய்ந்து சொல்லவேண்டும்.

ஆண் பெண் இருவரின் ஜாதகங்களிலும் குருபகவான் வலுப்பெற்று இருப்பதுடன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும்.

7-ம் இடத்தின் மீதோ அல்லது 7-ம் இடத்தின் அதிபதியின் மந்தோ குருவின் பார்வை இருந்தால், சந்தோஷமான திருமண வாழ்வு அமையும். சனியும் செவ்வாயும் லக்னாதிபதிகளாகவோ அல்லது யோக காரகர்களாகவோ இருப்பதும் திருமண வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும்.