Published:Updated:

கோபக்காரர்கள்தான், ஆனால்... - `அவிட்டம்' நட்சத்திர குணாதிசயங்கள் என்னென்ன?

கே.பி.வித்யாதரன்

இவர்களைப் பொறுத்தவரை, துரோகியை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். எந்த வழக்கையும் வாதாடி வெற்றி காண்பர்.

'அவிட்டம்'
'அவிட்டம்'

செவ்வாயின் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். 'அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகவே, இது தேவ நட்சத்திரம்' என்கிறது ஒரு நூல். https://bit.ly/2YCcpkK

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்டமே சிதறினாலும் அச்சம்கொள்ளாத வீரர்கள். அடுத்தவர் தயவில் வாழமாட்டார்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும் கௌரவமாக இருக்க நினைப்பார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இவர்களுக்குப் பொருந்தும். உண்மையைத் தவிர வேறொன்றும் இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் சார்ந்திருக்கும் இனம், மொழி, நாட்டுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கமாட்டார்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பர். சுயநலமில்லாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பர். மதியாதார் தலைவாசல் மிதியாதவர்கள் இவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் வல்லவர்களுக்கு வல்லவராகவும் விளங்குவர் என்று சந்திர காவியம் எனும் நூல் கூறுகிறது. வீண் சண்டைக்குப் போகமாட்டார்கள். ஆனால், வந்த சண்டையை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். அடுத்தவர்களுக்கு செலவு வைக்க மாட்டார்கள். வாழ்க்கைப் போராட்டங்களைக் கடந்து வெற்றி காண்பர்.

கோபக்காரர்கள்தான், ஆனால்... - `அவிட்டம்' நட்சத்திர குணாதிசயங்கள் என்னென்ன?

இவர்களைப் பொறுத்தவரை, துரோகியை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். எந்த வழக்கையும் வாதாடி வெற்றி காண்பர். பூமி மீது தீராத பாசமும் நேசமும் கொண்டிருப்பர். அதனால், இவர்களில் பலர் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பெரிய பதவி வகிக்கும் வாய்ப்பு உருவாகும். காவல் துறையிலும் சமூகத்தைக் காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவர். இவர்கள் பட்டினி கிடந்தாலும் வந்தவருக்கு வயிறார உணவளிப்பர். விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள் இவர்கள்.

மனைவி, பிள்ளை, பெற்றோர், சகோதரர் என்று கூட்டாக வாழ ஆசைப்படுவர். குற்றம் சொல்பவர்களை நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் கோபக்காரர்கள். அதேநேரம், 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்' என்பதைப்போல, ஒருவர்மீது கோபமிருந்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளைத் தக்க நேரத்தில் செய்துகொடுக்கும் நல்லவர்கள். இலவசப் பொருளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பால் முன்னேற விரும்புவர். முத்து, பவழம் போன்ற ரத்தினங்களை விரும்பி அணிவர்.

உற்றார், உறவினர்களைவிட அந்நியர்கள் மீது அதிகப் பாசமுடையவராகவும் மத நம்பிக்கை உடையவராகவும் இருப்பர். சமூக சீர்திருத்தவாதியாகவும் மூடநம்பிக்கையை வேரறுப்பவராகவும் இருப்பர். நடைமுறைக்கு ஏற்றதை மட்டுமே பின்பற்றுவர். இவர்களுக்குப் பொய் பேசத் தெரியாது. பொய் பேசுபவர்களைக் கண்டால் பொங்கியெழுவர். கண்டிப்புடன் கறாராகவும் இருப்பர். விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்கள். மாவட்ட - மாநில அளவில் விளையாடி வெற்றி பெறுவர். பகட்டான வாழ்க்கையும் பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்குப் பிடிக்காது.

கோபக்காரர்கள்தான், ஆனால்... - `அவிட்டம்' நட்சத்திர குணாதிசயங்கள் என்னென்ன?

தன்னம்பிக்கை உள்ளவர்கள். போராடக்கூடிய வல்லமை பெற்றவர்கள். அனுபவ அறிவால் பெற்றதை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர்கள். 13 வயது முதல் 22 வயது வரை போராட்ட விளிம்புக்கே செல்வர். இவர்களில் சிலர், கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போகும். ஆனால், 'அவிட்டத்தினர் தவிட்டுப் பானையில் தங்கம் எடுப்பார்கள்' என்ற பழமொழிக்கு ஏற்ப, 24, 27 வயதிலிருந்து எல்லா வளங்களையும் பெறுவர். யாரையும் சார்ந்திருக்க பிடிக்காது. 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவர். இளம் வயதைக் காட்டிலும் மத்திம வயதிலிருந்து நிம்மதியும் கவலையற்ற வாழ்க்கையும் அமையும். அடிமைத்தனம், மூடத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வெற்றி வாகை சூடுவர்.

> அவிட்ட நட்சத்திர குணாதிசயங்களை முழுமையாகவும், பலன்கள் மற்றும் பரிகாரங்களை விரிவாகவும் 'அஷ்ட வசுக்கள் பிறந்த அவிட்ட நட்சத்திரம்!' https://www.vikatan.com/spiritual/astrology/avittam-star-characteristics எனும் தலைப்பில் சக்தி விகடன் இதழில் வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/