Published:Updated:

அஷ்ட வசுக்கள் பிறந்த அவிட்ட நட்சத்திரம்!

நட்சத்திர குணாதிசயங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்

நட்சத்திர குணாதிசயங்கள்

அஷ்ட வசுக்கள் பிறந்த அவிட்ட நட்சத்திரம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
நட்சத்திர குணாதிசயங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்

செவ்வாயின் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். `அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகவே, இது தேவ நட்சத்திரம்’ என்கிறது ஒரு நூல்.

தன்னுடன், தந்தை தாயார் தன்னையுஞ் சேர்ந்து வாழும்

பொன்னுடன் வெள்ளி தானும் புணர்ந்திடு மார்பு தோளும்

அன்னமின் நடையினானே அவிட்ட நாள் தோன்றினானே...

- என்கிறது, நட்சத்திர மாலை. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துப் பேசுபவர்; தாய், தந்தையைத் தனித்துவிடாமல் அவர்களுடைய ஆயுள்காலம் வரை பேணிக் காப்பவர்; பொன், வெள்ளி ஆபரணங்களை அணிபவர்; பூமி அதிரும்படி நடக்காமல் மென்மையாக நடப்பவர்; கலைகள் பல கற்றுத் தேர்ந்தவர்; வேந்தர்களால் விரும்பப்படுபவர் என்பது பொருள்.

அஷ்ட வசுக்கள் பிறந்த அவிட்ட நட்சத்திரம்!

ஜாதக அலங்காரம், `நீங்கள் ஒழுக்கமுள்ளவர்; தொழில் செய்பவர்; வாதிடுபவர்; அஞ்சாமல் எதிரிகளை எதிர்கொள்பவர்: மூக்கும் புறங்காலும் உயர்ந்திருப்பவர்; விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளாதவர்; அழகு, அறிவு, அடக்கம் உடையவர்; அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர்; பெற்றோரால் விரும்பப்படுபவர்’ என்று விவரிக்கிறது. பிருகத்ஜாதகமோ, `நீங்கள் சங்கீதத்தை விரும்புபவர்; பராக்கிரமம் வாய்ந்தவர்’ என்று விவரிக்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அண்டமே சிதறினாலும் அச்சம்கொள்ளாத வீரர். அடுத்தவர் தயவில் வாழமாட்டீர்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும் கௌரவமாக இருக்க நினைப்பீர்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது உங்களுக்குப் பொருந்தும். உண்மையைத் தவிர வேறொன்றும் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் சார்ந்திருக்கும் இனம், மொழி, நாட்டுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கமாட்டீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பீர்கள். சுயநலமில்லாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பீர்கள். மதியாதார் தலைவாசல் மிதியாதவர் நீங்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் வல்லவர்களுக்கு வல்லவராகவும் விளங்குவீர்கள் என்று சந்திர காவியம் எனும் நூல் கூறுகிறது. வீண் சண்டைக்குப் போகமாட்டீர்கள். ஆனால், வந்த சண்டையை ஒரு கை பார்க்காமல் விடமாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு செலவு வைக்க மாட்டீர்கள்.வாழ்க்கைப் போராட்டங்களைக் கடந்து வெற்றி காண்பீர்கள்.

உங்களைப் பொறுத்தவரை, துரோகியை ஒருபோதும் மன்னிக்கமாட்டீர்கள். எந்த வழக்கை யும் வாதாடி வெற்றி காண்பவர் நீங்கள் என்று துய்ய கேரளம் எனும் நூல் கூறுகிறது. பூமி மீது தீராத பாசமும் நேசமும் கொண்டிருப்பீர்கள். அதனால், உங்களில் பலர் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பெரிய பதவி வகிக்கும் வாய்ப்பு உருவாகும். காவல் துறையிலும் சமூகத்தைக் காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவீர்கள். நீங்கள் பட்டினி கிடந்தாலும் வந்தவருக்கு வயிறார உணவளிப்பீர்கள். விருந்தோம்பலில் தலைசிறந்தவர் நீங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனைவி, பிள்ளை, பெற்றோர், சகோதரர் என்று கூட்டாக வாழ ஆசைப்படுவீர்கள். குற்றம் சொல்பவர்களை நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் கோபக்காரர் நீங்கள். அதேநேரம், ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்’ என்பதைப்போல, ஒருவர்மீது கோபமிருந்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளைத் தக்க நேரத்தில் செய்துகொடுக்கும் நல்லவர். இலவசப் பொருளை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். கடின உழைப்பால் முன்னேற விரும்புவீர்கள். முத்து, பவழம் போன்ற ரத்தினங்களை விரும்பி அணிவீர்கள்.

அஷ்ட வசுக்கள் பிறந்த அவிட்ட நட்சத்திரம்!

உற்றார், உறவினர்களைவிட அந்நியர்கள் மீது அதிகப் பாசமுடையவராகவும் மத நம்பிக்கை உடையவராகவும் இருப்பீர்கள். சமூக சீர்திருத்தவாதியாகவும் மூடநம்பிக்கையை வேரறுப்பவராகவும் இருப்பீர்கள். நடைமுறைக்கு ஏற்றதை மட்டுமே பின்பற்றுவீர்கள். உங்களுக்குப் பொய் பேசத் தெரியாது. பொய் பேசுபவர்களைக் கண்டால் பொங்கியெழுவீர்கள். கண்டிப்புடன் கறாராகவும் இருப்பீர்கள். விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்கள். மாவட்ட - மாநில அளவில் விளையாடி வெற்றி பெறுவீர்கள். பகட்டான வாழ்க்கையும் பஞ்சு மெத்தை உறக்கமும் உங்களுக்குப் பிடிக்காது.

தன்னம்பிக்கை உள்ளவர். போராடக்கூடிய வல்லமை பெற்றவர். அனுபவ அறிவால் பெற்றதை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். 13 வயது முதல் 22 வயது வரை போராட்ட விளிம்புக்கே செல்வீர்கள்.உங்களில் சிலர், கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போகும். ஆனால், ‘அவிட்டத்தினர் தவிட்டுப் பானையில் தங்கம் எடுப்பார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, 24, 27 வயதிலிருந்து எல்லா வளங்களையும் பெறுவீர்கள். யாரையும் சார்ந்திருக்க உங்களுக்குப் பிடிக்காது. 37 வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். இளம் வயதைக் காட்டிலும் மத்திம வயதிலிருந்து நிம்மதியும் கவலையற்ற வாழ்க்கையும் அமையும். அடிமைத்தனம், மூடத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

முதல் பாதம்

(செவ்வாய் + சனி + சூரியன்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சூரியன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீதி, நியாயத்துக்குத் தலைவணங்குவார்கள். தங்களிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கொடுத்துதவும் தயாள குணமுடையவர்கள். மற்றவர்கள் செல்லும் பாதையில் பயணிக்காமல், தங்களுக்கென தனிப் பாதை ஒன்றைக் காண்பார்கள். குடும்பத்தினரே இவர்களைத் தவறாக நினைத்தாலும் தயங்காமல் அவர்களைப் புறந்தள்ளு வார்கள். அவர்கள்கூட நம்மைப் புரிந்துகொள்ளவில்லையே என்று சில நேரங்களில் வருந்துவார்கள்.

படிப்பில் பிரகாசிப்பார்கள். இளங் கலைப் படிப்பை ஒரு பிரிவிலும், முதுகலைப் படிப்பை மற்றொரு பிரிவிலுமாகப் படிக்க நேரிடும். நண்பர்கள் நூறு பேர் இருந்தாலும் இவர்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர்கள் ஒரு சிலர்தான். தவறு செய்தவர்களே ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் மனமிரங்கி மன்னிப்பார்கள். எல்லா உணவையும் விரும்பி உண்பார்கள். இவர்களில் பலர் பேராசிரியர், நீதிபதி, சட்ட வல்லுநர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் போன்றவர்களாகவோ சினிமா, அரசியல் போன்ற துறையிலோ சிறந்து விளங்குவார்கள்.

காதலித்தவரையே கரம் பிடிப்பார்கள். வாழ்க்கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வார்கள். நெருங்கிய உறவினர்களானாலும் அளவாகப் பழகுவார்கள். 29 வயதிலிருந்து வாழ்க்கை பல திருப்பங்களுடன் அமையும். 34 வயதில் ஆடம்பர வாழ்வுக்கு அடிபோடுவார்கள்.

பரிகாரம்: திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் வழித்தடத்தில் இருக்கும் தகட்டூரில் மூலவராக அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தியை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் வளம் சேரும்.

இரண்டாம் பாதம்

(செவ்வாய் + சனி + புதன்)

ரண்டாம் பாதத்துக்கு அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் காய் நகர்த்துவதில் வல்லவர்கள். இடி போல அடி விழுந்தாலும் அதிர்ச்சியடையாமல் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்கள். கலைகளில் ஆர்வமுடையவர்கள், ஆதலால் எல்லாவற்றையும் கற்றறியவேண்டும் என்று நினைப்பார்கள்.

எதிரிகளை நேரடியாகப் பழி தீர்க்காமல் மறைமுகமாக ராஜதந்திரத்துடன் கலங்கடிக்கச் செய்வார்கள். குடும்பத்தார்மீது அதிகப் பற்றும் பாசமும் வைத்திருப்பார்கள். பெற்றோருக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பார்கள். அதற்கு ஏற்ற வண்ணம் செயல்களைச் செய்வார்கள்.

தவறுக்குத் துணை போகமாட்டார்கள். முடிந்தவரை தவறானவர்களின் மனதையும் மாற்றிவிடுவார்கள். குழந்தைப் பருவத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் தெரியாது. ஆகவே எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். அதனால் பலருடைய விமர்சனத்துக்கு ஆளாவார்கள். இவர்களில் பலர் வழக்கறிஞர், புகைப்படக் கலைஞர், நடிகர் - நடிகை, ஆசிரியர் ஆகியோராகப் பிரகாசிப்பார்கள். இன்னும் சிலர் வனத் துறை, சுற்றுலா போன்ற துறைகளில் பணிபுரிவார்கள்.

பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே திருமணம் செய்துகொள்வார்கள். வறுத்த, பொரித்த உணவுகளை வயிறார உண்பார்கள். இயற்கை வளங்களை அதிகம் நேசிப்பார்கள், ஆதலால் பனி படர்ந்த புல்வெளிகளில் நடக்கவும் அருவியில் குளிக்கவும் பிடிக்கும்.

பெரிய முதலீடு செய்யாமல் சின்ன முதலீட்டில்தான் வியாபாரம் தொடங்குவார்கள். ஆனால் குறுகிய காலத்தில் பெரிய முதலீட்டையும் செய்யும் அளவுக்கு வளர்ந்து விடுவார்கள். உணவகம், காய்கறி மண்டி, அரிசி மண்டி போன்றவற்றை வைத்து முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள். 26 வயது முதல் புதிய தொடர்புகள் கிடைக்கும். 29 வயதிலிருந்து இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும்.

பரிகாரம்: சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணி எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வழிபடுங்கள்.

மூன்றாம் பாதம்

(செவ்வாய் + சனி + சுக்கிரன்)

மூன்றாம் பாதத்துக்கு அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து உணர்வுபூர்வமாக செயல்படுவதில் வல்லவர்கள். அகன்ற கண்களும் வசீகரமான புருவமும் கொண்டவர்கள். வாசனைத் திரவியங்கள், ஆடம்பர ஆடை ஆபரணங்களை அதிகம் விரும்புவார்கள்.

குடும்பத்தினருடன் ஒன்றிப் போகக் கூடியவர்கள்தான் என்றாலும் சில நேரங்களில் கோபம் வந்துவிட்டால் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டித் தீர்ப்பார்கள்.

சுகவாசியான இவர்கள் எந்தச் செயலையும் உடனே முடிக்காமல் இழுத்தடித்து முடிப்பார்கள். உணவு சூடாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எப்பேர்ப்பட்ட தந்திரக்காரர்களையும் சமாளிக்கும் வல்லமை இவர்களிடம் உண்டு.

சில நேரம், இவர்கள் எவ்வளவு நேர்த்தியாக வேலை செய்தாலும் மற்றவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். ஊனமுற்றோரைக் கண்டால் மனம் இளகுவார்கள். இவர்களுடைய ஆழ் மனதுக்குள் இருக்கும் ரகசியங்களை எவரும் கண்டறிய முடியாது.

காதலித்தவரையே கரம் பிடிப்பார்கள். வாழ்க் கைத் துணைவர் மற்றும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுப்பார்கள். பயணங்களை அதிகம் விரும்புவார்கள். குத்துச் சண்டை, கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பார்கள். பலர், அழகு நிலையம் வைத்து நடத்துவார்கள். கட்டடம், வேளாண்மை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களில் பலர், ஆசிரியராகச் சிறந்து விளங்குவார்கள். 30 வயதிலிருந்துதான் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும்.

பரிகாரம்: திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுவேத விநாயகரையும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியையும் வணங்குதல் நலம்.

நான்காம் பாதம்

(செவ்வாய் + சனி + செவ்வாய்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்களுக்கு ஆளுமைத் திறன் அதிகமாக இருக்கும். சிறு வயதிலேயே பலரையும் நம்பி ஏமாற்றமடைந்து பண்பட்டதால், மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். இவர்கள் முன்கோபிகள். திட்டவட்டமான முடிவுகள் எடுக்காமல் திணறுவார்கள். தற்பெருமையும் சுயநலமும் சற்று அதிகமாகவே இருக்கும்.

இவர்களில் பெரும்பாலோர், ‘தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதானே’ என்ற எண்ணமுடையவர்கள். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் சந்நியாசியைப் போல் தனிமையை விரும்புவார்கள். உறவினர், நண்பர் ஆகியோரிடமே இவர்கள் உதட்டளவில்தான் சிரித்துப் பேசுவார்கள்.

கேளிக்கை, விளையாட்டில் நாட்டமிருக்கும் அளவுக்குப் படிப்பில் ஆர்வம் இருக்காது. இவர்கள் உண்மை பேசினாலும் சிலர் அதை நம்பமாட்டார்கள். காதலில் அதிக நாட்டம் இருக்காது.

வாழ்க்கைத் துணைவர், பிள்ளைகளின் பாசத்தை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, முயற்சியும் செய்வார்கள். ஆனால் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும். சிலர், கேளிக்கைகளில் வீணாகப் பொழுதைக் கழிப்பார்கள். விதவிதமான உணவு களை உண்பதென்றால் மிகவும் பிடிக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ள பல யுக்திகளைக் கையாள்வார்கள்.

உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அன்பாகப் பேசி, அவர்கள் சொல்லும் குறைகளைக் கேட்டறிவார்கள். அவற்றை உயரதிகாரிகளிடம் எடுத்துச்சொல்லி நல்ல தீர்வையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.34 வயதிலிருந்து இவர்களது வாழ்வில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

பரிகாரம்: மாயவரம் - கும்பகோணம் மார்க்கத் திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் கோயில்கொண்டிருக் கும் ஸ்ரீபைரவரை தரிசித்தல் நலம்.

அவிட்டம்

நட்சத்திர தேவதை : அஷ்ட வசுக்கள்.

வடிவம் : மத்தள

வடிவமுடைய 4 நட்சத்திரங்களின் தொகுப்பு.

எழுத்துகள் : க, கி, கு, கூ.

ஆளும் உறுப்புகள் : 1, 2-ம் பாதங்கள் - முட்டி, முட்டி எலும்புகள். 3, 4-ம் பாதங்கள் - கணுக்கால், காலில் முட்டிக்குக் கீழுள்ள பகுதி.

பார்வை : மேல்நோக்கு.

பாகை : 293.20 - 306.40

நிறம் : வெண்மை.

இருப்பிடம் : கிராமம்.

கணம் : ராட்சச கணம்.

குணம் : உறுதி.

பறவை : வண்டு.

மிருகம் : பெண் சிங்கம்.

மரம் : பாலில்லாத வன்னி மரம்.

மலர் : செந்தாமரை.

நாடி : மத்திம நாடி.

ஆகுதி : அத்தி, வில்வம்.

பஞ்சபூதம் : ஆகாயம்.

நைவேத்யம் : பாயசம்.

தெய்வம் : ஸ்ரீஅனந்தபத்மநாபன்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ச்ரவிஷ்டா தேவதா: வந்தே வஸந் ரதவராஸ்ரிதான்

சங்கம் சக்ராங்கிதகரான் க்ரீடோஜ்வல மஸ்தகான்

அதிர்ஷ்ட எண்கள் : 1, 3, 9.

அதிர்ஷ்ட நிறங்கள் : பழுப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வியாழன், செவ்வாய்.

அதிர்ஷ்ட ரத்தினம் : ப்ளட் ஸ்டோன்.

அதிர்ஷ்ட உலோகம் : வெள்ளி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

பூதத்தாழ்வார், கௌசிக சுவாமி, சிவகங்கை சுவாமி, லெனின்.

அவிட்ட நட்சத்திரத்தில்...

திருமணம், சீமந்தம், உபநயனம், தாலிக்குப் பொன் உருக்குதல், குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், குழந்தைக்குச் சிகை நீக்கி காது குத்துதல், பள்ளியில் சேர்த்தல், மருந்துண்ணல், வாகனம் வாங்குதல், வாகனம் ஏறுதல், கடல் பயணம் ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் கிடைக்கும்.

பரிகார ஹோம மந்திரம்

அஷ்டௌ தேவா வஸவ: ஸோம்யாஸ:

சதஸ்ரோ தேவீரஜரா: ச்ரவிஷ்டா:

தே யஜ்ஞம் பாந்து ரஜஸ: பரஸ்தாத்

ஸம்வத்ஸரீண மம்ருதஹஸம் ஸ்வஸ்தி

யஜ்ஞம் ந: பாந்து வஸவ: புரஸ்தாத்

தக்ஷிணதோஅபியந்து ச்ரவிஷ்டா:

புண்யந் நக்ஷத்ர-மபிஸம்விசாம

மா நோ அராதிரகசஹஸம் ஸாகன்

அட்டையில் : ஸ்ரீசுவேத விநாயகர், வலஞ்சுழி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism