பிரீமியம் ஸ்டோரி

வேதம் மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்கிறது. இந்தக் காலத்தை 9 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய காலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகள் வகுக்கப்பட்டன. அதுவே தசா காலமாகும்.

தசாகால பலன்கள்
தசாகால பலன்கள்

தசா காலத்தின் உட்பிரிவாக `புக்தி’ எனும் அந்தர தசையிலும் கிரக காலங்கள் வரிசைப்படுத்தப் படுகின்றன. ஒருவரின் தசா காலம் அவருடைய பிறந்த நேரம், ஊர், தேதி ஆகியவற்றின் அடிப்படையில் - அவரின் ஜன்ம நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

இனி தசா கால கிரக வரிசையை அறிவோம்...

கேது - 7 வருடங்கள்

சுக்கிரன் - 20 வருடங்கள்

சூரியன் - 6 வருடங்கள்

சந்திரன் - 10 வருடங்கள்

செவ்வாய் - 7 வருடங்கள்

ராகு - 18 வருடங்கள்

குரு - 16 வருடங்கள்

சனி - 19 வருடங்கள்

புதன் - 17 வருடங்கள்


இவைதான் கிரகங்களின் தசா கால வரிசை. தசா கால வரிசையும் வருடங்களும் மாறாதவை. குறிப்பிட்ட கிரகங்களுக்கான தசா காலங்கள் நடக்கும்போது, குறிப்பிட்ட பலன்கள் விளையும் என்பது ஜோதிடக் கிரந்தங்களின் கூற்று. ஜாதகப்படி மற்ற கிரகங்களின் நிலைப்பாடுகளையும் நடப்பு தசா காலத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து செயல்பட்டால், காரிய வெற்றி பெறலாம்; பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்பது ஜோதிட ஆன்றோர் தரும் அறிவுரை.

சரி, பிறக்கும்போது ஒருவரின் தசா காலம் எந்தக் கிரகத்துக்கானது, நடப்பு தசா காலம் என்ன என்பதை எங்ஙனம் அறிந்துகொள்வது?

தசா காலம் கணக்கிடும் முறை


ஜாதகத்தில் குறிப்பிட்ட ஜாதகரின் பிறப்பு நேர தசா கால இருப்பு விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து நடப்பு தசா கால விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

27 நட்சத்திரங்களையும் 9 ஒன்பது என்ற எண்ணிக்கையில் மூன்று பிரிவுகளாக்கி, ஒவ்வொரு பிரிவிலும் உள்ள முதல் மூன்று நட்சத்திரங் களுக்கு ஒரு கிரகம், அடுத்த மூன்றுக்கு வேறொரு கிரகம் என தசா காலம் கணக்கிடப்படும். அந்த அடிப்படையில் உங்கள் ஜன்ம நட்சத்திரப்படி நீங்கள் எந்த தசாகாலத்தில் பிறந்துள்ளீர்கள் என்று அறியலாம். அந்த விவரம்:

அசுவினி, மகம், மூலம் - கேது

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - சந்திரன்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்

திருவாதிரை, சுவாதி சதயம் - ராகு

புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - குரு

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்

உதாரணமாக ஜாதகர் ஒருவர் அசுவினி நட்சத்திரக்காரர் எனில், அவர் கேது தசை நடக்கும் காலத்தில் பிறந்திருக்கிறார் என்று கணக்கிடலாம். கேது தசை 7 வருடங்கள்.

இதில், ஜாதகர் கேது தசா காலத்தின் 3-வது வருடத்தில் மத்திய பாகத்தில் பிறந்துள்ளார் எனில், அவர் பிறக்கும் போது கேது தசா காலம் இருப்பு: நான்கு வருடங்கள் 6 மாதங்கள் என கணிக்கிடுவார்கள். இந்த இருப்பு காலம் முதல் அடுத்த தசா கால வருடங்களைக் கூட்டி நடப்பு தசா காலம் என்ன என்பதையும் அறிய முடியும்.

இனி, குறிப்பிட்ட தசா காலத்தில் என்னென்ன பலன்கள் விளையும் என்பதைச் சுருக்கமாக அறிந்துகொள்வோமா?

’தசா கால' பலன்கள்!'


கேது தசை: ஜாதகருக்குக் கேது தசை நடைபெறுகிறது எனில், வெளி நாட்டு பயணம் வாய்க்கும். ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து அந்தப் பயணத்தால் லாப பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த தசா காலத்தில் கொஞ்சம் கவனத் துடன் செயல்படவேண்டும். அரசன், எதிரிகள், திருடர்களால் துன்பங்கள் நேரிடலாம். ஆயுதத்தால் காயமும் உஷ்ணத்தால் நோய்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவருக்கு எவ்வித தீங்கும் செய்யாதபோதும் அவர்களால் கெட்ட பெயர் ஏற்படலாம். பெண்களால் துன்பமும் குழப்பமும் நேரலாம். செல்வ இழப்பு நேரிடும். ஆகவே புதுத் தொழில்களில் இறங்குவது, பங்குச் சந்தை முதலீடுகள் ஆகியவற்றில் கவனம் தேவை.

சுக்ர தசை: ஜாதகர் கேளிக்கைகள் மற்றும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயங்களை அடைவார். நல்ல வாகனங்கள், கால்நடைச் செல்வங்கள், விலையுயர்ந்த ஆபரணங்கள் சேர்க்கை அமையும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கைகூடும். கடற்பயணம் அமையும். அறிவார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அரசாங்க விருதுகளும் பரிசுகளும் கிடைக்கும். பொதுவாக சுக்ர தசையில் திருமண பாக்கியம் கைகூடும். செல்வ வளம் அதிகரிக்கும். அதேநேரம் வீண் பதற்றம், மனக்கவலைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சூரிய தசை: சூரியன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க அவரின் தசா காலத்தில் நல்ல பலன்களை அருள்வார். பயணங்கள் கைகூடும். அசாத்தியமான காரியங்களால் செல்வம் சேரும். வியாபாரத்தில் லாபம், கடமையில் ஈடுபாடு கூடும்; மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியன் பலமற்று இருந்தால் நெருப்பு மற்றும் விலங்குகளால் ஆபத்து நேரிடும். மனைவி மக்களுக்குத் துன்பம், சொத்து அழிவு ஆகியவை ஏற்படலாம்.

சந்திர தசை: சந்திர தசையில் மன அமைதி, வியாபாரத்தில் வெற்றி, நல்ல உணவு, மணப் பேறு, நகை ஆடைகள் சேர்க்கை, நவரத்தினக் கற்களால் லாபம், நிலச் சேர்க்கை ஆகியன அமையும்.

சந்திர தசை பலன்களை அறிய சந்திரனின் வலிமையைக் காண வேண்டும். சுக்லபட்சம் ஆரம்பம் முதல் தசமி வரையிலும் மத்திம பலனும், அதன் பிறகு வரும் கிருஷ்ண பட்ச பஞ்சமி வரை பூரண பலனும், அடுத்துவரும் அமாவாசை வரையிலும் அதம பலன்களும் வாய்க்கும். இந்தத் தசா காலத்தில் வேத மந்திரங்கள், தெய்வங்கள், அரச வெகுமானம் மூலம் செல்வம் சேரும். பெண்களால் சொத்து சேரவும் வாய்ப்பு உண்டு.

’தசா கால' பலன்கள்!'

செவ்வாய் தசை: நெருப்பு, அரசாங்கம், மருத்துவம் மூலம் செல்வம் சேர வாய்ப்பு உண்டு. இந்தத் தசா காலத்தின் நிறைவில் வழக்கு, நிலம், கால்நடைகள் மூலம் பணம் சேரும். சகோதரர்களுடன் வீண் சச்சரவுகள் ஏற்படலாம். தீய பெண்களுடனான சகவாசத்தைத் தவிர்க்கவேண்டும். உடல்நிலையைப் பொறுத்தவரையிலும் காய்ச்சல், ரத்த பாதிப்பு, பித்தக் கோளாறுகள் ஏற்படலாம்.

ராகு தசை: ராகு சுபக் கிரகங்களோடு சேர்ந்து சுபர் வீட்டில் இருக்க, இந்தத் தசாகாலம் சிறப்பான பலன்களை அளிக்கும். ராகு கன்னி, மீனம், விருச்சிகத்தில் இருக்க நன்மைகள் உண்டாகும்.

இந்த காலகட்டத்தில் ஜாதகர் இனம் கண்டறிய முடியாத நோயால் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. இடமாறுதல் பணியில் பிரச்னைகள், கண்களிலும் தலையிலும் பாதிப்பு, உறவினர் இழப்பு, வியாபார நஷ்டம், மனச் சஞ்சலம் ஆகியவை உண்டாகும். ஜாதகத்தை ஆய்ந்து உரிய பரிகாரங்களைச் செய்து பலன் பெறலாம்.

குரு தசை: நற்காரியங்களைச் செய்வார். குழந்தைப் பிறப்பு, அரசாங்க வெகுமானம், அறிஞர்களின் பாராட்டு, வாகனச் சேர்க்கை, அனைத்து விருப்பங்களும் நிறைவேறுதல் ஆகிய பலாபலன்கள் ஏற்படும். புதிய ஆடைகள், நல்ல வேலை ஆள்கள் அமைவது, சமூகத்தில் மரியாதை, பேச்சாற்றலால் புகழ் ஆகியவை கிடைக்கும். குரு சரியாக இல்லை எனில், காது நோய்களும் கப நோய்களும் ஏற்படலாம்; மூத்தோரைப் பிரிய நேரிடும்.

சனி தசை: இந்த தசா காலத்தில் சற்று சிரமங்கள் ஏற்படவே செய்யும். மனைவி குழந்தைகள் வாத நோயால் அவதியுறலாம். நெருங்கிய உறவினர்களுக்கு திடீர் நஷ்டங்கள் ஏற்படும். செல்வம் எதிர்பாராத வகையில் கரைய வாய்ப்பு உண்டு. உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அதேநேரம் சனி தசாகாலத்தில் யுத்தம் மூலம் செல்வம் சேரும். வேறு வசிப்பிடங்களுக்கு மாறுவீர்கள். ஜாதகத்தை ஆராய்ந்து தக்க பரிகாரங்களை செய்து, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்துவிட்டால் பாதிப்புகள் குறையும்.

புதன் தசை: நண்பர்களைச் சந்தித்தல், கற்றோரால் புகழப்படுதல், வசதியான வாழ்வு, பெரியோர்களின் ஆதரவு ஆகியவை உண்டாகும். மகிழ்ச்சியான மண வாழ்வு அமையும். உறவினர் குழந்தைகளுக்கு உங்களால் மகிழ்ச்சி உண்டாகும். அந்தணர்களின் ஆசியும் அதன் மூலம் செல்வச் சேர்க்கையும் ஏற்படும். இறை வழிபாடுகள் உங்கள் பலத்தை அதிகரிக்கும். இறையருளால் லட்சியத்தை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவரது வாழ்நாளில் அனைத்து தசாகாலங்களையும் ஜாதகர் சந்திக் கும் வாய்ப்பு அமையாது. குறிப்பிட்ட தசா காலங்களில், ஜாதகத்தில் கிரக நிலைகள் தரும் பலன்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட கிரகங்கள் சாதகமான நிலையிலிருந்தால், அந்தக் கிரகத்துக்கு உரிய தசா காலங்களில் நன்மைகள் அதிகம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள். தெய்வ பலம் நம் வாழ்வை மலரச் செய்யும்.

குழந்தை பாக்கியம்!
குழந்தை பாக்கியம்!

குழந்தை பாக்கியம்!

கைரேகை சாஸ்திரம் குழந்தை பாக்கியம் குறித்த ரேகை - மேடு அமைப்புகளை விளக்குகிறது. அதன்படி, தம்பதி இருவருக்கும் புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவுக்கு உரிய மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.

இதயரேகை நேர்க்கோடுபோல செங்குத் தாக அமையாமல், படத்தில் காட்டியுள்ளபடி புதன் மேட்டுக்குக் கீழே கிளைகளுடன் அமைந்து, புதன், சூரியன், சனி மேடுகளை கடந்து, குரு மேட்டின் மையப் பகுதியில் கிளையுடன் அமைந்திருக்க வேண்டும்.

திருமண ரேகை நல்ல நீளமாகவும் தெளிவாகவும் இளஞ்சிவப்பு நிறத்தில் திகழ, அதன் மீது தெளிவான செங்குத்துக் கோடுகள் (குழந்தை ரேகைகள்) காணப்பட வேண்டும்.

சுக்கிரமேடு குறுக்குக் கோடுகள் இல்லாமல் நன்கு உருண்டு திரண்டு பரந்துவிரிந்து காணப்பட வேண்டும். இதுபோன்ற அமைப்பு ஒருவருக்கு அமைந்துவிட்டால், குழந்தை பாக்கியம் உண்டு என அறியலாம்.

வாடகை வீடு
வாடகை வீடு

வாடகை வீடு மாறுகிறீர்களா?

குடியேறும் வீட்டில் வெளிச்சம் நன்றாக வரவேண்டும். அந்த வீடு தெருக்குத்து வீடாக இருந்தால் தவிர்த்து விடலாம். வேறு வழியே இல்லை; அப்படியான ஒரு வீடுதான் கிடைத்திருக்கிறது எனும் நிலையில், வீட்டுக்காரரிடம் சொல்லி, வீட்டு முகப்பில் சிறு விநாயகர் சிலை அல்லது திருவுருவப்படம் அமைப்பது நல்லது.

உள்ளே நுழையும்போது வாசற்படிக்கு இடப்புறம் அதிகம் இடம் அமைந்துள்ள வீடு விசேஷம். இல்லையெனில் இடது வலது இரு புறமும் சம அளவு இடம் அமைந்துள்ள வீடாகப் பார்க்கலாம்.

பிரதான கேட் அல்லது கதவுகள் நிலைப் படிகளில் விரிசல் இருந்தால் உடனடியாக சரிசெய்வது அவசியம்.

- கே.விஸ்வநாதன், சென்னை-17

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு