Published:Updated:

குரு பார்வையால் ஒளிபெறப்போகும் மிதுன ராசியினரின் திருக்கணித சனிப் பெயர்ச்சிப் பலன்கள்! #Astrology

சனிப் பெயர்ச்சி
சனிப் பெயர்ச்சி

அஷ்டம சனி ஆரம்பிக்கும்போது நாம் சில முன்னெச்சரிக்கையான விஷயங்களைச் செய்தோமானால் 'வருமுன் காப்போம்' என்பதுபோல் நம்மால் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24.1.2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் பலன்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

Saturn
Saturn

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் ஏழாமிடத்திலிருந்து எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்துக்குச் செல்கிறார். அஷ்டம சனி தொடங்குகிறதென்றாலே எல்லோருக்கும் மனத்தில் ஒரு பயம் இருக்கும். ஆனால், மிதுன ராசிக்காரர்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. அதற்குக் காரணம், மிதுன ராசிக்காரர்களுக்கு 'கண்டக சனி' என்று சொல்லக்கூடிய ஏழாமிடத்தில் சனி பகவான் இருக்கும் காலகட்டமாக அமைந்ததுதான்.

இந்தக் காலகட்டத்தில் மூன்று ஆண்டு காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. அதிலும் குறிப்பாக, 2019-ம் ஆண்டு மிதுன ராசியில் ராகு பகவான் இருக்க, தனுஷில் சனி ஒருவருக்கொருவர் பார்வை பெற்றிருந்தனர். இதனால், பல சிரமங்களை அனுபவித்து வந்தீர்கள். ஆனால், இப்போது சனி மகர ராசிக்குச் செல்ல, குரு பகவான் உங்களின் ராசியை நேரடியாகப் பார்ப்பதால், சுப பலன்கள் பலவும் உங்களுக்கு நிகழக் காத்திருக்கின்றன.

மகர ராசிக்கு ஜனவரி 24-ம் தேதி சனி பகவான் செல்ல இருக்கிறார். ஒரு ராசிக்கு சனி பகவான் சென்று, அதற்கு முந்தைய ராசியில் ஏதேனும் கிரகம் இருந்தால், அதைக் 'கோட்சார வேதை' என்று சொல்லுவார்கள். சனி இருக்கும் ராசிக்கு முந்தின ராசியில் வேறு கிரகங்கள் இருந்தால், அதற்கு 'கோட்சார வேதை' என்று பெயர். இப்படிப்பட்ட அமைப்பில் சனி பகவானால் நிகழும் அசுப பலன்கள் பாதி அளவுக்குக் குறைக்கப்படும் என்பது ஜோதிட விதி.

Gemini
Gemini

2020-ம் ஆண்டு முழுவதும் சனி பகவானால் நிகழும் சாதகமற்ற பலன்கள் நிகழாதவாறு குரு பகவான் பார்வை செய்கிறார். எனவே, மிதுன ராசிக்காரர்கள் அஷ்டமச் சனியால் கெடுதல் நடைபெறும் என்று பயப்படத் தேவையில்லை.

மிதுன ராசிக்கு சனி பகவான் பாக்கியஸ்தான அதிபதியாக வருகிறார். பாக்கியங்களைக் கொடுக்கக்கூடிய ஒரு கிரகம், சொந்த வீட்டில் ஆட்சியாக இருக்கும்போது சுப பலன்களைத் தருவார் என்பது ஒரு ஜோதிட விதி. மற்ற ராசியினருக்கு செய்யக்கூடிய அசுப பலன்களை உங்களுக்குச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

எப்போதெல்லாம் ராசியை குரு பகவான் பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அந்த ராசி ஒளி மிக்கதாகத் திகழும்.

அஷ்டம சனி ஆரம்பிக்கும்போது நாம் சில முன்னெச்சரிக்கையான விஷயங்களைச் செய்தோமானால் 'வருமுன் காப்போம்' என்பதுபோல் நம்மால் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, புதிதாகத் தொழில் தொடங்குவது, புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து முதலீடு செய்வது போன்ற காரியங்களை அஷ்டமச் சனியின் காலகட்டத்தில் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலையைத் தேடுவது கூடாது.

இந்த வேலையில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடமாறுதல் செய்ய நினைப்பவர்கள், தனக்குக் கிடைக்கப்போகும் வேலையை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, வேலையிலிருந்து விலக வேண்டும். 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று எதையும் செய்துவிடக் கூடாது. புதிதாகத் தொழில் தொடங்கும் காரியங்களையும் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பது நல்லது.

Signs
Signs

அஷ்டம சனியின் மிக முக்கியமான பலன் என்னவென்றால், பொருளாதாரச் சரிவு, நெருங்கிய உறவினரின் பிரிவு ஆகியவைதாம். பணம் ரீதியாக ஏற்படக்கூடிய பற்றாக்குறைகளைச் சரிசெய்யும் விதமாகச் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால் அஷ்டம சனியின் அசுப பலன்களிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

தாய்-தந்தையர், அண்ணன்-தம்பி, கணவன்-மனைவி ஆகியோருடன் பரஸ்பரம் வீண்வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த இடத்தைவிட்டு விலகிவிடுங்கள். அஷ்டம சனியின் நோக்கமே, ஒருவருக்கு எங்கு அடித்தால் வலிக்குமோ அந்த இடத்தைப் பார்த்து அடிப்பதுதான். நீங்கள் யார் மீது நம்பிக்கையோடு இருக்கிறீர்களோ அவர்கள் உங்களின் நம்பிக்கையை இழப்பார்கள்.

சனி பகவான் எந்தவிதக் கெடுதலையும் நமக்குத் தரமாட்டார். நாம் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் இருந்தால் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்வது எளிது.

திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்குத் திருமணம் தள்ளிப் போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதற்குத் தகுந்தாற்போல் உங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வது நல்லது. அஷ்டமச் சனியின் சாதகமான ஒரு பலன் என்று பார்த்தால், வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு உடனடியாக விசா வந்து சேரும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொருளீட்ட அந்நிய தேசங்களுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

கடுமையான கெடுபலன்களைத் தராமல் பிரிவு, மனஸ்தாபம் போன்றவற்றை உறவுகளுக்கிடையே ஏற்படுத்துவார். ஆகவே, நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகத் தியானம் அல்லது யோகா தெய்வ வழிபாடு ஆகியவற்றில் நம் மனதைச் செலுத்தினால் அஷ்டமச் சனியின் கெடுபலனிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

பரிகாரம்: மிதுன ராசிக்காரர்கள் பரிகாரமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று வரதராஜ பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வந்தால் அஷ்டம சனியின் பாதிப்புகளிலிருந்து முழுமையாகத் தங்களை விடுவித்துக் கொள்ளலாம்.

பின் செல்ல