Published:Updated:

பிரச்ன ஜோதிடமும் சுவாச பலன்களும்!

பிரச்ன ஜோதிடத்தில் சுவாச அடிப்படையில் பல அபூர்வத் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

பிரீமியம் ஸ்டோரி

ஒருவரின் பிறந்த நேரத்தை அடிப்படையாக வைத்து ஜாதகமும் அதைச் சார்ந்த பலன்களும் கணிக்கப்படும். அதேபோல், குறிப்பிட்ட விஷயத்துக்குப் பலன் வேண்டி ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்தின் அடிப்படையில் பலன் சொல்வதே பிரச்ன ஜோதிட முறையாகும்.

பிரச்ன ஜோதிடமும் 
சுவாச பலன்களும்!

பிரச்ன ஜோதிட முறை யில், கேள்வியாளர்கள் கேள்வி கேட்கும் நேரம், திசை, ஜோதிடரின் மூச்சு நிலை, குறிப்பிட்ட தருணத் தில் கேள்வியாளர் தன் உடம்பில் எந்த பாகத்தைத் தொடுகிறாரோ அதை ஒட்டிய ஸ்பரிச நிலை, மனோபாவம் முதலான பல விஷயங்களைக் கவனித்துப் பலன் கூறுவார்கள். இவற்றில் சுவாசப் பரிசீலனை மிகவும் முக்கியத்துவம் பெறும்.

பிரச்ன ஜோதிடத்தில் சுவாச அடிப்படையில் பல அபூர்வத் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இடது நாசி வழியே சுவாசம் வருவது சாதகமானது. ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமையில் வலது நாசி வழியே சுவாசம் பாய்வது சிறப்பு.

மாறுபட்டு இருந்தால் பாதகமான பலன் வாய்க்கும் என்கிறது பிரச்ன ஜோதிடம். அவ்வாறு சுவாசம் பாதகமாக அமைய நேரிட்டால் நல்ல உணவு, உறக்கம் எதுவுமே அமையாது. வீண் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எடுத்துக்கொண்ட காரியம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள், தங்களின் சுவாசம் இடதுபுறம் இருக்கும்போது கிளம்பி, வலது புறம் சுவாசம் இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தை அடைந்தால் விரும்பியவற்றை அடையலாம் என்பது பலன்.

பிரச்ன ஜோதிடமும் 
சுவாச பலன்களும்!
Sunil Kumar

சுவாசம் எவ்விதமான பூத தத்துவத்தைச் சேர்ந்தது என்பதை அறிவதும் மிக அவசியம். சுவாசமானது 16 அங்குலம் வரை வெளியேறினால், அது பிருத்வி ஆகிய நிலத் தத்துவம் ஆகும். 12 அங்குலம் எனில் நீர்த் தத்துவம்; 8 அங்குலம் எனில் நெருப்பு; 6 அங்குலம் எனில் வாயு, 3 அங்குலம் எனில் ஆகாயத் தத்துவம் என அறியலாம்.

வளர்பிறை பிரதமை நாளில் இடது நாசி வழியே வெளியேறும் சுவாசம் நிலத் தத்துவம் கொண்டதாக இருந் தால், நல்ல வீடு, முடிசூடா மன்னனாக வாழும் யோகம் அமையும். அதுவே நீர் தத்துவமாக அமைந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாகும். பொது நீர்நிலைகள் அமைக்க உதவி செய்வார்கள்.

நெருப்புத் தத்துவம் கொண்டதாக இருந்தால், எதிரிகள் மற்றும் நெருப்பால் பாதிப்பு உண்டாகும். சிவபெருமானை வழிபட்டு நன்மை அடையலாம். வாயு தத்துவம் எனில் திருடர் பயம், இருப்பிடம் விட்டு நீங்குதல் ஆகிய பலன்கள் ஏற்படும். ஆகாய தத்துவம் எனில் மந்திர ஞானம் ஸித்திக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவார்.

பிரச்ன பலன் கூறும் ஜோதிடர் ஒருவர் தினமும் அதிகாலையிலேயே தனது சுவாசம் பற்றி அறிந்துகொள்வார். அதன் அடிப்படையில் பிரச்ன பலன்கள் கூறுவது மரபு.

வளர்பிறை காலங்களில் குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி கேள்வி கேட்கப்படும் நிலையில், கேள்வி கேட்பவர் ஜோதிடரின் முன்பாகவோ இடது புறமாகவோ நின்றிருந்து, ஜோதிடரின் சுவாசம் இடதுபுறத்தில் சந்திரனின் ஆளுமையில் இருந்தால் ஜாதகரின் ஆசைகள் நிறைவேறும்.

தேய்பிறையில் கேள்வி கேட்கப்படும் நிலையில், ஜாதகர் ஜோதிடரின் பின்னே அல்லது வலப்புறத்தில் இருக்க, ஜோதிடருக்கு வலது புறம் சூரிய ஆளுமையில் சுவாசம் செல்லுமானால், எண்ணியவை நிறைவேறும்.

கர்ப்பிணிகள் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது அந்தப் பெண், ஜோதிடருக்கு சுவாசம் வரும் திசையில் நின்றிருந்தால், ஆண் குழந்தை என்று பலன் சொல்லலாம். சுவாசமும் திசையும் மாறும்போது பெண் குழந்தை எனலாம். ஜோதிடரின் இரு நாசிகளிலும் சுவாசம் செல்லும் நிலையில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பர் எனச் சொல்லலாம்.

திருட்டு அல்லது இழப்பு தொடர்பான கேள்விகளுக்கும் பஞ்சபூத தத்துவ சுவாச ஆய்வின்படி பலன் கூறலாம்.

இதுகுறித்து கேள்வி கேட்கப்படும் நிலையில் ஜோதிடரின் சுவாசம் நிலத் தத்துவப்படி இருந்தால், காணாமல் போன பொருள் பூமிக்கு அடியில் இருக்கும். நீர் தத்துவம் எனில், நீருக்கடியில் இருக்கும். காற்று தத்துவம் எனில், இருண்ட மூலையில் இருப்பதாகச் சொல்லும். நெருப்புத் தத்துவம் எனில் பூமிக்கு மேலேயே இருக்கும் என்பது பலன். ஆகாயம் எனில், உயரமான இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும்.

ஜோதிடரின் சுவாசம் நிலம், நீர், நெருப்பு, காற்று தத்துவங்களில் அமையும்போது, முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் காணாமல் போன பொருள் கிடைக்கும். ஆகாய தத்துவத்தில் சுவாசம் அமைந்தால், பொருள் எந்த இடத்தில் காணாமல் போனதோ அங்கேயே கிடைக்கும் என பலன் கூறலாம்!

கேள்வியாளர் ஜோதிடரைச் சந்திக்கும் நிலையில் ஜோதிடரின் சுவாசம் நிலம் அல்லது நீராக அமைந்து, கேள்வியாளர் ஜோதிடரின் சுவாசம் வரும் பக்கம் நின்றிருந்தால், கேள்வியாளருக்கு நீண்ட ஆயுளும், இனிய இல்லாளும், செல்வ வளமும் ஏற்படும்.

பிரச்ன ஜோதிடமும் 
சுவாச பலன்களும்!

கனவு வீடு... வாஸ்து குறிப்புகள்!

வீட்டில் ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிட தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில், எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.

பால்கனி அமைப்பதாக இருந்தால், கூரை சென்ட்ரிங் அமைக்கும்போதே, வீட்டுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும்.

செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்கவேண்டும். மனைக்கு ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் ‘சம்ப்’ (பூமிக்குள் தண்ணீர் தொட்டி) அமைக்கலாம்.

சமையல் அறையில், சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக் கூடாது. வடக்குச் சுவருக்கும், ‘சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஒரு அடி இடைவெளி விட்டு கட்டவும்.

இப்படி வாஸ்து விதிமுறைப்படி நமது வீடு அமைந்தால், சகல சுபிட்சங்களும் அங்கே பல்கிப்பெருகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு