ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

கும்ப ராசி அன்பர்களே நீங்கள் இப்படித்தான்

கும்ப ராசி குணாதிசயங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கும்ப ராசி குணாதிசயங்கள்

மகாமகோபாத்யாய சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்

கும்ப ராசியின் அதிபதி சனி. ராசிச் சக்கரத்தின் 300 முதல் 330 வரையி லான ஆரங்கள் இந்த ராசியில் அடங்கும். இந்த ராசியில் எந்தக் கிரகத்துக்கும் உச்சமோ, நீசமோ இருக்காது. இருந்தாலும், அதிபதி சனிக்கு ‘மூல த்ரிகோணம்’ என்ற தகுதியுண்டு. இவரே 1-க்கும் (கும்பம்), 12-க்கும் (மகரம்) அதிபதியாக இருப்பதால் குறையும் நிறையும் கலந்திருக்கும்.

அழிவுக்கும் ஆற்றலுக்கும் ஒருவனே பொறுப்பு. கர்மவினை பிறப்பை அளித்தது. அதன் அனுபவ வேளையே வாழ்க்கை; அதன் முற்றுப்புள்ளியே மறைவு. சிருஷ்டி தத்துவத்தை உண்மையாக்குகிறார் சனிபகவான்.

ராசி புருஷனின் 10, 11 ஆகிய இடங்கள் சனிக்குச் சொந்தமானது. நடைமுறை வாழ்வில் நெருடலைச் சந்திக்காமல் இருக்க, உழைப்பையும் ஊதியத்தையும் உறுதி செய்யவேண்டும். சனி துக்ககாரகனாக மட்டுமில்லாமல், வாழ்வை வளமாக்கும் உழைப்பையும் ஊதியத்தையும் சிறப்பாக்குகிறார்.

செவ்வாயும் சனியும் இணைந்தால், ‘அக்னிமாருத யோகம்’ என்கிறது ஜோதிடம். காற்று, விளக்கை அணைக்கும்; காட்டுத் தீயை வளர்க்கும். எதிராளியின் பலத்தைப் பார்த்துச் செயல்படும். செவ்வாய் பலம் பொருந்தி யிருந்தால், சனி ஒத்துழைக்கும்; பலம் குன்றியிருந்தால், தனது பலத்தால் அழித்துவிடும். இரண்டும் கெடுதலில் முடிவடைவதால் அந்த யோகம் அழிவை அளிக்கும். நெருப்பை அணைக்கவும் வளர்க்கவுமான மாறுபட்ட இரு தகுதிகள் சனிக்கு உண்டு.

கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். குடம் ஏந்திய மனித வடிவம் கும்பத்தின் அடையாளம். சுக்கிரனும் புதனும் பந்து. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் சத்ரு. இது ஸ்திர ராசி; இரட்டைப் படை ராசி; பகல் ராசி; மனித ராசி; சிரோதய ராசி; குட்டை ராசி; கர்ம ராசி; மூல ராசி. இப்படி இருக்கும் தகுதிகள் அதில் பிறந்தவனில் தென்படும்.

குடத்தைச் சுமப்பவன் மனிதன். நாகரிகமாக நடப்பவன், துயரைத் தாங் கும் வலிமை கொண்டவன், மனம் தளராதவன், பொறுமையுடன் இலக்கை நோக்கிப் பயணிப்பவனாக தென்பட இடமுண்டு. கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழல், தீர்மானமான முடிவு அத்தனையும் இருக்கும்.

புதனும் சுக்கிரனும் பலவானாக அமைந்தால், கரடு முரடு இல்லாத வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். கவிதைகள் புனைவதில் ஆர்வம், கலைகளிலும் விளையாட்டிலும் ஈடுபாடு, ஒப்பந்தம், பந்தயம், வாக்குறுதி ஆகியவற்றில் வெற்றி வாய்ப்பு இருக்கும். தகவல்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இருக்கும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணம் எழாது.

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

விஷயத்தை உள்வாங்கிக் கொள்வதில் சுணக்கம் இருந்தாலும், வாங்கியதை மனத்தில் பதியவைக்கும் திறன் இருக்கும். உள்ளதை உள்ளபடி உரைக்கத் தயக்கம் இருக்காது. பரோபகார சிந்தனையும் ஈவு இரக்கமும் மேலோங்கி இருக்கும். விளம்பரம், படாடோபம் இல்லாமல் சமுதாய சேவையில் இறங்கும் மனம் இருக்கும். பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பதில் திறமை இருக்கும். பகைவர்களைக் கட்டப்பஞ்சாயத்து மூலம் நண்பர்களாகச் செய்வதில் ஆர்வம் இருக்கும். தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்றுத் தொண்டு செய்வதிலும் விருப்பம் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் சேர்க்கையில் பல இழப்புகளைச் சந்திக்க வாய்ப்பு உண்டு. உடல் உபாதையும் மன அமைதியும் இழந்து தவிப்பதும் உண்டு. லக்னாதிபதி நீசம் பெற்று, மற்ற கிரகங்கள் ஓங்கியிருந்தால், ஏழ்மையிலும் சங்கடங்களிலும் அகப்பட்டு ஒட்டுமொத்தமாக நிம்மதி இழக்க நேரிடும்.

கும்பம்
கும்பம்

சனி எந்தக் கிரகத்துடனும் இணைந்தாலும் பார்த்தாலும் நினைத்த பலனை எதிர்பார்க்க இயலாது. பலவானாக இருந்து பார்த்தால், நல்ல பலனைப் பெருக்கிப் பெருமை சேர்ப்பார். துர்பலனாக இருந்தால், அத்தனைச் செல்வங்களையும், செல்வாக்கையும், சுகாதாரத்தையும் இழக்கவைப்பார்.

சனி 8-ல் இருந்தால் ஆயுளை நீட்டிப்பார் என்று விளக்கம் அளிக்கும் ஜோதிடம். 2-ம் (மீனம்), 11-ம் (தனுசு) குருவின் வீடானதால், பணமும் செழிப்பும் நிலைத்திருக்கும்.

இந்த ராசியினருக்கு ஆன்மிகச் சிந்தனை யில் ஆர்வம், முடிவெடுக்கும் விஷயத்தில் முழு ஈடுபாடு இருக்கும். தவம், தியானம் ஆகியவற்றில் பற்றுதல் இருக்கும். ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில்... சொற்பொழிவில் இறங்குவதைவிட, அவர்களுக்குச் சேவை செய்வதில் நாட்டம் இருக்கும்.

முதல் இரண்டு நவாம்சங்கள் (அவிட்டம் 3, 4) செவ்வாய் தசை இருக்கும். அதன்பிறகு நான்கு நவாம்சங்கள் (சதயம் 1, 2, 3, 4) ராகுவின் தசை. கடைசி மூன்று நவாம்சங்கள் (பூரட்டாதி 1, 2, 3) குரு தசையாக இருக்கும்.

செவ்வாய் பலமிழந்து இருந்தால் 3 வயது வரை பாலாரிஷ்டம் தென்படலாம். அதிலும் சனி, புதன், சுக்கிரன் ஆகியோரது அந்தரங்கள் தெம்பை அளிக்கும். பாலாரிஷ்டத்தைத் துர்பலமாக்கிவிடும்.

ராகு தசை கல்வியில் நிறைவை அளிக்கும். ராகு தசைக்கு சனியின் பலன் இருக்கும் (சனிவத் ராஹு:). இங்கு சனி ராசிநாதன் (கும்பம்) ஆனபடியால், உயர்வுக்குக் காரணமாகி விடுவார். கெடுக்கும் ராகு என்பதற்குப் பதிலாக கொடுக்கும் ராகுவாக மாறிவிடுவார். இதில் வரும் சனி, சுக்கிரன், புதன்... அதேபோல் குரு தசையில் தென்படும் இம்மூவரும் நீண்ட தசாகாலத்தை உடையவர் களாக இருப்பதால், அவர்களுடைய அந்தரங்களில் செழிப்பைப் பெறலாம்.

கும்பராசி
கும்பராசி
CSA-Printstock

ஏறக்குறைய 40 வயதுக்கு மேல் தென்படும் சனியும் புதனும் இளமையையும் முதுமையையும் இனிப்பாக மாற்றி விடுவர். இளமையின் ஆரம்பத்தில் குருவின் தலையீட்டால் சிறு சிறு சிக்கல்களைச் சந்தித்தாலும், பெரும்பகுதி மகிழ்ச்சியளிக்கும்.

மிதுனம், துலாத்துக்கு இந்த தசா வரிசைகள் பொருந்தும். ஆனாலும் ராசிநாதன், பந்து- மித்திரர்கள், யோக காரகன், உச்ச நீசம் ஆகியவற்றின் இடையூறால் பலனில் மாறுபாடு இருக்கும்.

சனி, புதன், சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களின் தசைகள் இளமை வரை பரவி, வாழ்வின் அடித்தளத்தை வலுவாக்கும். சரம், ஸ்திரம், உபயம் என்ற பாகுபாடும் பலனை அளிப்பதில் மாறுபடும்.

சனியும், புதனும், சுக்கிரனும் வலுப் பெற்று இருந்தால், சந்தித்த சங்கடத்தை எளிதில் கடந்துவிடுவர். தீராத வியாதியோ, பிரச்னையோ இவர்களுக்கு இருக்காது.

முதுமையை எட்டியவர்கள் வாழ்வில் திருப்தி அடைந்து, பற்றுதல் அகன்று, ஆன்மிகத் தில் தெளிவு பெற்று வீடுபேறு அடைய வாய்ப்பு இருக்கும். அறம், பொருள், இன்பம் - மூன்றிலும் பற்று இருந்தாலும், துயரத்தை சந்திக்கும் அளவுக்கு அதை வளரவிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

2-க்கும் 11-க்கும் உடைய குரு பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்ட வைப்ப தால், ஏழ்மை அகன்று சிந்தனை வளம் பெற்று உழைப்பில் ஈடுபட்டு உயர்வை எட்டுவார்கள். எனினும் எல்லா கிரகங்களுடைய அமைப்பையும், அவர்களின் தலையீட்டையும் ஆராய்ந்தே இறுதி முடிவை எட்ட வேண்டும்.

இந்த ராசிக்காரர்கள், `சம் சனைச்சராய நம: பும் புதாய நம: சும் சுக்ராய நம:' என்று சொல்லி பணிவிடை செய்ய வேண்டும்.

சனிக்கு, ‘மந்தன்’ என்று பெயர் உண்டு. மெள்ள நடப்பவன். ஆகையால்தான், ஒரு ராசியைக் (30 பாகையை) கடக்க இரண்டரை வருடங்கள் ஆகிறது. ஆகையால், ‘மம் மந்தாய நம:’ என்று சொல்லியும் வழிபடலாம்.

‘இதம் விஷ்ணுர்விசக்ரமே’ என்ற மந்திரத்தைச் சொல்லி புதனை வழிபடலாம். ‘ப்ரவ: சுக்ராய’ என்ற மந்திரத்தால் சுக்கிரனை வழிபடலாம்.

‘சம்னேதேவீ:’என்ற மந்திரத்தால் சனியை வழிபடலாம். சனைச்சரனின் அதிதேவதை, ப்ரத்யதி தேவதைகளையும் வழிபடலாம். பிரஜாபதியையும் எமனையும் வழிபடவேண்டும். விஷ்ணு, இந்திரன், இந்திராணியையும் வழிபடலாம். கால நேரம் இல்லாத சூழலில்,

நம: சூர்யாய ஸோமாய மங்களாய புதாய ச

குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவை நம:

எனும் இந்தச் செய்யுளை மனத்தில் அசை போட்டு வணங்கலாம்.

சனி கிரகத்திடம் மக்களுக்குப் பயம் உண்டு. ஜோதிடர்களின் மாறுபட்ட விளக்கங்களும் சில நேரம் பயத்தை உண்டுபண்ணுவது உண்டு.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என்று சொல் லும் தறுவாயில், கெடுதல் விளைய வாய்ப்பு இருப்பதாக விளக்கும்போது, மனம் பயத்தைத் தழுவும். தனிப்பட்ட பலனைப் பொதுப் பலனாக வெளியிடும்போதும் சிலர் பயப்படுவது இயற்கை. எந்தக் கிரகத்தின் பலனும், அவரவர் ஜாதகத்தை வைத்து மாறுபட்டிருக்கும். ஆகையால் பொதுப் பலன்களை நினைத்து மனம் கலங்கக்கூடாது.

(மீன ராசி குணாதிசயங்கள் அடுத்த இதழில்...)

மச்சம்
மச்சம்

சிவப்பு நிற மச்சம்...

என்ன பலன்?

பெரும்பாலும் நம் மேனியில் உள்ள மச்சங்கள் கறுப்பு வண்ண மாகவே அமையும். இத்தகைய மச்சங்கள் அமைந்திருந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அதுவே, கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சற்று சஞ்சலமான நிலை அவ்வப்போது உருவாகும்.

மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். மனதைத் திருப்திப்படுத்தும் நிரந்தரமான வருமானம் இருக்கும்.

சிலருக்கு அபூர்வமாக குங்கும நிற மச்சங்களும் அமைந்திருக்கும்.இவர்கள், இவர்கள் உல்லாசப் பிரியர்கள்; நுண்ணறிவு மிக்கவர்கள்.

இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான்களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும்.

வெளிரிய மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.

-கே.செந்தில், கோவில்பட்டி