Published:Updated:

கன்னிராசி அன்பர்களே நீங்கள் இப்படித்தான்!

கன்னி ராசி
பிரீமியம் ஸ்டோரி
கன்னி ராசி

தர்ம சிரேஷ்டர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கன்னிராசி அன்பர்களே நீங்கள் இப்படித்தான்!

தர்ம சிரேஷ்டர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கன்னி ராசி
பிரீமியம் ஸ்டோரி
கன்னி ராசி

கன்யா ராசி, ராசிச் சக்கரத்தின் 6-வது ராசி. 150 முதல் 180 வரையிலான சக்கரத்தின் ஆரங்கள் இதில் அடங்கும். இந்த ராசிக்கு அதிபதி புதன். புதனுக்கு உச்ச ராசி, மூலத்ரிகோண ராசி, ஸ்வக்ஷேத் திரம் ஆகிய மூன்று தகுதிகள் இந்த ராசியில் இணைந்திருக்கும். சனியும் சுக்கிரனும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள்.

கன்னிராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்!

கன்னிக்கு ராசிநாதன் புதன். 10-க்கு உடையவனும் புதனே. ஆக, இந்த ராசிக்காரர்கள் புத்திஜீவியாக பணம் ஈட்டிப் பெருமையை எட்டுவர்; சிரமஜீவியாக மாறமாட்டார்கள்.

துலாம், ரிஷபம்... அதாவது 2-க்கும், 9-க்கும் உடைய சுக்கிரன் இங்கு நீசம் பெறுவார். நாவன்மை, செல்வம், குடும்பம், சேமித்த புண்ணியங்களின் அளவு ஆகியவற்றில் சரிவு இருக்கும். அதாவது, போதுமான அளவு பூர்வ புண்ணியம் சேமிக்காதவர்கள் கன்னி ராசியில் பிறக்க நேரிடும்.

அதேபோல், எல்லோருக்கும் நன்மை செய்யும் குரு, இந்த ராசிக்குப் பகைவனாக மாறுகிறார். உலக சுகத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் அதிபதியான குரு 4, 7 என்ற கேந்திரத்தில் இருப்பது தோஷமாக மாறுகிறது. இதை, ‘கேந்திராதிபத்ய தோஷம்’ என்கிறது ஜோதிடம்.

கன்னியின் ராசிநாதன் புதன், மீனத்தில் நீசம் பெற்றிருப்பார். அங்கு சுக்கிரனுக்கு உச்சம் இருக்கும். மற்ற கிரகங்களைவிட புதனும் சுக்கிரனும் சூரியனுடன் நெருங்கி நகர்வார்கள். ஆக, சிந்தனையில் திருப்பமும் பொருளாதாரத்தில் சரிவும் இந்த ராசிக்காரர்களுக்கு நிகழ வாய்ப்பு உண்டு.

அதேநேரம்... சூரியனோடு நெருங்கும் புதனுக்கு அஸ்தமனம் என்ற குறை இருந்தாலும் `நிபுண யோகம்’ என்ற நிறை அதனுடன் இணைந்திருக்கும். புதன், சுக்கிரன் இவ்விருவரும் ஏழு ராசிகள் இடைவெளியில் பயணிக்கமாட்டார்கள். ராசியில் ஒரே நேரத்தில் இருவரும் உச்சனாகவோ, நீசனாகவோ மாற மாட்டார்கள். இரு ராசிகளிலும் (மீனம், கன்னி) இருவரின் இணைப்பு நீசபங்க ராஜ யோகமாக மாறுவதால்... ஒருவரின் குறை மற்றவரால் நிறைவு செய்வதாக அமையும். இந்த நிலை, கன்னி ராசிக்காரர்களுக்குச் சிந்தனையும் பொருளாதாரமும் சரியாமல் இருக்க உதவும். அம்சகத்தில் இருவரும் நீசமாகவும் உச்சமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. அது, வாழ்வின் செழிப்பை உறுதி செய்யும்.

மீனத்தில் நீச புதனோடு சுக்கிரனின் சேர்க்கையும்; கன்னியில் உச்ச புதனோடு சுக்கிரனின் சேர்க்கையும் ஒன்றின் குறையை மற்றொன்று நிறைவு செய்யும். இருவரும் சுபக்கிரக யோகத்தில் இருப்பதால் சுப பலனை அளிப்பதில் முனைப்பு இருக்கும். அறிவு, சிந்தனைச் செழிப்பு, சாமர்த்தியம் ஆகியவற்றைப் புதன் அளிப்பார். பொருளாதாரத்தையும் உலக சுகத்தையும் குறை வில்லாமல் பார்த்துக் கொள்வார் சுக்கிரன்.

ஒருவேளை, சுக்கிரன் பாராமுகமாக இருந்தாலும் சேர்க்கையில் விருப்ப பலனை அளிப்பார். இந்த அமைப்பு கன்னி ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம்.

கன்னிராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்!

உச்சனான புதன் கல்வியை நிறைவு செய்வார். உச்சனான சுக்கிரன் பொருளாதாரத்தைக் கவனிப்பார். ஆக, இரண்டும் ஒருசேரக் கிடைப்பது, இந்த ராசிக்காரர்களுக்கு இயலாது.

ராசியின் முதல் மூன்று நவாம்சகங்களுக்கு (உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்) சூரிய தசை. அடுத்த (ஹஸ்தம்) நான்கு நவாம்சகங்களுக்கு சந்திர தசை. கடைசி (சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்) இரு நவாம்சகங்களுக்கு செவ்வாய் தசை இருக்கும்.

12-க்கு உடையவன், 11-க்கு உடையவன், 3-க்கும் 8-க்கும் உடையவன்- இவர்களது தசைகளை, முழு இளமையை எட்டும் வரையிலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் சந்திப்பார்கள். பால்யம் பாலாரிஷ்டத்தைச் சந்திக்கும்.

அர்த்தப ராசியில் கன்னியும் அடங்கும். அரை நட்சத்திரத்தில் முடிவடையும் ராசி என்று பொருள். ரிஷபம்- மிதுனம், கன்னி- துலாம், மகரம் - கும்பம் ஆகியவற்றில் அரை நட்சத்திரம் இணைந்திருக்கும்.

ராகு தசையும், குரு தசையும் இளமையில் பரவியிருக்கும். சனியும் புதனும் முதுமையில் முடிவடையும். புதன் தசையை எட்டாமல் இருந்தாலும் மற்ற தசைகளில் புக்தியிலும் அந்தரத்திலும் தென்படும் புதன், அறிவையும் ஆற்றலையும் இணைத்துவிடுவார். ராசிநாதன் தனது தசையில்தான் பலன் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. புக்தி, அந்தரங்கள் சரியான வேளையில் பலனை அளிக்க ஏற்படுத்தப்பட்டவை. தசாநாதன், புத்தி நாதன், அந்தர நாதன்- இவற்றின் பலன்கள் மாறுபட்டு தென்படுவதற்கு, அதுவும் ஒரு காரணம்.

`படகில் பயணம் மேற்கொள்ளும் கன்யகை’ இந்த ராசியின் அடையாளம். அவள் கையில் பந்தம் இருக்கும். மற்றொரு கையில் நெற்கதிரும் இருக்கும். இது நர ராசி. நாகரிகமான ராசி. உணவுக்கு நெல்லும், செயல்பாட்டுக்கு வழிகாட்ட வெளிச்சமும் இருப்பதால், அறியாமையில் மூழ்கி அல்லல்படாமல் வெளிச்சத்தில் வாழ்க்கையில் வெற்றியை எட்ட இயலும். பதற்றம் இல்லாமல் நிறை மனதோடு வாழும் வாழ்க்கை அமையும்.

பெண்களுக்கே உரிய வெட்கம், எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள் என்ற எண்ணம், பெண்மைக்கு உகந்த உடல்வளம், மென்மை, விவசாயத்தில் ஈடுபாடு ஆகிய பண்புகளை இந்த ராசியில் பிறந்தவர்களிடம் காணலாம்.

புதன் ஐம்பெரும் பூதங்களில் நிலத்தைச் சுட்டிக்காட்டுவதால் பொறுமையும், அசையாத நம்பிக்கையும், எடுத்த காரியங்களை முடிப்பதில் உறுதியும் தென்படலாம். கல்விக்குக் காரகனான புதன் பலன் பொருந்தியிருந்தால், அறிஞனாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்வார்கள். சுக்கிரன் உச்சனாக இருந்தால் செல்வந்தனாகவும், உலக சுகத்தில் திளைப்பவராகவும் இருப்பார்கள். சுயநலத்தைப் பெருக்கும் வேலைகளை ஏற்பார்கள்.

ஆறஅமர யோசனை செய்து செயலில் இறங்கும் இயல்பு இருக்கும். பிறரது உதவியில் தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளும் மனம் இருக்கும். அளவுக்கு மீறிய நெருக்கத்தை யாரிடமும் வைக்கமாட்டார்கள். சுயநலத்தை ஒட்டி பொதுநல செயல்பாட்டில் அளவோடு இறங்குவார்கள். பணம் செலவழிப்பதில் சுணக்கமும் சேமிப்பதில் அளவு கடந்த ஆர்வமும் இருக்கும்.

தனக்கு நிகரான ஒருவரைப் புகழ்வது பிடிக்காது. பிறரது குறைகளைப் பெரிதாக்கி பிரகடனப்படுத்தி, அதன் மூலம் தனது பெருமையைப் பெருக்கும் எண்ணம் சிலரிடம் இருக்கும். சண்டை - சச்சரவு என்றால் தலையிடாமல் வெளியேறுபவர்களும் உண்டு. ஆழமான நட்பை உறுதி செய்யமாட்டார்கள். குழந்தைகளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். மனைவி, தாய் போன்றவர்களிடம் நெருக்கம் அளவோடு இருக்கும். குறைந்த குழந்தைச் செல்வம் இருக்கும்.

சுக்கிரன், சனி, புதன் - ஆகியோரது தசைகளில், முழுத்தேவைகள் பூர்த்தியாகி விடும். சனி பலம் பெற்று இருந்தால் செழிப்பான வாழ்வு அமையும். சுக்கிரனுக்கோ, புதனுக்கோ நீசபங்கம் இருந்தால் மக்கள் தலைவனாகவோ, செல்வச் சீமானாகவோ, அரசனாகவோ, மந்திரியாகவோ இருந்து புகழை எட்ட வாய்ப்பு இருக்கும். தான் ஏமாறாமல் இருக்க எல்லா காரியங்களிலும் தனிக் கவனம் இருக்கும். புதன் நீசனாகவும், சனி பலமிழந்தும், சுக்கிரன் மௌட்யம் அடைந்தும் தென்பட்டால், எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவனாக துயரத்தில் ஆழ்ந்துவிடவும் வாய்ப்பு உண்டு.

புதனும் சனியும் பலவானாக இருந்து, சுக்கிரனும் சேர்ந்தால் படிப்பும் பகுத்தறிவும், பெருமையும் உழைப்பும் மேலோங்கி உலக அங்கீகாரம் பெற்றுத் திகழ்வர். 4-க்கும், 7-க்கும் அதிபதி குருவாக இருப்பதால் வீடு-வாகனங்கள், வெளிநாட்டு வர்த்தகம் போன்றவற்றில் இழப்பைச் சந்திப்பார்கள். தாய் வீட்டின் உதவி, மாமனின் அரவணைப்பு ஆகியவற்றைத் துறப்பார்கள்.

பும் புதாய நம:, சும் சுக்ராய நம:, சம் சனைச்சராய நம: என்று சொல்லி மூவரையும் வணங்கலாம். ‘உத்புத்யஸ்வாக்னே’ என்ற மந்திரத்தால் புதனை வழிபடலாம். ‘ப்ரவ: சுக்ராய’ என்ற மந்திரத்தால் சுக்கிரனை வழிபடலாம். ‘சம்னோதேவீ:’ என்ற மந்திரத்தால் சனைச்சரனை வழிபடலாம்.

மந்திரம் அறியாதவர்கள், ‘ஸெளம்யம் ஸெளம்யகுணோபேதம் ப்ரணமாமி புதம் சுபம்’ என்ற செய்யுளை மனதில் அசைபோட்டு வழிபடலாம். ‘பார்கவம் வரதம் சுக்ரம் ப்ரணமாமி முதான்வஹம்’ என்று சுக்கிரனையும், ‘சனைச்சரம் சூர்யபுத்ரம் ப்ரணமாமி ஸீகாப்தயே’ என்று சனைச்சரனையும் வழிபடலாம்.

உழைப்புக்கும் பொருளாதாரத்துக்கும் அறிவுக்கும் இந்த மூவருக்கான வழிபாடு ஒத்துழைக்கும். உடல் வளம், உள்ளத் தெளிவு, உற்சாகம், செல்வம் ஆகியவை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம். ஈடுபாட்டுடன் இவர்களை வேண்டினால் விருப்பம் நிறைவேறும். குறைகளை நினைத்து சுணக்கமுற்று செயலிழக்காமல், உற்சாகத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டால் பலன் நிச்சயம்.

(அடுத்த இதழில் துலாம் ராசி குணாதிசயங்கள்...)

ஸ்திரீ தீர்க்கம் பார்ப்பது எப்படி?

திருமணத்துக்கான பொருத்தங்களில் ஒன்று ஸ்திரீ தீர்க்கம். ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக வாழும் மாங்கல்ய பாக்கியம் பற்றிய பொருத்தம் இது. இதுவும் நட்சத்திர எண்ணைக் கொண்டு அமைகிறது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி, அந்த எண்ணிக்கை 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் அமையும். 13-க்குக் கீழ் இருந்தால் இந்தப் பொருத்தம் அமையாது.

உதாரணமாக, பெண் நட்சத்திரம் அசுவினி என்றால், சித்திரை முதல் ரேவதி வரை உள்ள ஆணின் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் அமையும்.

இவை 13-க்கு மேற்பட்டவை. பரணி முதல் அஸ்தம் வரையிலான - `13' எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆணின் நட்சத்திரங்களுக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் அமையவில்லை எனலாம். ஆனால் இது, கண்டிப்பான விதியாகாது! இதற்கும் விதி விலக்குகள் உண்டு.

பெண் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ம் இடம் அல்லது 8-ம் இடத்தில் அமைந்துள்ள கிரஹங்கள் அல்லது அந்த வீட்டுக்குரிய கிரஹம் அமைந்துள்ள இடம். அதன் வலிமை ஆகியவற்றைத் தெரிந்த பின்பே முடிவு செய்ய வேண்டும். இதை ஜோதிடர்கள் ஆராய்ந்து முடிவு செய்து விதிவிலக்கு அளிப்பார்கள்.

- எஸ். நாராயணன், சென்னை-17