
மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தனுசு ராசிக்கு அதிபதி குரு. தனுசு ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை `உபய ராசி' என்று ஜோதிடம் சொல்லும். ராசி புருஷனின் 9-வது ராசி. அதிர்ஷ்டத்தை அளக்கும் ராசி. ராசிச் சக்கரத்தின் 240 முதல் 270 வரையிலான ஆரப் பகுதிகள் இதில் அடங்கும்.
தனுசுவை வெப்ப ராசி, இரண்டு இயல்புகளை உடைய ராசி. இரண்டுகால் பிராணியும் நான்குகால் பிராணியும் இணைந்த ராசி என்று விளக்கலாம். இந்த ராசியில் எந்தக் கிரகத்துக்கும் உச்சமோ, நீசமோ ஏற்படாது.
கையில் வில் ஏந்திய மனிதன் குதிரை உருவத்துடன் இணைந்த வடிவம் பெற்றது இந்த ராசி. விலங்கினமும் மனிதனும் கலந்த ராசி. இரு இயல்புகளும் இந்த ராசிக்காரரிடம் தென்படும். சிலநேரம் சிந்தனையுடன் கூடிய செயல்பாடு தென்படும். சிலநேரம் ஆராயாமல் செயலில் இறங்கி சங்கடத்தைச் சந்திக்கவும் நேரிடலாம்
மிதுனத்துக்கும் கன்னிக்கும் அதாவது 7-க்கும், 10-க்கும் உடைய புதன், த்ரிகோணாதிபத்யம் இல்லாததால், இந்த லக்னக்காரர்களுக்குப் பலமிழந்து தென்படு வார். ஆக அறிவு, ஆற்றலில் எல்லையை எட்ட முடிந்தாலும், சமுதாய அங்கீகாரம் கிடைக்காமல் புகழ் மங்கிவிட வாய்ப்பு உண்டு.
தனுர் லக்னத்துக்கு 4-ல் புதன் வந்தால், இயல்பாகவே நீசனாக மாறுவதால், இந்த லக்னத்தில் புதனின் செயல்பாடு திருப்தி அளிக்காது. குரு, புதன் இருவரும் நண்பர்கள் அல்லாததால், மிதுனம் - கன்னியில் இருக்கிற குருவும், தனுர்- மீனத்தில் வரும் புதனும் இடையூறைச் சந்திக்கவைப்பார்கள்.
தனுர் லக்னாதிபதி குரு 7-ல் இருந்தால், தாம்பத்திய சுகத்தில் நெருடலை விளைவிப்பார். 10-ல் (கன்னியில்) குரு இருந்தால் வேலையில் இடையூறை விளைவித்து சங்கடத்தில் ஆழ்த்துவார்.
5 (மேஷம்) - பூர்வ புண்ய ஸ்தானம். ஐந்தின் ஐந்தான ‘9’ (சிம்மம்)- அதிர்ஷ்டம், பாக்கியம், பூர்வபுண்ணியத்தின் அளவு அல்லது செழிப்பு. இதில் குரு வரும்போது, சாதகமாக அவற்றைச் சுவைக்க வைக்கும்படி செய்வார். ஆகையால், த்ரிகோணத்தில் குரு அனுகூலத்தைச் செய்வார். 11-ல் எல்லா கிரகங்களும் நன்மையைச் சந்திக்க வைக்கும் என்கிறது ஜோதிடம் (ஸர்வேஷாம் கிரஹாணாம் சுப ஏகாதச ஸ்தான...). குடும்பம், பொருளாதாரம்... இதைச் சுட்டிக் காட்டும் 2-ல் குரு அனுகூலம் நிம்மதியை அளிப்பார்.

இந்த ராசி சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு நட்பு வீடு. புதன், சனி, சுக்கிரன் ஆகியோருக்கு சத்ரு வீடு. சூரியன், சந்திரன், செவ்வாய் வலுப்பெற்று இருந்தால், எல்லாவிதமான ஐஸ்வர்யங்களும் நிரம்பப்பெற்று புகழோடு விளங்கவைக்கும். சனியும் சுக்கிரனும் எதிரிடையாக செயல்பட்டாலும், சூரியன்- சந்திரன்- செவ்வாயுடன் இணைந்து வலுப்பெற்றால், வாழ்வில் நிறைவை எட்டவைப்பர்.
லக்னாதிபதியும் 4-க்கு உடையவனும் குருவாக இருப்ப தால், இந்த ராசிக்காரர்களில் பலரும் அறிஞராகத் திகழ வாய்ப்பு உண்டு. 4-ல் புதனுக்கு நீசமும் சுக்கிரனுக்கு உச்சமும் இருப்பதால், பொருளாதாரத் தில் நிறைவை எட்டினாலும் உலக சுகத்தில் சுணக்கம் இருக்கும்.
ஜாதகத்தில் 9-க்கு உடைய சூரியனுடன் குரு இணைந்தால் அந்த ஜாதகர் அரசனாகவும், தலைவனாகவும் திகழ்வர். செவ்வாயுடன் இணைந்தால் சேனாதிபதியாகவோ, மந்திரி யாகவோ, ஆலோசகராகவோ மாறுவார். சந்திரனுடன் இணைந்தால் பெரும் செல்வந்த ராக மாறலாம். அல்லது செல்வம் சேராமலேயே எல்லாவித அனுபவங்களும் இவர்களைத் தேடி வந்து மகிழ்விக்கும் எனலாம்.
குதிரைக்கு ‘சக்தி’ அதிகம். மனிதனுக்கு சிந்தனை வளம் இருக்கும். வில்லுக்கு எதிரியை அழிக்கும் தன்மை உண்டு. ஆக சிந்தனை வளம், உடல் வலிமை, எதிரியை வீழ்த்தும் தகுதியுடைய ஆயுதம் இந்த மூன்றும் அடையாளமாகவே அமைந்திருப்பதால், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற முறையில், வாழ்நாள் முழுவதும் இந்த இயல்புகள் இந்த ராசிக்காரரிடம் இருக்கும்.
புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. அதே நேரம், பின்விளைவுகளை நினைத்துப் பார்க் காமல் உள்ளதை உள்ளபடி உடைத்துப் பேசி வாழ்வைச் சீரழித்துக் கொள்பவர்களும் உண்டு. சீண்டிப் பார்த்தால் சீறி எழுந்து நட்பை உதறித் தள்ளி தனிமையில் தவிப்பவர்களும் உண்டு. எதிரிகளின் பலத்தை ஆராயாமல் எதிர்க்கத் துணிவதும் உண்டு.

இவர்களில் பெரும்பாலானோருக்குத் தோல்வியை ஒப்புக்கொண்டு, சமரசத்தில் இறங்க மனம் இருக்காது. தனது பலவீனத்தை பிறர் மீது சுமத்திவிட்டு, நல்லவனாகக் காட்டிக்கொள்வதில் அக்கறை இருக்கும்.
இந்த ராசியினருக்கு முதல் நான்கு அம்சகங்களுக்கு (மூலம்) கேது தசை இருக்கும். பிறகு, நான்கு (பூராடம்) அம்சகங்க ளுக்கு சுக்கிர தசை. கடைசி (உத்ராடம் 1-ம் பாதம்) அம்சகத்துக்கு சூரிய தசை வரும்.
தனுர் லக்னம் இளமையில் செழிப்புறும். பால்யத்தில் சங்கடத்தைச் சந்தித்தாலும், இளமையும் முதுமையும் சுவர்க்க சுகமாக மாறும். உண்மையில் புத்தி வளர்ந்து, எண்ணங்கள் உதயமாகி அனுபவத்துக்கு வரும்போது, மகிழ்ச்சி முழுமை பெறும். அனுபவத்தில் தெளிவு பெற்று, முதுமை இனிக்கும். இது இந்த லக்னத்தில் பிறந்தவர்களில் தென்படலாம்.
மேஷத்துக்கும் சிம்மத்துக்கும் இந்த தசா வரிசைகள் பொருந்தும். ஆனால், அங்கு ராசியின் அமைப்பு, அதிபதி போன்ற மாற்றங்களால் பலனும் மாறுபட்டிருக்கும்.
இவர்களுக்கு 5-க்கு உடைய செவ்வாயும், 9-க்கு உடைய சூரியனும், லக்னத்துக்கு உடைய குருவும் வலுவாக இருந்தால், எல்லா இடையூறுகளையும் தாண்டி இன்பத்தைச் சுவைக்கலாம். மற்ற கிரகங்களின் தாக்கத் தால் துன்பத்தில் ஆழ்ந்தாலும், இவர்களின் வலுவால் அதிலிருந்து மீண்டு வர இயலும்.
‘கும் குருவே நம: ரம் ரவயே நம:’ என்று சொல்லி வழிபடலாம். குருவுக்கும் ரவிக்கும் குரு- சிஷ்ய உறவு. அவர்களது ஒத்துழைப்பு அதில் பிறந்தவனை அறிஞனாக்கும். சூரியன்- ஆன்மா; குரு - அறிவு என்பதால், இவர்களின் இணைப்பு ஆன்மிக வலுப்படுத்தும்.
‘ப்ருஹஸ்பதெ’ என்ற மந்திரத்தை உச்சரித் தும் குருவை வழிபடலாம். அல்லது ‘மித்ரய நம: ரவயே நம: குருவே நம: ப்ருஹஸ்பதயெ நம:’ என்று சொல்லி, புஷ்பத்தை இரண்டு கைகளிலும் அள்ளி எடுத்து புஷ்பாஞ்சலி செய்யலாம். அதற்கும் நேரம் கிடைக்காமல் போனால், மனதில் அவர்கள் பெயரை அசை போடலாம்.
தினமும் காலையில் நீராடித் திலகமிட்டு, இவர்களை வழிபடுங்கள். நன்மைகள் பல நம்மை அண்டி வந்துவிடும்.
(அடுத்த இதழில் மகர ராசி குணாதிசயங்கள்...)