Published:Updated:

தோஷங்கள் தீர்க்கும் கோ மாதா வந்தனம்!

ஜோதிடர் ஶ்ரீங்கம் கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

`எனது ஜாதகத்தில் பித்ருக்களின் சாபம் உள்ளது என்று ஜோதிடர் கூறிவிட்டார். இதற்குப் பிராயச்சித்தமாக நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி பலருக்கும் உண்டு. `கிரக நிலைகளும் சாப-தோஷங்களும் இருப்பதால் கடன் பிரச்னை வாட்டி வதைக்கிறது. கடன் தீர என்ன வழி’ என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலானோர் பணிச் சுமை, குடும்பப் பாரம், பொருளாதாரத் தடைகள் போன்ற பல பிரச்னைகளால் சூழப்பட்டு பெரிதும் தவிக்கும் நிலை.

தோஷங்கள் தீர்க்கும்
கோ மாதா வந்தனம்!

இப்படிப் பல்வேறு பிரச்னைகளால் தவிப்போரின் ஜாதகத்தை ஆராய்ந்தால், அவர்கள் பித்ரு தோஷம் முதலாக பல தோஷ - சாபங்களுக்கு ஆளாகியிருப்பதை அறிய முடிகிறது. அதேபோல், கிரக நிலை பாதிப்புகளால் துன்புறும் அன்பர்களையும் வாழ்வில் சந்திக்கிறோம்.

திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை. அந்த வகையில் பிரச்னைகளிலிருந்து மீண்டு எழ, எண்ணற்ற பரிகார வழிபாடுகளைச் சொல்கின்றன ஞானநூல்கள். அவற்றில் மிக அற்புதமான ஒன்றுதான் கோமாதா வந்தனம். பசுவைப் பராமரித்து வணங்குவதும் பூஜித்து வழிபடுவதுமே கோமாதா வந்தனம் ஆகும்.

பசு வழிபாடு காமதேனும் எனும் தெய்விகப் பசுவிடமிருந்து ஆரம்பமாகிறது என்கின்றன ஞானநூல்கள். அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று காமதேனு.

இதன் குழந்தையான நந்தினி வசிஷ்ட மகரிஷியால் போற்றிக் கொண்டாடப்பட்டது. இதைத் திருடிய காரணத்தாலேயே அஷ்ட வசுக்களில் ஒருவரான தேவவிரதன் சாபம் பெற்று பூவுலகில் பிறந்து பீஷ்மராக வாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிக்க நேர்ந்தது. மன்னன் கெளசிகன் விஸ்வாமித்ரராக மிளிரவும் இந்த நந்தினி பசுவே காரணம் என்கின்றன புராணங்கள்.

தோஷங்கள் தீர்க்கும்
கோ மாதா வந்தனம்!

கோமாதாவான பசுவை வழிபடுவது மிகவும் மகத்துவமானது; அனைத்திலும் வெற்றியைத் தரவல்லது.

பசுவின் கண்கள் சூரிய சந்திரர்; வால் பகுதி ராகுவும் கேதுவும்; மடிக் காம்புகள் நான்கும் வேதங்கள்; நாசிகளில் முருகனும் விநாயகரும் திகழ்கிறார்கள். பசுவின் நெற்றியில் சிவனும் கழுத்துப் பகுதியில் திருமாலும் பிரம்மனும், கால் பகுதியில் அனுமனும் திகழ, வயிற்றுப் பகுதியில் தேவர்களும் ரிஷிகளும் யாகம் புரிகிறார்களாம். பசுவின் பின்புறத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

ஆக, பசுவின் அங்கம் முழுவதுமே தெய்வாம்சம் பொருந்தியது. பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் தீர்த்தங்களையும் வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.

இறந்த பிறகு ஆத்மாவானது அதிபத்ர வனத்தைக் கடந்து வைத்ரன்ய நதியின்முன் பிறவி மோட்சம் வேண்டி நிற்கும்போது, அந்த நிலையை அடைய கோ பூஜை மற்றும் கோ தானம் செய்த புண்ணியமே உதவும் என்கிறது கருடபுராணம்.

மாட்டின் வயிற்றிலிருந்து கன்று வெளிப்படும்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்தப் பசுவை மகாலட்சுமியாக நினைத்து வணங்குவார்களாம். அந்நேரத்தில் பசுவை வணங்குவோருக்கு ஆசீர்வாதம் செய்வார்கள். ஆகவே, பசு கன்று ஈனும் தருணத்தில் மூன்று முறை வலம் வந்து வணங்கி, தங்களின் பிரச்னைகள் விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

மொத்தத்தில் பசுவை வணங்குவதும் பூஜிப்பதும் நம் ஜாதகத்தில் உள்ள சாபம் மற்றும் தோஷங்களைப் போக்க வல்ல பரிகாரமாகும்.

தோஷங்கள் தீர்க்கும்
கோ மாதா வந்தனம்!

சரி, வீட்டில் பசு வளர்க்கும் வாய்ப்பு யாருக்கு அமையும்? ஜாதகத்தில் குரு லக்னத்திலோ, தனுசு, மீனம் மற்றும் கடக ராசியிலோ அல்லது 1, 4, 7, 11 ஆகிய ஸ்தானங்களிலோ அமைந்திருந்தால், அந்த ஜாதகர் குரு பகவானின் திருவருளால் காமதேனுவின் ஆசியைப் பெறுவார்கள். இந்த ஜாதகரின் முன்னோர் பசுவுக்குச் சேவை செய்தவர்களாக இருப்பார்கள்.

பசுவுக்கு உணவு தானம் தருவதும், பசுவையே தானமாக தருவதும், மிகச் சிறந்த பிரார்த்தனை களாகும். பெரும்பாலும் பசுவுக்கு அகத்திக் கீரையும் வெல்லமும் தானம் அளிப்பது சிறப்பு என்பார்கள் பெரியோர்கள்.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய தசை நடக்கும் போது கோதுமைத் தவிடு அளிப்பது விசேஷம்.

சந்திர தசை நடக்கும் அன்பர்கள் வாழைப்பழம் மற்றும் இனிப்புப் பொருள்கள் வழங்கலாம்.

சனி தசை நடப்பவர்கள், பசுந்தீவனம் அல்லது எள்ளுத் தீவனத்தை பசுவுக்குக் கொடுக்கலாம். இதன் மூலம் குடும்பத் தில் குழப்பம், கடன் பிரச்னைகள் தீரும்.

குரு தசை நடப்ப வர்கள் கோ சம்ரக்ஷணம் செய்வதும், பசுவைத் தானமாக தருவதும் சிறப்பு. இதனால் அவர் களின் சந்ததியினரின் பிரச்னைகள் நீங்கும்.

ராகு-கேது திசை நடப்பவர்கள் பசுவின் கழுத்தில் மணி மற்றும் சங்கு கட்டி வழிபடலாம். இதன் மூலம் முன்னோர் சாபம் நீங்கும்; அவர் களின் ஆசி கிடைக்கும்.

செவ்வாய் தசை நடப்பவர்கள் பசுவுக்கு அரளி மாலை சூட்டி வழிபடலாம். அரிசித் தவிடு மற்றும் வெல்லத்தை உண்ணக் கொடுக்கலாம். இதன் மூலம் குடும்பத்தில் மருத்துவத்தால் ஏற்படும் விரயங்கள் குறையும்.

புதன் தசை நடப்பவர்கள் பசுவுக்குப் பசும்புல் அல்லது வைக்கோல் வாங்கிக் கொடுக்கலாம். தீவினைகள் நீங்கும்; வீட்டில் நல்லதே நடக்கும்.

சுக்கிர திசை நடப்பவர்கள், தொழில் அபிவிருத் திக்காக சினைப் பசு ஒன்றைத் தானம் கொடுப்பது விசேஷம். அதேபோல் பசு பராமரிப்புக்காக இயன்றை பொருளை வழங்கலாம். இதனால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

தோஷங்கள் தீர்க்கும்
கோ மாதா வந்தனம்!

பசுவை வலம் வந்து வணங்கினால்...

ஒருவருக்குத் தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைப்பட்டால் அதற்குப் பரிகாரம், காலையில் பசுவின் தொழுவத்துக்குச் சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

கன்று ஈன்ற பசுக்களுக்குத் தொடர்ந்து புல், பிண்ணாக்கு, தானியம் போன்றவற்றை அளித்து, காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்னையின்றி கிடைக்கும்.

பலவித கிரகக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதி களால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்குக் கோதானம் என்னும் பசுதானம் செய்து நலம் பெறலாம்.

காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவர், துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுவார். தினமும் கோபூஜை செய்பவர், மகாவிஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவார்.

`ரட்சமாம் ரட்சமே கேஹம் ரட்சமே புத்ர பௌத்ரகான்
ரட்ச கோஷ்டம் ரட்ச பசூன் குருதேனூ பயஸ்விநீ
அனயா பூஜயா இந்த்ர ப்ரீயதாம் காமதேனுப்ரீயதாம்’

- என்று பிரார்த்தித்து, தினமும் பசுவை வலம் வந்து வணங்கி வழிபடுவதால் மங்கல வாழ்வு ஸித்திக்கும்; வீடு சுபிட்சமாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு