திருக்கதைகள்
Published:Updated:

மகர ராசி அன்பர்களே நீங்கள் இப்படித்தான்!

மகர ராசி
பிரீமியம் ஸ்டோரி
News
மகர ராசி

தர்ம சிரேஷ்டர் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

மகர ராசி(லக்னம்)யின் அதிபதி சனி. உணர்வு களில் ஒன்றான துயரத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சனிபகவானுக்கு உண்டு. ‘துக்ககாரகன் சனி’ என்கிறது ஜோதிடம். அவன், மகரத்துக்குத் தலைவனாக அமைந்திருப்பது இழப்பல்ல; செழிப்பு. அதில் சனி வீற்றிருந்தால் துக்கத்தை அண்டவிடாமல் தடுப்பான். பாவாதிபதி பாவத்தில் இருப்பது ‘பாவ புஷ்டி’ என்று விளக்கும் ஜோதிடம்.

மகர ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்!

ங்கு குரு நீசனாகவும் செவ்வாய் உச்சனா கவும் இருப்பார்கள். 12-க்கும் 3-க்கும் உடைய குரு நீசன் என்பதால் பெருமைக்கு இழுக்கு, ஆயுள் குறித்த வீண் மனச்சலனத்தை ஏற்படுத்துவார். அவர் முதல் அம்சகம், 3-வது அம்சகம் அல்லது 7-வது அம்சகமானால் புகழும், பெருமையும், செல்வமும், ஆயுளும் சேர்ந்து சிறப்புற விளங்கவைப்பார்.

ராசி புருஷனின் 10-வது வீடு மகரம். நம்மை உயர்த்தும் செயல்பாட்டின் அளவை வரையறுக்கும். உழைப்பால் வரும் ஊதியத்தின் பெருமையை விளக்கும். ராசிச் சக்கரத்தின் 270 முதல் 300 வரையிலான ஆரங்களை உள்ளடக்கிய ராசி இது.

சூரியன், சந்திரனுக்கு இது பகை வீடு. சுக்கிரன், புதனுக்கு பந்து வீடு. 5-க்கும் 10-க்கும் உடைய சுக்கிரனுக்கு, யோக காரகன் என்ற தகுதியும் சேர்ந்துவிடுகிறது.

சூரியனின் புதல்வன் சனி. ஸெளரி என்று சனிக்குப் பெயர்; சூரியனின் புதல்வன் என்று பொருள். சந்திரனின் புதல்வன் புதன். ஸெளம்யன் என்று புதனுக்குப் பெயர்; ஸோமனின் (சந்திரனின்) மகன் என்று அர்த்தம். சூரியனும் சந்திரனும் பகை பாராட்டும்போது, அவர்களின் புதல்வர்கள் நட்பு பாராட்டும் விசித்திரம் இங்கு உண்டு.

மகர ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்!
Kseniia Lukianсhikova

மகரம் சர ராசி, பெண் ராசி, பின் புறமாகத் தோன்றும் ராசி, நீர் ராசி, மலட்டு ராசி, விலங்கின ராசி... இப்படி இருக்கும் மாறுதல், அதில் பிறந்தவனிடமும் தென்படும். உடல் முதலை உருவம். தலை மானின் உருவம். நாலுகால் பிராணியும், ஊர்வன பிராணியும் கலந்த வடிவம். வனாந்திரங்களைக் கடந்து, ஒவ்வொரு அடியாக நடந்து நடந்து மலையுச்சி வரை செல்லும் இயல்பு மானுக்கு உண்டு. கடலில் நீருக்கு அடியில் மெள்ள நீந்தி நீந்தி கரைசேர்ந்து, அங்கே இருக்கும் இரையை நீருக்குள் இழுத்துப் பயன்படுத்தும் திறமை முதலைக்கு உண்டு. இந்த இரண்டுமே சுயமுயற்சியில் எல்லையை எட்டும்.

வாழ்க்கைப் பயணத்தில் மான், சிங்கத்துக்கு இரையாவது உண்டு. கரையை எட்டிய முதலை மனிதனிடம் மாட்டிக்கொள்வது உண்டு. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்பாராமல் விளைவது. விழித்துக் கொண்டிருக்கும் வேளையில் மான் சிங்கத்திடம் இருந்து தப்பிவிடும். முதலையும் விழித்துக்கொண்டால் நீரில் மூழ்கித் தப்பித் துக்கொள்ளும். இந்த இயல்புகள் மகர ராசியில் பிறந்தவரிடமும் தென்படும்.

கரையை எட்டிய முதலை, தான் நீருக்குள் இழுத்துவரும் விலங்கினத்தைச் சேற்றில் அழுத்தி பலநாள்கள் கழிந்தபிறகு, உணவாகப் பயன்படுத்தும். நம்மிலும், வருஷக்கணக்காக ஊறுகாயைப் பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆக, இந்த ராசியினருக்குத் தாமச உணவில் ஈடுபாடு உண்டு; மானின் இயல்புக்கு ஏற்ப ஸாத்விக உணவிலும் அக்கறை இருக்கும். சைவ மும், அசைவமும் கலந்தும் இருப்பது உண்டு. நீரிலும் நிலத்திலும் வளைய வரும் விருப்பம், கடல் கடந்த வாணிபத்தில் விருப்பம் இருக்கும். சுய உழைப்பில் முன்னேற விரும்புவதால், உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும்.

இந்த ராசிக் காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை சுறுசுறுப்பு இருக்கும். பாதியில் விட்டுவிட்டு மற்றொரு வேலையைத் தேடமாட்டார்கள். உழைப்பில் முதல் வரிசையில் திகழ்வர். பொறுமை இருக்கும். வரவுக்கேற்ப செலவு செய்யும் பழக்கம் இருக்கும்.

ஏற்றுக்கொண்ட வேலையைச் செம்மையாக்கி, ஓர் அட்டவணையோடு குறித்த வேளையில் முடிக்கும் திறன் இருக்கும். தனது வேலை குறித்த விமர்சனத்திலும் அபவாதத்திலும் பயம் இருக்கும். பிறர் வலையில் எளிதில் சிக்காமல் இருக்க, விழிப்புடன் இருப்பார்கள்.

அதேபோல் மற்றவர்களிடம், திடீரென அன்பைச் சொரிய மாட்டார்கள். சிறுகச் சிறுக நட்பு வளர்ந்து ஒட்டிக்கொண்டால், கடைசி வரையிலும் அந்த நட்பை நிலைநிறுத்துவார்கள். `நேராக வா... நேராக போ...' என்ற மனோபாவம் இருக்கும். பிறர் மீது கொண்ட நம்பிக்கையை நழுவவிட மாட்டார்கள்.

இவர்களுக்குச் சனியும், சுக்கிரனும், புதனும் பலம் பெற்றிருந்தால் உலக அங்கீகாரம் பெறும் அளவுக்கு வாழ்க்கை செழிக்கும். லக்னத்துக்கும் 2-க்கும் உடையவன் சனி. யோககாரகன்(5) சுக்கிரன். பாக்கியாதிபதி (9) புதன். இவர்களால் செல்வாக்கு, தனம், குழந்தைகள், வேலையில் பெருமை, அதிர்ஷ்டத்தின் பங்கு அத்தனையும் சேரும்போது பெருவாழ்வு கிடைத்துவிடும்.

சனி, சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் மனம் தளராத வாழ்க்கை அமையும். பாட்டிலும் கலைகளிலும் ரசனை இருக்கும். பணத்தாலும் உழைப்பாலும் பலபேருக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கும். குடும்பம், சமுதாய வாழ்வில் பேரும் புகழும் சேரும்.

மகர ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்!
da-kuk

ஒருவேளை இவர்களின் ஜாதகத்தில் சனியும் புதனும் பலம் குன்றியிருந்தால் பரவஞ்சராகவும், மானாவமானங் களைப் பொருட்படுத்தாதவராகவும் திகழ்வார்கள். சொல்லிலும், நினை விலும், செயலிலும் மாறுபட்டு, எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடச் செய்யும். தவறு செய்யக் கூச்சம் இருக்காது. தண்டனையை ஏற்பதில் வெட்கம் இருக்காது. வேலைகளைத் தள்ளிப்போடும் எண்ணம் இருக்கும்.

சுயநலத்தை எட்டுவதற்காக பொதுநலன்களை அழிக்க மனம் தயங்காது. தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களை எதிர்க்கும் எண்ணம் இருக்கும். தான் விரும்பியது கிடைக்காமல் பிறருக்குக் கிடைத்துவிட்டால், பகை வலுத்து பிறரைத் துன்புறுத்தத் தயங்கமாட்டார்கள்.

தான் உயராவிட்டாலும், தன்னைவிட உயர்ந் தவனை என்றென்றும் பகையோடு பார்க்கத் தோன்றும். என்னதான் நட்புடன் பழகினாலும் சுயநலத்துக்காக நட்பைத் துறக்கவும் செய்வார்கள்.

முதல் மூன்று நவாம்சகங்களுக்கு (உத்திராடம் 2, 3, 4) சூரிய தசை இருக்கும். அடுத்த நான்கு நவாம்சகங்களுக்கு (திருவோணம்)சந்திர தசையும், கடைசி இரண்டு நவாம்சகங்களுக்கு (அவிட்டம் 1, 2) செவ்வாயும் இருக்கும்.

இளமையை எட்டும் வரை இந்த மூன்று தசை இருப்பதால், படிப்படியான முன்னேற்றம் இடையூறின்றி நிறைவேறிவிடும். முதல் ஐந்து வயதுவரை பாலாரிஷ்டம் இருந்தாலும், சந்திர தசையில் தென்படும் சனி, சுக்கிர, புத புக்திகளின் ஒத்துழைப்பால் சந்திரனின் தாக்கம் தெரியாமல் போய்விடும்.

செவ்வாய் பலம் பொருந்தியிருந்தால், உற்சாகத்தோடு படிப்பில் தேர்ச்சி பெற்று, வேலையின் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டுவதற்குப் போதுமான அடித்தளம் அமைந்துவிடும்.

55 வயதுக்கு மேல் ஏற்படும் சனிதசை முதுமையை இளமையாக்கி விடும். ராகுவிலும் குருவிலும் ஏற்படும் சுக்கிரன், புதன், சனி ஆகியோரது புக்திகளும் அந்தரங்களும் தக்க தருணத்தில் உயர்வை எட்டவைத்து, வாழ்வில் இன்பத்தைச் சுவைக்க வைப்பர். குடும்ப விருத்தியும் பரம்பரை விருத்தியும் இவர்களை வந்து அடையும்.

பழைய பண்பாட்டிலும் சம்பிரதாயத் திலும் ஈடுபாடு இருந்தாலும், சூழலுக்கு ஏற்ப புதுமைகளையும் வரவேற்று வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக்கொள்வர்.

மகர ராசி அன்பர்களே 
நீங்கள் இப்படித்தான்!

இந்த ராசிக்காரர்கள் `சம் சனைச்சராய நம: சும் சுக்ராய நம: பும் புதாய நம:’ என்று மூவரையும் வழிபடுவது சிறப்பு. ‘சம்னோ தேவீ:’ என்ற மந்திரத்தால் சனைச்சரனையும், ‘ப்ரவ: சுக்ராய’ என்ற மந்திரத்தால் சுக்கிரனையும், ‘உத்புத்யஸ்வ’ என்ற மந்திரத்தால் புதனையும் வழிபடலாம்.

‘சுகப்ரதாய சனைச்சராய நம: தனதாத்ரே சுக்ராய நம: விவேகினேபுதாய நம:’ என்று மனதில் அசைபோட்டு புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும். ப்ரஜாபதியும் யமனும் சனைச் சரனுக்கு அதிதேவதையும் ப்ரத்யதி தேவதையும் ஆவார்கள். அவர்களையும் சேர்த்து வணங் கினால் நீண்ட ஆயுளையும் நிம்மதியான வாழ்வையும் பெற்று மகிழலாம்.

(அடுத்த இதழில் கும்ப ராசி குணாதிசயங்கள்...)