Published:Updated:

தனுசு லக்னமும் குலதெய்வமும்!

தனுசு
பிரீமியம் ஸ்டோரி
தனுசு

ஜோதிடமும் குலதெய்வமும் 11

தனுசு லக்னமும் குலதெய்வமும்!

ஜோதிடமும் குலதெய்வமும் 11

Published:Updated:
தனுசு
பிரீமியம் ஸ்டோரி
தனுசு

தனுசு லக்னத்துக்கு, குலதெய்வத்துக்குரிய ஐந்தாம் இடத்தின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். தனுசு லக்னத்துக்கு ஒவ்வொரு ராசியிலும் நட்சத்திரத்திலும் செவ்வாய் இருந்தால் என்னென்ன பலன்களைக் கொடுப்பார் என்பதைக் காணலாம்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்


தனுசு: செவ்வாய், லக்னத்திலேயே இருந்தால் முருகப்பெருமானின் திருவருள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் மேன்மையடையும். சகோதரர் களால் நன்மை உண்டு. அவர்களால் செலவும் உண்டு. குடும்பத்திற்கு ஆண் வாரிசு கிடைக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், நல்ல இறை ஞானம் கிடைக்கும். பூராடத்தில் செவ்வாய் இருந்தால், கடன் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். உத்திராடத்தில் செவ்வாய் இருந்தால், தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டு.

மகரம்: செவ்வாய் இந்த ராசியில் இருப்பது, பூர்வீகச் சொத்தின் மேன்மையையும், சகோதர வர்க்கத்தினரின் மேன்மையையும், அவர்களால் கிடைக்கக்கூடிய லாபத்தையும் குறிக்கும். குல தெய்வ வழிபாடு சிறக்கும்.

திருவோணத்தில் செவ்வாய் இருந்தால், தாய் மற்றும் மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருக்க, சிறப்பான வரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும்.

கும்பம்: கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால், குலதெய்வ அருளால் மனோபலம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அனைத்தையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது, அவ்வப்போது சிறுசிறு விபத்துக்களை ஏற்படுத்தும். சாப்பிடும் உணவு ஒத்துக்கொள்ளாமல் பாதிப்புகள் உண்டாகலாம். பூரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது, தாயின் உடல்நலத்தைப் பாதிக்க வாய்ப்பு உண்டு.

மீனம்: இந்த ராசியில் செவ்வாய் இருப்பது, பரம்பரைச் சொத்தில் விரயத்தை ஏற்படுத்தும். மேலும் புத்திர புத்திரிகளால் செலவினங்களையும் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது, உடலில் வாத சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உறவினர்களுடன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் இருக்கும் எனில், மனைவி வழியில் சில பாதகங்களைச் சந்திக்க வாய்ப்பு உண்டு. தொழில் சம்பந்தமாக சில விரயங்களையும் நஷ்டங்களையும் சந்திக்க வேண்டி வரும்.

மேஷம்: மேஷத்தில் செவ்வாய் ஆட்சியாக இருப்பது, பூர்வீகச் சொத்தில் அபிவிருத்தியையும் புத்திர புத்திரிகளுக்கு மேன்மையையும் கொடுக்கும். குலதெய்வத்தின் உதவி உங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் சர்ப்பம் சம்பந்தமான குலதெய்வத்தின் உதவி கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் பெண்களின் உதவியினால் பூர்வீகச் சொத்தில் சில நன்மைகள் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்: செவ்வாய் இங்கு இருப்பது, எதிரிகளை வெல்லும் வலிமையைத் தரும். எனினும், பூர்வீகச் சொத்திற்குப் பங்காளிகளால் வில்லங்க விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ரோகிணியில் செவ்வாய் இருந்தால் பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளைச் சந்திக்க வேண்டியது வரும். மிருகசீரிடத்தில் செவ்வாய் இருந்தால், பூர்வீகச் சொத்தில் விரயம் ஏற்படும்.

மிதுனம்: இந்த ராசியில் செவ்வாய் இருப்பது, பூர்வீகச் சொத்துக்குப் பாதகத்தை விளைவிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படும்.

திருவாதிரையில் செவ்வாய் இருந்தால், அமானுஷ்ய சக்திகளால் சில பாதிப்பு களைச் சந்திக்க வேண்டி வரலாம். புனர் பூசத்தில் செவ்வாய் இருந்தால், பூர்வீகச் சொத்தினால் நல்ல சுகம் கிடைக்கும். தாயார், தாய்வழி உறவினர்களால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்: கடக ராசியில் செவ்வாய் இருப்பது நல்லதல்ல. குலதெய்வத்தின் உதவி கிடைக்காமல் போகும். இவர்களுக்குப் பூர்வீகச் சொத்து இருக்க வாய்ப்பு இல்லை. பிள்ளைகள், சகோதரர்களால் தொல்லைகள் உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், வழக்குகள், விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், கணவன் மனைவிக்கு இடையே வழக்குகள், பிரிவினைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்: இந்த ராசியில் செவ்வாய் இருப்பது, தந்தை வழியில் தக்க உதவிகள் கிடைக்க வாய்ப்பு கொடுக்கும். பூர்வீகச் சொத்தில் மேன்மை ஏற்படும். சகோதரர்களால் நன்மைகள் உண்டு.

மகம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், அமானுஷ்ய சக்திகளால் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், எதிரிகளால் குறிப்பாக பெண்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது, தந்தையின் மேன்மையையும் தந்தையுடனான அன்பான உறவையும் குறிக்கும்.

கன்னி: கன்னி ராசியில் செவ்வாய் இருப்பது தொழில் சம்பந்தமான மேன்மைகளைக் கொடுக்கும். இருப்பினும் பூர்வீகச் சொத்து - தொழிலுக்காகக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.

இந்த ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், தொழிலுக்காக பூர்வீகச் சொத்தின் மேல் வாங்கிய கடனால் வழக்கைச் சந்திக்க நேரிடும். சித்திரையில் செவ்வாய் இருந்தால், எந்த நிலையிலும் பூர்வீகச் சொத்துக்கள் காப்பாற்றப்படும்.

துலாம்: பூர்வீகச் சொத்தில் மேன்மை ஏற்படும். குலதெய்வ அருள் கிடைக்கும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு புதிய சொத்தை விலைக்கு வாங்குவார்கள். சிலருக்குத் தொழிலில் லாபம் சிறப்பாக கிடைத்தாலும் செலவுகளும் ஏற்படவே செய்யும்.

சுவாதி நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், விஷ பயம் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால், பூர்வீகச் சொத்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: இங்கு செவ்வாய் இருந்தால் பூர்வீகச் சொத்து இருந்தும் பயனில்லாமல் இருக்கும். குலதெய்வம் சிறப்பாக இருந்தாலும் இவர்கள் குலதெய்வத்தை அணுக மாட்டார்கள். சொத்தில் விரயங்கள் ஏற்படும்.

அனுஷ நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது குடும்பத்தில் பிரச்னைகள், வருமானம் குறைவு, நாணயம் தவறுதல் போன்ற தீய பலன்களை ஏற்படுத்தும். கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் இருப்பது, தொழில் சம்பந்தமான பின்னடைவையும் வாழ்க்கைத் துணைவரால் விரயத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாக செய்து வருவதன் மூலம், பாதிப்புகள் நீங்கும்; சகல நன்மைகளையும் அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism