Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - தனுசு

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் தனுசு ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - தனுசு

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் தனுசு ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்

தனுசு: தன் மனதிற்கு சரியென பட்டதை யார் தடுத்தாலும் தயங்காமல் செய்பவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த சுபகிருது வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.

அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். அதிக வட்டி கடனை குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள்.

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சியான செய்திகள் வரும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்துப் போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்தை போராடி பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. சொத்து வாங்கும் போது ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள்.

இந்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுங்கள். கண், காது வலி வந்துச் செல்லும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

கேது லாப வீட்டிற்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர்யோகம் உண்டு. மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பார்கள். சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தை மூலம் சரியாகும். ஆனால் ராகு 5-ம் வீட்டிற்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். சொந்தம் பந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும். சிலர் நகரத்திலிருந்து விலகி சற்றே ஒதுக்குப் புறமான பகுதிகளுக்கு குடிபெயர்வீர்கள். அவ்வப்போது பழுதான வண்டியை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு
தனுசு

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

18.06.2022 முதல் 13.7.2022 வரை மற்றும் 7.4.2023 முதல் 13.4.2023 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறைக் கூறுவார்கள்.

வியாபாரிகளுக்கு...

வியாபாரிகளே, தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறினீர்களே! மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! அந்த அவலநிலையெல்லாம் மாறும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்யுங்கள். வைகாசி, புரட்டாசி மாதங்களில் சொந்த இடத்தில் கடையை மாற்ற முயற்சி செய்வீர்கள். போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். புரோக்கரேஜ், ஃபைனாஸ், தங்கம், மற்றும் உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். கொடுக்கல்&வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உத்தியோகஸ்தர்களே! அதிகாரிகளால் அலைகழிக்கப் பட்டீர்களே! உங்களின் உழைப்புக்கெல்லாம் மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டார்களே! அந்த அவலநிலை மாறும். இனி உங்களின் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். உங்களில் நெடுநாள் கனவான சம்பள உயர்வு, பதவியுர்வு வைகாசி, ஆவணி மாதங்களில் உண்டு. ஐப்பசி, மாசி மாதங்களில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அரசு பணியாளர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். வேலையை தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள். கணினி துறையினருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு விரக்தியாக இருந்த உங்களை வெற்றிக் கனியை சுவைக்க வைப்பதுடன் அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism