Published:Updated:

கனவுகள் வருவது ஏன்?

கனவுகள்
பிரீமியம் ஸ்டோரி
கனவுகள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

கனவுகள் வருவது ஏன்?

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

Published:Updated:
கனவுகள்
பிரீமியம் ஸ்டோரி
கனவுகள்

கனவை வடமொழியில், ‘ஸ்வப்னம்’ என்பர். சம்ஸ்கிருத இலக்கியத்தில் ‘ஸ்வப்ன சாஸ்திரம்’ என்றொரு பகுதி உண்டு. ஜோதிடம், ‘சகுனம்’ என்ற பிரிவில் கனவையும் சேர்த்து ஆராய்கிறது. கனவின் உருவம், அதன் பிரிவுகளை விளக்கு வதுடன் கனவின் பலன்களையும் சொல்கிறது ஆயுர்வேதம்.

கனவுகள் வருவது ஏன்?

னவுகள் பற்றிய விளக்கம், உருவம் மற்றும் அவற்றின் பலன்கள் ஆகியன புராணங்களிலும் காப்பியங்களிலும் தென்படுகின்றன.

சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதியின் கனவில் தோன்றிய கடவுள், குழந்தைச் செல்வம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றினார். சங்கரர் கிடைத்தார்.

வசுமதி தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணியபோது அவளின் கனவில் தோன்றிய பகவான், ‘உன் கருவில் உருவாகும் குழந்தை, தன் தந்தை இழந்த அரசை மீட்டு பெரும் புகழுடன் திகழ்வான். முடிவை மாற்றிக் கொள்!’ என்று அருளினார். அதன்படியே ராஜவாஹனன் பிறந்தான் என்கிறார் கவி தண்டி.

பட்டத்தரசி ஒருத்தி தன் வயிற்றுக்குள் முழு நிலவு நுழைந்ததாகக் கனவு கண்டாள். சந்திரா பீடன் தோன்றினான் என்கிறார் பாணபட்டன் (‘காதம்பரி’ நூலின் ஆசிரியர்).

தன்னைப் பிரிந்து வாடும் காதலியைத் தேற்ற மேகத்தை தூது அனுப்பினான் காதலன். அப்போது அவன், ‘நம்பிக்கைக்கு உகந்த மேகமே, அண்டவெளி பயணம் தடைகள் இல்லாதது. ஆதலால் விரைவில் நீ என் காதலி யின் இடத்தை அடைவாய். ஆனாலும் அவசரம் வேண்டாம்.

ஒரு வேளை, நீ சந்திக்கும் தருணத்தில் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தால்... ஒரு யாம காலம் அதாவது 3 மணி நேரம் பொறுமை காக்க வேண்டும். என் நினைவில் தோய்ந்த அவளின் மனம், கனவில் எனது சந்திப்பின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்; எனது அணைப்பில் இன்புற்று இருக்கலாம். அதை நீ சிதைத்து விடாதே!’ என்று மேகத்தை அறிவுறுத்தியதாக தனது மேக ஸந்தேசம் எனும் நூலில் குறிப்பிடுகிறார் மகாகவி காளிதாசன்.

‘அடிமனதில் ஆழமாகப் பதிந்த விஷயங்கள், கனவாக மலரலாம். மூன்று மணி நேரத்துக்கு மேல் கனவு தொடராது!’ என்ற தகவலையும் தருகிறார் அவர். நடைமுறையில் முழுசாகக் கனவு காண்பவர்கள் அரிது.

மனம், ‘புரிதத்’ என்ற நாடியில் மறையும்போது உறக்கம் நிகழ்கிறது. புலன்கள் யாவும் அடித்துப் போட்டது போல் செயலற்று இருக்கும்போது மனம் விழித்துக்கொண்டு, தான் சேமித்த எண்ணங்களை அசை போடுகிறது. அந்த நிகழ்வுகள் மனத்திரையில் பளிச்சிடுகின்றன... அவையே நிஜத்தில் நிகழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்று ஸ்வப்ன சாஸ்திர வல்லுனர்கள் விளக்குவர்.

வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் குறைபாடு அல்லது மிகுதியின் காரணமாக மாசுபட்ட நாடியின் தொடர்பு, மனதைக் கனவு காணச் செய்கிறது என்று ஆயுர்வேதம் விளக்கும்.

நடக்காத விஷயங்களும் சந்திக்காத உருவங்களும் மாறுபட்ட தகவல்களும்கூட கனவில் தோன்றும். அவை நிஜத்தில் நிகழ இயலாது. எனவே, கனவில் தோன்றும் காட்சிகள் நல்ல பலன்களை அல்லது கெட்ட பலன்களை அளித்து விடுமோ என்று குழம்பக் கூடாது.

சில கனவுகள் வருங்காலத்தின் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும் என்று ஜோதிடம் குறிப்பிடும். ‘கனவு பொய். அது நிகழ்வு அல்ல; சுகாதாரம் குன்றி இருப்பதன் அறிகுறி!’ என ஆயுர்வேதம் சொல்லும். ‘இப்போதுதான் படுத்தேன். அதற்குள் விடிந்து விட்டதா!’ என்று விழிப்பவனது உறக்கம் உண்மையானது. அது சுகாதாரத்தின் அறிகுறி. ‘உறக்கத்துக்கு இடையூறு விளைவிப்பது கனவு’ என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. ‘கலக்கமுற்ற மனம் கனவு காணும்!’ என்கிறது தர்மசாஸ்திரம்.

கனவு கண்டால் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி கடவுளை வழிபடுங்கள். கனவுக்குக் காரணமான மாசு அகன்று, மனம் தெளிவு பெறும்; நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும்.

கனவில் முன்னோரைக் கண்டால் என்ன பலன்?

நம் கனவில் முன்னோர்கள் வருவது அல்லது குலதெய்வம் தோன்றுவது ராகு - கேதுவின் அமைப்பைக் குறிக்கும். அவர்கள் மஞ்சள், பால், தேன், பட்டு, நெய், வெண்ணெய், இனிப்பு, பழங்கள், காய்கறிகள், அரிசி போன்ற பொருள்களைக் கேட்டால், அது நமக்கு வாழ்வில் ஏற்றத்தைத் தரக்கூடிய கனவாகும்.

அவர்கள் விகாரமாக சிரிப்பது அல்லது புன்னகை தருவது நல்லதல்ல. அவர்கள் அழுதால், அந்தக் கனவு நமக்கு ஒரு சுப விரயத்தைக் குறிக்கும். சித்தர், ஞானிகள், சந்நியாசிகள், மயில், சிவப்பு நிற பழங்கள், சிவப்பு நிற வஸ்திரங்கள் நம் கனவில் தோன்றுவது செவ்வாயைக் குறிக்கின்ற அமைப்பு. இது ஒரு மனிதனுக்கு நிலம், வீடு, கன ரக இயந்திரம் மற்றும் அது சார்ந்த சுப காரியங்களைக் குறிக்கும்

- வி.ராமு, சேலம்