ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

ஜோதிடம் என்ன சொல்கிறது?

ஜோதிட உண்மைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிட உண்மைகள்

ஜோதிடம் தொடர்பான பயனுள்ள குறிப்புகள் - தொகுப்பு: எஸ்.முருகேசன்

கரிநாள் என்றால் என்ன?

கரிநாளை `மாத தியாஜ்யம்’ என்பார்கள். அதாவது மாதத்தில் விலக்கப்பட வேண்டிய நாள் எனச் சொல்வார்கள். கரி நாள் என்பது சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் நாள்’ என்று நம் முன்னோர்களால் வகுத்துத் தரப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம், அந்த மாதத்தில் இருக்கவேண்டிய சராசரி அளவைவிட அதிகமாக இருக்குமாம். இந்தக் கரிநாள்கள் பெரும்பாலும் வருடா வருடம் மாறுவன அல்ல. இவற்றை, தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்.`அபிஜித் காலம்’ என்று சொல்கிறார்களே... அதனால் என்ன பயன்?

குறிப்பிட்ட சுபகாரியத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தியாக வேண்டிய கட்டாயம். ஆனால் அந்தக் காலத்துக்குள் முகூர்த்தம் - சுபநாள்கள் இல்லை. என்ன செய்வது? ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடும் நல்ல நாள் வரும் வரையில் காத்திருக்க இயலாது. அப்படிக் காத்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் என்று ஜோதிட சாஸ்திரமும் சொல்லவில்லை.

இதற்குத் தீர்வு என்ன? மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு எவ்விதமான நட்சத்திரமோ, தோஷமோ கிடையாது. அந்த நேரத்தில் முகூர்த்தம் பண்ணலாம். அந்த அபிஜித் வேளையில், மகாவிஷ்ணு அங்கு வந்து நின்று, தன் சக்ராயுதத்தின் மூலம் எல்லா தோஷங்களையும் விலக்கி வைக்கிறார். அன்று கெட்ட நாளாக இருந்தாலும், குறிப்பிட்ட பன்னிரண்டு மணி வேளையில் கெட்ட குணங்களெல்லாம் ஒதுங்கி நிற்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் கெடுதல் தொடரும்.

இப்படியாக அவசர காலத்தில் நமக்கு உதவுவதற்காக ஜோதிட சாஸ்திரம் சொல்லும் தீர்வு இது. அதற்காக, அவசர நிலை இல்லாத போதும் `அபிஜித் காலத்தில்தான் செய்வேன்’ என்று செயல்படக் கூடாது.

அபிஜித் முகூர்த்தம்
அபிஜித் முகூர்த்தம்

மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?

மூலம், ஆயில்யம் இப்படியான நட்சத்திரங்களில் பிறக்கும் பெண்ணை எடுத்தால் மாமியாருக்கு ஆகாது, மாமனாருக்கு ஆகாது என்றெல்லாம் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவை தவறானவை. பொருத்தங்களில் ஒன்று நட்சத்திரப் பொருத்தம். அவ்வளவே. ஒரு ஜாதகத்தில் இருக்கும் பிரமாமதமான பலன்கள், நட்சத்திரத்தால் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து விடும்.

ராசிக்கட்டம்
ராசிக்கட்டம்இப்படியிருக்க, மணப்பெண்ணின் நட்சத்திரம் மாமனாரை, மாமியாரைப் பாதிக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. அவரவர் ஜாதகமே அவரவருக்கான பலன்களைச் சுட்டிக்காட்டும். ஒருவரின் நட்சத்திரம் மற்றவரைப் பாதிக்காது.

ஶ்ரீராமர்
ஶ்ரீராமர்

அஷ்டமி, நவமி, பிரதமை திதிகளை விலக்குவது ஏன்?

சுபகாரியங்களை ஏன் செய்கிறோம். மேலே மேலே வளர வேண்டும் என்பதற்காகத்தானே? தகுதி இருக்கிறது, வசதி இருக்கிறது, செய்வதற்கு ஆள் இருக்கிறது. நன்றாக வரும் என்று நமக்கே தெரிகிறது. என்றாலும் காலத்தால் கிடைக்கக்கூடிய ஓர் ஒத்தாசையை நாம் இழக்கவேண்டாமே. இதற்காகத்தான் கால-நேரம் பார்த்து சுபகாரியங்களைச் செய்கிறோம். இதையொட்டியே திதி பார்த்துச் செயல்படுகிறோம்.

சில திதிகள் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். அதேபோல் வளர்ச்சியைக் கொடுக்காத திதிகளும் உண்டு. அந்தத் திதிகளும் கூட வேறுசில விஷயங்களில் நமக்குத் தேவைப்படுபவைதான்.

ராமாயணத்தில் ஒரு காட்சி. சீதையைக் கண்டு வந்த அனுமன் ராமபிரானைச் சந்திக்கிறார். சீதை எப்படி இருக்கிறாள் என்று வினவுகிறார் ராமன். அனுமன் பதில் சொன்னார் எப்படித் தெரியுமா? `பிரதமை அன்று படிப்பவனின் கல்வி எப்படிச் சிறுத்துப் போகுமோ, அதுபோல் சீதை சிறுத்துப் போய்விட்டார்’ என்றார்.

வளர வேண்டிய விஷயத்தைச் சிறுத்துப் போகச் செய்யும் திதியில் வைத்துக் கொள்ளாதே’ என்று சாஸ்திரம் அறிவுரை சொல்கிறது.