
டி.எஸ்.என்
நமது உள்ளங்கை சூரியன் முதலான ஒன்பது கிரகங்களுக்கு உரிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடுவில் பிரம்ம ஸ்தானமும் உள்ளது. விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மேட்டில் இருந்து ஆரம்பமாகிறது. அவற்றுக்கு அந்தந்த கிரகத்தை ஒட்டிய பெயர் உண்டு.
சுக்கிர விரல்: கையின் ஆணிவேர் என்பது கட்டை விரல். அதனால்தான் கையெழுத்துப் போட முடியாதவர்கள், கட்டை விரலில் மை தடவி கைநாட்டு போடும் பழக்கம் இருக்கிறது. உலகில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முகஜாடையில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், விரல் ரேகைகள் ஒன்றாக இருக்காது. அதனால்தான் சரியான குற்றவாளி களைக் கண்டுபிடிக்கவும் கட்டைவிரல் ரேகைகள் பயன்படுகின்றன. கட்டை விரல் ரேகைகளை மட்டும் வைத்து, கையிலுள்ள மற்ற ரேகைகளின் அமைப்பையும், ஜாதகத்திலுள்ள கிரக நிலையையும்கூட குறிப்பிட முடியும்.

தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும்போது, கட்டை விரலை மடித்து உள்ளங்கை மீது வைத்து, அதை மற்ற விரலால் அழுத்தி, கையை மூடிக்கொண்டிருக்கும். இதனால் கையிலுள்ள மொத்த ரேகைகளின் பிரதிபலிப்பும் கட்டை விரலில் பதிவாகிவிடுகின்றன. கட்டை விரல், சுக்கிர மேட்டுப்பகுதியில் ஆரம்பிக்கிறது. இதற்கு சுக்கிர விரல் என்று பெயர். இது இரண்டு எலும்புத்துண்டுகளின் சேர்க்கையால் அமைகிறது. கையை ஒட்டிய கீழ்ப்பகுதி மனோபாவத்தையும், நகமுள்ள மேற்பகுதி புத்தி பலத்தையும் குறிக்கிறது.
இந்த விரல் வடமொழியில் ‘அங்குஷ்ட’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதனின் மனோபாவம், உணர்ச்சிகள், சிந்தனைத்திறன், எண்ணங்கள், செயல்திறன் ஆகியவற்றைக் கட்டை விரல் கட்டுப்படுத்துகிறது. மற்ற விரல்கள் செயல்படும் திறமைக்கும் கட்டை விரலே உதவுகிறது
குரு விரல் அல்லது பிரகஸ்பதி விரல்: இது கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரல். உள்ளங்கை குரு மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரலுக்கு குரு விரல் என்று பெயர். இதை சம்ஸ்கிருதத்தில் ‘தர்ஜனி’ என்கிறார்கள். ஒருவனது ஞானம், கல்வி, திறமை ஆகியவற்றை இந்த விரல் அமைப்பு குறிப்பிடுகிறது.

சனி விரல்: நடுவிரல் அல்லது பெரு விரல் என்று குறிப்பிடப்படும் இது, உள்ளங்கை சனி மேட்டில் உற்பத்தியாவதால், சனி விரல் எனப்படுகிறது. இதை வடமொழியில் ‘மத்தியமா’ என்கிறோம். ஒருவனது வெற்றி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றை இந்த விரலின் அமைப்பு விளக்குகிறது.
சூரிய விரல்: சூரிய மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரலை மோதிர விரல், பவித்திர விரல் என்றும் குறிப்பிடுவார்கள். அதனால்தான், பூஜை, புனஸ்காரங்கள் செய்யும்போது, தர்ப்பையால் ஆன பவித்திரத்தை இந்த விரலில் அணிகிறோம். இதற்கு வடமொழியில் ‘அனாமிகா’ என்று பெயர். ஒரு மனிதனின் புகழ், பெருமை இந்த விரலின் அமைப்பால் தெரியும்.
புதன் விரல்: `கனிஷ்டிகா’ என்று குறிப்பிடப் படும் இதை, சுண்டு விரல் என்கிறோம். புதன் மேட்டில் உற்பத்தியாகும் இந்த விரல், புதன் விரல் எனப்படும். இதன் அமைப்பு திருமணம் குடும்ப வாழ்க்கைப் பற்றிய பல விவரங்களைத் தருகிறது.
அடுத்ததாக, ஒட்டுமொத்தமாக விரல்களின் அமைப்பைக்கொண்டு சில விவரங்களைக் காண்போம்.
விரல்கள் உள்ளங்கைகளை நோக்கி வளைந்திருக் குமானால் (படம் - 1) அவர்களுக்கு உலகப் பற்றுடன், தன்னைப் பற்றிய சிந்தனையும் சுய நலமும் மிகுதியாக இருக்கும். அவர்கள் தம்முடைய காரியங்களில் சிரத்தையாகவும் கவனமாகவும் ஈடுபாட்டுடனும் செயல்படுவார்கள்.
விரல்கள் புறங்கைப் பக்கமாக வளைந்திருந்தால் (படம் - 2) அவர்கள் பிறர் நலம் கருதுபவர்களாகவும் தாராள மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இரண்டு விரல்களுக்கு இடையே உள்ள இடைவெளியும் ஓரளவு சில குணங்களைப் பிரதிபலிக்கும். அவ்வகையில் கட்டை விரலுக்கும், குரு விரலுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால் (படம் - 3) அவர்கள் அன்பு, பண்பு, மனித நேயம் உடையவர்களாக இருப்பார்கள்.

குரு விரலுக்கும் சனி விரலுக்கும் மத்தியில் அதிகமாக இடைவெளி இருக்குமானால் (படம் - 4) அவர்கள் சுயமாக சிந்தித்துச் செயல்படுபவர்கள். மனத்தில்பட்டதைப் பளிச்சென்று சொல்பவர்கள்.
சனி விரலுக்கும் சூரிய விரலுக்கும் அதிக இடைவெளி இருந்தால் (படம் - 5) அவர்கள் பொருளையும் வசதியையும் மட்டும் விரும்புபவர்கள், புகழுக்காக பொருளைத் தியாகம் செய்யாதவர்கள்.
சூரிய விரலுக்கும், புதன் விரலுக்கும் மத்தியில் இடைவெளி அதிகமாக இருந்தால், (படம் - 6) அவர்கள் குற்றம் செய்வதிலும் பிறருக்குத் தீங்கு இழைப்பதிலும் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
பெண்களின் ருது கால பலன்கள்
பெண்கள் ருது ஆகும் காலம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த வேளையை வைத்து ஜாதகம் கணிப்பதும் உண்டு. ஆனால், பலர் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் ருது ஆகும் கிழமையை அனுசரித்து, உரிய பலாபலன்கள் ஜோதிட நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஞாயிறு: புத்ர தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நலம் குறை ஏற்படும். இவர்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் - ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது நலம்.
திங்கள்: இந்த நாளில் ருதுவாகும் பெண், குணவதியாகவும் தன் கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் மாதரசியாகவும் திகழ்வாள்.
செவ்வாய்: சிரமங்களையும், சவால் களையும் சமாளிக்க வேண்டியது வரும். முருகப்பெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றிவைத்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
புதன்: சௌக்கியமான வாழ்க்கை அமையும்.
வியாழன்: இந்த நாளில் ருதுவாகும் பெண் குணவதியாக இருப்பாள்.
வெள்ளி: புத்ர லாபம் உண்டாகும்.
சனி: ஏழ்மை சூழவும் முன்கோபத் துடனும் வாழும் நிலை ஏற்படலாம். தொடர்ந்து எட்டு வாரங்கள் - சனிக் கிழமைகளில், ஸ்ரீசனைச்சரருக்கு எள் தீபம் ஏற்றி வைத்து வழிபட சங்கடங்கள் அகலும்.