Published:Updated:

சாப்பாட்டில் நீங்கள் எப்படி?

உணவும் நவகிரகங்களும்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவும் நவகிரகங்களும்

கிரகங்களும் உணவுகளும்! ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

உலகின் இயக்கத்துக்கும் நவகிரகங்களுக்கும் நிரம்ப தொடர்பு உண்டு. ஒன்பது கிரகங்களின் சுழற்சி, பூவுலகு மற்றும் அதில் வாழும் உயிரினங்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறது என்கின்றன ஜோதிட நூல்கள். அப்படியே நாம் உண்ணும் உணவு வகைகளிலும் நவ கிரகங்களின் பாதிப்பு உண்டு. அவ்வகையில், அவரவர் ஜாதகத்தில் கிரக நிலைகளுக்கு ஏற்ப சாப்பாட்டில் நாம் எப்படி, எவ்வகையான உணவுகள் பிடிக்கும் என்பது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சாப்பாட்டில் நீங்கள் எப்படி?
irisstock

சூரியனின் நிலையும் உணவுப் பழக்கமும்

ஜாதகத்தில் சிம்மம் அல்லது மேஷ ராசியில் சூரியன் இருந்தாலும் அல்லது அவர் லக்னாதிபதியாக இருந்தாலும் அந்த ஜாதகர் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்கும். இப்படியான ஜாதகர்கள் சூடான உணவை உண்ணுவதிலும் நேரம் தவறாமல் உணவருந்துவதிலும் நாட்டம் கொண்டிருப்பார்கள்.

கோதுமைப் பண்டங்கள், நெல், நிறைய காரம் சேர்த்த உணவு வகைகள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நளபாகத்துடன் கூடிய விருந்து என்றால் கொள்ளைப் பிரியம் இவர்களுக்கு. மேலும் அறுசுவை விகிதாசாரம் குறித்து துல்லியமாக அறிவுரை கூறும் அளவுக்கு உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். உணவு அருந்தும் போதே தண்ணீரையும் சேர்த்துப் பருகும் இயல்பு கொண்டவர்கள் இவர்கள்.

லக்னாதிபதி சந்திரனா?

ந்திரன் ஒரு ஜாதகத்தில் கடகம் மற்றும் ரிஷபத்தில் இருந்தாலோ அல்லது அவர் லக்னாதிபதியாகத் திகழ்ந்தாலோ, அந்த ஜாதகர் காரம் குறைந்த உணவில் நாட்டம் கொண்டிருப்பார்கள். பால், தயிர், மோர், நெய், பச்சரிசியால் ஆன உணவுகள், பழச்சாறு ஆகியவற்றைச் சுவைத்து உண்ணுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இரவில் பாலும் பழமும் உண்ணாமல் உறங்கவே மாட்டார்கள்.

செவ்வாய் பகவானும் பருப்பு ரசமும்

ஜாதகத்தில் செவ்வாய் மேஷம், விருச்சிகம் மற்றும் மகர ராசியில் இருந்தாலும் அல்லது அவரே லக்னாதிபதியாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு உணவில் பருப்பு, ரசம் அவசியம் தேவை. மசாலா இணைந்த உணவுகள் காய்கறிகளின் மீது விருப்பம் உண்டு.

உணவு பரிமாறப்பட்டவுடன் குறிப்பிட்ட ஒன்றை மிக அதிகமாக சுவைத்து உண்ணும் பழக்கம் இவர்களுக்கு உண்டு. குறிப்பிட்ட அந்த உணவுப் பொருள்... பருப்பு, பால், தயிர், இனிப்புப் பலகாரம், பாயசம், மசாலா கலந்த பொரியல் இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். பிடித்த உணவு இல்லையெனில், அன்றைய பொழுத்துக்குச் `சாப்பாடே வேண்டாம்’ என்றும் கூறிவிடுவார்கள். அதேபோல், இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் பிடித்த உணவு வரும்வரையிலும் காத்திருக்கத் தயாராகவும் இருப்பார்கள்!

சாப்பாட்டில் நீங்கள் எப்படி?
KucherAV

புதனும் பச்சைக் காய்களும்!

ஜாதகத்தில் புதன் மிதுனம் அல்லது கன்னி ராசியில் அமைந்து இருந்தாலோ அல்லது அவரே லக்னாதிபதியாக விளங்கினாலோ, அந்த ஜாதகருக்குப் பசுமையான காய்கறிகளைச் சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருக்கும். சமையலை மட்டம் தட்டுவதோ, உணவுகளைக் குறை சொல்லும் பழக்கமோ இவர்களுக்குக் கிடையாது. அதேநேரம் சத்தான உணவைத் தேடி உண்பதில் சமர்த்தர்கள். உணவை வீணாக் குவதும் இவர்களுக்குப் பிடிக்காத விஷயம்!

கீரை பிடிக்குமா... குருவருளே காரணம்!

குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் தனுசு, மீனம் மற்றும் கடக ராசியில் இருந்தாலோ அல்லது அவர் லக்னாதிபதியாக விளங்கினாலோ, ஜாதகர் புரதச் சத்து மிகுந்த உணவில் விருப்பம் உள்ளவராகத் திகழ்வார்.

இவர்கள் பசும்பால் பிரியர்கள். பாலினால் செய்யப்பட்ட பதார்த் தங்களில் அதீத விருப்பம் இருக்கும். இவர்கள், உணவின் தரத்தையும் ரகத்தையும் பிரித்துச் சுவை பார்த்துச் சொல்வதில் வல்லவர்கள். காய் - கனிகள் மற்றும் கீரை வகைகளை உண்ணுவதில் அதிக விருப்பம் இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது பட்டாணி, சுண்டல், மாங்காய், தேங்காய்த் துருவல் என ரசித்து உண்பார்கள்.

பிரியாணி பிரியரா நீங்கள்?

ஜாதகத்தில் ரிஷபம், துலாம் மற்றும் மீனம் போன்ற ராசிகளில் சுக்கிரன் இருந்தாலோ அல்லது அவர் லக்னாதிபதியாகத் திகழ்ந்தாலோ, குளிர்ச்சியான பதார்த்தங்களில் நாட்டம் அதிகம் இருக்கும். பிரியாணி முதலான உணவு வகைகள், விலையுயர்ந்த பதார்த்தங்கள், சத்துள்ள தானியங்களை விரும்பி உண்பார்கள்.

இப்படியான ஜாதகர்களுக்கு வெங்காயம், தக்காளி விலையுயர்வு பற்றியெல்லாம் கவலை இருக்காது. இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வார்கள். இவர்கள் குளிர்பானப் பிரியர்கள். சிவப்பு நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளின்மீது அதீத விருப்பம் இருக்கும்.

நல்லெண்ணெய் சமையல்!

னி பகவான் ஒரு ஜாதகத்தில் மகரம், கும்பம் அல்லது துலாம் ராசியில் இருந்தாலோ அல்லது லக்னத்தின் அதிபதியாக வந்தாலோ, அந்த ஜாதகருக்கு நல்லெண்ணெய் மீது ஈர்ப்பு இருக்கும். உணவில் அதை அதிகம் பயன்படுத்துவார்கள். வெல்லம், பனை வெல்லம், புளி, நல்ல இனிப்புள்ள பொருட்கள், எள் ஆகியவற்றால் ஆன பதார்த்தங்களை விரும்பி உண்பார்கள்.

எவ்வளவு அருமையாக சமையல் செய்தாலும், துல்லியமாக அதிலொரு குறையைக் கண்டுபிடித்துச் சொல்லும் சாமர்த்தியமும் இவர்களுக்கு உண்டு. அன்னதானம் செய்வதும், பொதுப் பந்தியில் அமர்ந்து உண்பதும், நண்பர்களையும் உடன் அழைத்துக்கொண்டு கூட்டமாகச் சேர்ந்து சாப்பிடுவதிலும் நாட்டம் உண்டு. இவர்களுக்கு உணவில் சூடு, சுவை மற்றும் அளவு சரிவர இருத்தல் வேண்டும். பரிமாறுவதில் நேர்த்தியை எதிர்பார்ப்பார்கள்.

சாப்பாட்டில் நீங்கள் எப்படி?
Kailash Kumar

உங்கள் சாய்ஸ் இட்லி - வடையா?

ஜாதகத்தில் ரிஷபம் அல்லது விருச்சிக ராசியில் ராகு இருந்தாலோ, லக்னத்தில் ராகு பகவான் அமையப் பெற்றிருந்தாலோ, அவர்களுக்கு இயற்கையிலேயே உளுந்து கலந்த உணவுப் பொருளின் மீது ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இட்லி, தோசை, வடை மற்றும் சிறு தீனிகள் சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் காலநேரம் பாராது, இடைவெளி விடாது, உணவுப் பொருளின் சுவையை அறியாது, வேகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அன்பர்களாகவும் விளங்குவார்கள்.

கேதுவின் திருவருள்... சமச்சீர் உணவு!

ஜாதகத்தில் கேது பகவான் விருச்சிகம் அல்லது ரிஷப ராசியில் இருந்தால் அல்லது லக்னத்தில் கேது பகவான் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் கடுமையான விரதமுறைகளை அனுசரிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருப்பார். சத்துள்ள ஆகாரங்கள், தானியங்களை உணவாக எடுத்துக்கொள்வதில் நாட்டம் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களின் உணவு முறை சமச்சீரான அளவுடன் இருக்கும். சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்வார்கள். சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். இப்படியான ஜாதகக்காரர்கள் பெரும்பாலும் மெலிந்த தேகத்தினராகத் திகழ்வார்கள்.