
ஶ்ரீரங்கம் இரா கார்த்திகேயன்
நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள்; நிழல்கிரகங்கள். `கேதுவைப் போல் கெடுப்பவனும் இல்லை; ராகுவைப் போல் கொடுப்பவனும் இல்லை' என்பது ஜோதிடக் கூற்று.
என்றாலும் சில தருணங்களில் இவை தங்களின் இயல்பு நிலைக்கு மாறாக ராஜ யோகங்களைக் கொடுக்கும் ஜாதக அமைப்பும் உண்டு. வாருங்கள்... கேது ஒரு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் இடத்துக்கு ஏற்பத் தரும் பலன்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் கேது பகவான் வீற்றிந்தால், அந்த ஜாதகக்காரர்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். சொந்த வீட்டைக் கட்டுபவராகவும் அப்படிக் கட்டிய வீட்டில் நிலைத்து வாழக்கூடிய தன்மை பெற்ற வராகவும் இருப்பார்கள்.
இவரது வாழ்க்கையில் நிதானமே பிரதான மாக இருக்கும். அவ்வப்போது ஆசன வாய் சம்பந்தப்பட்ட தொந்தரவும் நரம்பு சம்பந்தப்பட்ட தொந்தரவும் இருந்து வரும். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து அதன் பிறகே ஒரு முடிவுக்கு வந்து செயல்படுவார்.

கேது பாகவான் 2-ம் வீட்டில் அமையப் பெற்றால், அந்த ஜாதகர் தெய்வத்தின் ஆசீர்வாதம் பெற்றவராகத் திகழ்வார். பூஜை, புனஸ்காரம் மற்றும் குடும்பத்தில் பாரம்பர்யமான வழிபாட்டு விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பவராக இருப்பார். இவருடைய பேச்சிலும் நாக்கிலும் தெய்வம் குடிகொண்டிருக்கும். நாணயத்தைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் லாப நஷ்டத்தைப் பார்க்கமாட்டார்.
கேது 3-ம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் தன் சகோதர, சகோதரர்களின் மீது அதிருப்தி கொண்டவராகவும், ஒரு காரியத்தை நிறைவேற்றுவதில் அதீத முயற்சி இல்லாதவரா கவும் இருப்பார். சகோதர சகோதரிகளால் ஆதாயம் பெற முடியாத நிலையும் இருந்துவரும்.
இவரின் உடன்பிறந்தவர்கள் சொல் பேச்சு கேட்காதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அமையப்பெற்றவர்கள் அதிக அலைச்சலையும் மன உளைச்சலையும் பெற விரும்ப மாட்டார்கள். எதிலும் கஷ்டப்படாமல் வெற்றி வேண்டும் என விரும்புபவர்களாக இருப்பார்கள்.
கேது பகவான் 4-ல் அமையப்பெற்றிருந்தால், அந்த ஜாதகர் சோம்பேறித்தனம் மிகுந்தவராக இருப்பார். வீட்டு அருகிலேயே அனைத்து விஷயங்களும் கைகூட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பார்கள். `திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற வார்த்தை இவர்களுக்கு பிடிக்காத ஒன்று. அதிகமான உறக்கத்தையும் இருந்த இடத்திலிருந்து காரியங்களை முடிக்கும் தன்மையும் பெற்று இருப்பார்.
தன் தாயிடம் அடிக்கடி கோபம் கொள்வதும் தாய்வழி உறவுகளிடம் சண்டை போடுவதுமே வழக்கமாக இருக்கும். தன் திறமையைக் காசாக்கத் தெரியாமல், வீண்புகழ் பாடி அல்லது வீண் புகழ் பேசிக் காலத்தைப் போக்குவதில் வல்லவர்கள்.

ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருந்தால் அந்த ஜாதகர் பொருளாதாரத்தில் பெரிய நன்மையை எட்டாதவராகவும், பிள்ளைகளால் துன்பம் அடைபவராகவும், தன் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து நினைத்துக் கவலை கொள்பவர்களாகவும் இருப்பார். இவர்களுக்கு தெய்வப் பற்றோ அல்லது ஆன்மிக சேவையோ செய்வதில் ஆர்வம் குறைந்து காணப்படும். தான் செய்து வரும் காரியங்களே பெரிது என மனதுக்குள் நினைத்துக் கொள்வார்.
கேது பகவான் ஜாதகத்தில் 6-ல் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகரின் வாழ்க்கை சற்றுப் போராட்டமாக இருக்கும். கடன்களை அடைப்பதும் கடன்களை திரும்பப் பெறுவதும் இந்த ஜாதகர்களுக்குச் சிரமமாக இருக்கும். உடல்ரீதியான அல்லது மன ரீதியான போராட்டத்திற்கு உட்படுவது போன்ற விஷயங்கள் அடிக்கடி நிகழும். கடும் போராட்டத்திற்குப் பிறகு காரியங்களில் வெற்றி பெறும் அமைப்பு வாய்க்கும். ஆனால், போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் வெற்றி அவர்களை ஒரு ராஜாவைப்போல வாழவைக்கும்.
ஜாதகத்தில் கேது பகவான் 7-ம் இடத்தில் அமர்ந்திருந்தால், தன் அன்புக்குரிய துணையை நினைத்துக் கவலை கொள்பவராகவும், அவரிடம் அதிருப்தி கொண்டவர்களாகவும் இருப்பார். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருப்பார். ஆசை, பாசம், காதல் போன்ற விஷயங்களுக்காக ஏங்கித் தவிப்பவர்களாக இருப்பார். அதைப் பெறுவதில் அவர்களுக்கு ஒரு தடை இருந்த வண்ணம் இருக்கும்.
சிலருக்குத் தன் வாழ்க்கைத் துணையை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து வாழ வேண்டிய பிராப்தமும் ஏற்படும். `வெட்டு ஒன்று துண்டு இரண்டு' என்று பேசத் தெரியாத அப்பாவிகளாக இந்த ஜாதகர்கள் இருப்பார்கள்.
ஜாதகத்தில் கேது பகவான் 8-ம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர்கள் எதிர்வாதம் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். சாஸ்திரங்களைக் குறை கூறுபவர்களாகவும், விமர்சிப்பவர்களாகவும், ஆச்சார அனுஷ்டான முறைகளை விரதங்களைக் கடைப் பிடிக்காதவர்களாகவும் இருப்பார்கள். ஜோதிட நம்பிக்கை குறைவாகவே காணப்படும்.

அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளும், அஜீரண பாதிப்புகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்பட்ட வண்ணம் இருக்கும். பிறரின் நம்பிக்கைகளைக் கேலி கிண்டல் செய்வதிலும், நக்கல் நையாண்டி செய்வதிலும் முனைப்பு அதிகமாக இருக்கும். ஆனாலும் தெய்வ நம்பிக்கை இருக்கும்.
லக்னத்திற்கு 9-ம் இடத்தில் கேதுபகவான் அமையப் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் மதிப்பு, மரியாதை, கெளரவம் போன்ற விஷயங்களை எதிர்பார்க்காதவராகவும் எளிய வாழ்க்கை முறையை வாழும் மனிதராகவும் இருப்பார். புகழ் இமயமலை அளவிற்கு இருந்தாலுமே அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் இயல்பாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் இவர்களுக்கு எந்தவித ஆதாயமும் இருக்காது. பூர்வீகச் சொத்தை அனுபவிப்பதற்கான பிராப்தம் இந்த ஜாதகர்களுக்குக் குறைந்தே காணப்படும் என்றால் மிகையில்லை.
ஜாதகத்தில் லக்னத்திற்கு 10-ம் இடத்தில் கேது அமைந்து பலன் கொடுத்தால், அந்த ஜாதகர் பொருளாதாரக் கொள்கையில் கைதேர்ந்தவராக இருப்பார். பொருளைச் சேர்ப்பதிலும் அதை அனுபவிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவார். கடல் கடந்து சுபச் செய்திகளைப் பெறுவதும் கடல் கடந்து வியாபாரம் செய்யும் வாய்ப்பை பெறுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.
வேற்று மொழி, வேற்று இனத்தினர், வேற்று மதத்தினருடன் கைகோர்த்துப் பொருளாதாரம் ஈட்டுவதில் முனைப்பு காட்டுவார்கள். வியாபாரத் தில், இவர்களிடம் பேசி வெற்றி பெறுவது எளிதல்ல.
கேது பகவான் லக்னத்திற்கு 11 - ம் இடத்தில் அமையப்பெற்ற ஜாதகக்காரர்கள் நிதானமான வருமானமும் நீண்ட நாள் தொழிலையும் உடைய வர்களாக இருப்பார்கள். எதையுமே எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆன்மிக சேவையின் மூலமாக லாபமும் வந்து சேரும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிக்குச் சொந்தக்காரர்களாக இவர்கள் இருப்பார்கள் எனலாம்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு 12-ல் கேதுபகவான் அமையப்பெற்ற அந்த ஜாதகக்காரர்கள் மோட்சத்தை நோக்கிச் செல்வார்கள் என்கிறது ஜோதிடம். சுக துக்கத்தைப் பார்க்காமல், இன்ப துன்பத்தைப் பார்க்காமல், குடும்ப உறவுகளையும், பந்த பாசத்தையும் தேடாமல், தெய்வத்தை தேடிச் செல்பவர்களாகவே இருப்பார்கள்.
எந்த ஒரு செயலிலும் மனதைத் தடுமாற விடமாட்டார்கள். எந்த ஒரு நேரத்திலும் இந்த உலக இன்பத்திற்குத் தன்னைவ் சொந்தம் ஆக்கிக்கொள்ள மாட்டார்கள். அதுபோலவே வரவு செலவு செய்வதிலும் கெட்டிக்காரர்களாக இவர்கள் இருப்பார்கள். அவ்வப்போது உடல் அசதி, கைகால் சோர்வு, முதுகு தண்டு ஆகிய பகுதிகளில் வலி வந்து சிரமப்படுவார்கள்.
மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்துமே பொதுவானவை. ஜாதகத்தில் பிற கிரக சேர்க்க மற்றும் அமையும் நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் வேறுபடும்.
கஜ பூஜை, கணபதி ஹோமம், சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு, சுவேத விநாயகர் வழிபாடு, கொள்ளு தானிய தானம், பிள்ளையார்பட்டி சென்று விநாயகரை வழிபடுதல், மலைக்கோட்டை விநாயகர் வழிபாடு, காணிப்பாக்கம் விநாயகர் வழிபாடு, சயன கோலத்தில் இருக்கும் கணபதி விக்ரகத்தை தரிசனம் செய்வது ஆகியவை கேது பகவானின் அருளைப் பெற்றுத் தரும் வழிபாடுகள் ஆகும்.
கேது தசை நடக்கும் காலங்களில் இவற்றில் ஏதேனும் ஒரு வழிபாட்டை மேற்கொண்டால் கேதுவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
கேது தசை... என்னென்ன நடக்கும்?
கேது ஞான காரகன். உலக ஆசைகள் அனைத்திலும் இருந்து நம்மை விலக்கி, பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுபவர். கேது தசை ஒரு ஜாதகத்தில் ஏழு வருடங்கள். கேதுவின் தசை நடக்கும் காலத்தில், அந்த ஜாதகருக்கு ஆன்மிக ஞானத்தைத் தேடுவதும் அதை அடைவதுமே குறிக்கோளாக அமையும். தூக்கத்தில் காணும் கனவுகள் பலிக்கும்.
சகுன சாஸ்திரங்கள், வாஸ்து சாஸ்திரங்கள் ஆகிய வற்றில் புரிதல் ஏற்படும். நல்ல தெய்விக நூல்களைக் கற்று தெளியும் காலமும் அதுவே. பொதுவாக கேது தசையின்போது ஒரு ஜாதகனுக்கு, வாசனாதி திரவியங்கள், அழகு சாதனப் பொருள்கள் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களின் மீது ஈர்ப்பு இருக்காது. தாய் மற்றும் தாய் வழி உறவுகள் மீது இரட்டைக் கொள்கைகள் ஏற்படும்.
கோயில், பூஜைகள், ஆலய நிர்வாகம், புரோகிதம், ஜோதிடம் சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்குக் கேது தசை வரப்பிரசாதம். மற்ற துறையினருக்கு கேது தசா காலத்தில், நாள்களும் வேலைகளும் மெள்ளவே நகரும். யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தேகப் பயிற்சி, பாரம்பர்ய உணவு போன்ற விஷயங்களில் அதிக ஈர்ப்பு ஏற்படும்!