Published:Updated:

யுகம் தொடங்கிய திருநாள் அட்சய திருதியை!

மகாவிஷ்ணு மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
மகாவிஷ்ணு மகாலட்சுமி

`தர்ம சிரேஷ்டர்' ஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

யுகம் தொடங்கிய திருநாள் அட்சய திருதியை!

`தர்ம சிரேஷ்டர்' ஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
மகாவிஷ்ணு மகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
மகாவிஷ்ணு மகாலட்சுமி

பூரணத்துவமான திருவருளைப் பெற்றுத் தரும் அற்புதத் திருநாள் அட்சயதிருதியை. இந்த வருடம் வரும் 3.5.22 செவ்வாய்க்கிழமை அன்று அட்சய திருதியைத் திருநாள் வருகிறது. இந்த தினத்தில் நாம் செய்யும் புண்ணிய காரியங்களுக்கான பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

இந்த நாளின் மகத்துவங்கள் என்ன, அட்சய திருதியை அன்று நான் என்னென்ன செய்ய வேண்டும் விரிவாகத் தெரிந்துகொள்வோமா?

யுகம் தொடங்கிய திருநாள்
அட்சய திருதியை!

ண்ணன் அருளால் குசேலன் குபேர சம்பத்து பெற்றதும், குபேரனுக்கு செல்வத்தின் அதிபதியாகும் பேறு கிடைத்ததும், திரெளபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும், விநாயகப் பெருமான் ஒற்றைத் தந்தத்தை உடைத்து பாரதம் எழுதத் தொடங்கியதும் இந்த நாளில்தான்.

முகூர்த்த சாஸ்திரத்தின் பரிந்துரை

சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கும் நாள் அமாவாசை. சூரியனை விட்டு நகரத் துவங்கும் தருணத்தில், சூரிய கிரணங்களில் ஒரு சிறு பகுதி, சந்திரனில் விழும். நகர்ந்ததும், அதில் விழுகிற முதல் பகுதி பிரதமை எனப்படும். மூன்றாவது பகுதி, திருதியை எனப்படும்.

சூரியனின் உஷ்ணக் கதிர்கள், சந்திரனில் உள்ள நீரில் கலந்து, வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக வெளிவரும் என்கிறது ஜோதிடம். 3-ஆம் நாள், சந்திரனைப் பார்க்க இயலும். மூன்றாம் திதியில் இணைந்த செயல்கள் யாவும் முன்னேற்றத்தைத் தரும். அதனால்தான், நல்ல காரியங்களைச் தொடங்குவதற்குத் திருதியை உகந்தது எனப் பரிந்துரைக்கிறது முகூர்த்த சாஸ்திரம். ‘க்ஷயம்’ என்றால் குறை; ‘அக்ஷயம்’ என்றால் நிறை. நிறைவை வழங்கும் திருதியை அக்ஷய திருதியை (அட்சய திருதியை) என வழங்கப்படுகிறது.

வளர்பிறை திருதியை, வருடத்தில் 12 உண்டு. அதில், வைசாகத்தில் வருகிற வளர்பிறை திருதியை, அட்சய திருதியை எனும் சிறப்பைப் பெறுகிறது. அன்றைக்குத்தான் கிருத யுகம் ஆரம்பான நாள். சதுர் யுகங்களில் கிருத யுகம் `முதலாவது’ என்பதையும் கடந்து, சிறப்புப் பெற்ற யுகமாகத் திகழ்கிறது. மூளையின் முழுவளர்ச்சியை அடைந்த மனித இனம் வாழ்ந்ததும், அறமானது முழுமை பெற்றுப் பெருமையுடன் விளங்கியதும் இந்த யுகத்தில்தான்!

அறமானது, அடுத்தடுத்த யுகங்களில் கால் பங்கு, கால் பங்காகக் குறைந்து, நாம் வாழ்கிற கலியுகத்தில் மீதமுள்ள கால் பங்கு மட்டுமே இருக்க... முழு வளர்ச்சியை அடைய முடியாமல் மனிதர்கள் தவிப்பார்கள்; தத்தளிப்பார்கள்! ஆக, முழுமையான யுகம் தொடங்கிய திருநாள் அட்சயதிருதியை. எனவே, குறைகளை நிறைவு செய்வதற்கு, அட்சய திருதியை நாளில், ஆண்டவனை வழிபட பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். அந்த நாளில், மகாலக்ஷ்மியுடன் இணைந்த ஶ்ரீமந் நாராயணனை வழிபட்டால், குறைவற்ற வாழ்வைப் பெறலாம்!

அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத, இரண்டாக உடையாத முழு அரிசிக்கு ‘அட்சதை’ என்று பெயர். க்ஷதம் என்றால் அடிபட்டது என்றும், அக்ஷதம் என்றால் அடிபட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை, மதுசூதனனை வணங்குவதால், அந்தத் திதிக்கு ‘அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம். அந்த நாளில் செய்யப்படுகிற ஜபம், வேள்வி, கொடை ஆகியவை அட்சயமான பலனைத் தரும் என்றும் அறிவுறுத்துகிறது.

யுகம் தொடங்கிய திருநாள்
அட்சய திருதியை!

என்னென்ன தானம் செய்ய வேண்டும்?

வைசாகம் என்பது வசந்த காலம். அதில், வசந்த மாதவனை, அதாவது மதுசூதனனை வழிபட வேண்டும் என்கிறது புராணம். வேதம் ஓதுபவர்களை, வசந்த மாதவனாக நினைத்து, உணவளித்து உபசரிக்க வேண்டும்; நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு ஆகியவற்றைத் தானம் செய்யவேண்டும். க்ரீஷ்ம ருதுவின் தோற்றமாக இருப்பதால், வெப்பத்தைத் தணிக்கும் வகையில் உடுக்க உடை, தயிர்சாதம், குடை, பாதரக்ஷை, பானகம், நீர் மோர், விசிறி போன்றவற்றைத் தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு அக்ஷயமாக, நிறைவாக பெருகும்.

அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து, நீராடி, உணவேதும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்தபிறகே உணவை ஏற்கவேண்டும். இது, மனத் தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப் பயனும் கிடைக்கிறது.

உடலை இயக்குவது பிராணன். அந்தப் பிராணனை, இயக்கச் செய்வது அன்னம். ஆகவே, அன்னம் என்பது உயிரின் உயிர் என்கிறது வேதம் (அன்னம் பிராணஸ்யபிராண:). அன்னதானம், பலரை வாழ வைப்பதால், சிறந்த தானமாகப் போற்றப்படுகிறது. அட்சயதிருதியை நாளில் அன்னதானத்துக்குச் சிறப்பிடம் உண்டு!

அலப்ய யோகம்!

ருடத்தின் முதல் இரண்டு மாதங்கள், வசந்தகாலம். முதல் மாதத்துக்கு மது என்றும், 2-வது மாதமான வைசாக மாதத்துக்கு (வைகாசி) மாதவன் என்றும் பெயர். ‘மா’- லக்ஷ்மியின் திருநாமம்; ‘தவ’- அவளுடைய கணவன் மந் நாராயணனைக் குறிப்பது! ஆகவே, வசந்த மாதத்தில் வசந்த மாதவனை வணங்கினால், நம் வாழ்விலும் வசந்தம் வீசும் என்பது உறுதி.

அரிதான வேளையை சந்திப்பதை, ‘அலப்ய யோகம்’ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும். ஆகவே, அரிதான அட்சய திருதியைத் தவறவிட்டால், பிறகு ஒரு வருடம் காத்திருக்கவேண்டும். அந்த நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் ஜலமும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தைத் தானமாகத் தருவது சிறப்பு என்பர். இதனை ‘தர்மகடம்’ எனப் போற்றுவர். அந்த நிறைகுடமானது, வாழ்வில் நமக்கு நிறைவான செல்வத்தைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்!

யுகம் தொடங்கிய திருநாள்
அட்சய திருதியை!

முன்னோர் ஆராதனை...

லகத்தார் அனைவரும் தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் ஆகியோரை ஆராதிக்கவேண்டும். அதாவது, இறைவனையும் கற்றறிந்த அறிஞர்களை யும் முன்னோர்களையும் ஆராதனை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அட்சய திருதியையில் வசந்த மாதவனையும், வேதம் ஓதுவோரையும் மறைந்த முன்னோர்களையும் வணங்கச் சொல்கிறது பவிஷ்ய புராணம். குளித்து, உடுத்திக்கொண்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, விரதமிருந்து மதுசூதனனுக்கு 16 வகை உபசாரங்களைச் செய்வது தேவ வழிபாடு. கொடை வழங்கி, வேதம் ஓதுவோரை மகிழ்விப்பது ரிஷிகள் வழிபாடு. அன்னதானம் செய்து ஏழை-எளியோரை மகிழ்விப்பது மனித வேள்வி. எள்ளும் தண்ணீரும் அளித்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது, பித்ரு வழிபாடு. ஆக, முழுமையான அறத்தை நடைமுறைப்படுத்துகிற நாளே, அட்சய திருதியை!

பவிஷ்ய புராணம் சொல்லும் தகவல்

ஹோதயன் எனும் வணிகன், வறுமையில் வாடினான். அவன் அட்சயதிருதியையின் சிறப்பை உணர்ந்து, ஆர்வத்துடன் அட்சய திருதியை விரதம் மேற்கொண்டு, மதுசூத னனை வழிபட்டான். மனைவியின் எதிர்ப்பை யும் மீறி, சேமித்தவற்றை யெல்லாம் தானமாக வழங்கினான்; அன்ன தானம் செய்தான். இதில் மகிழ்ந்திருந்தவனுக்கு, ஏழ்மை என்பதே மறந்துபோயிற்று. ஒருநாள் இறந்து போனான். பிறகு அரசனாகப் பிறந்தான். அவனது ராஜாங்கத்தில், கஜானா நிரம்பி வழிந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்; மங்காத புகழுடன் அவன் திகழ்ந்தான் எனும் தகவல் பவிஷ்ய புராணத்தில் உண்டு.

ஆகவே, இந்த நாளில், ‘வசந்த மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முடிந்தால் தங்கம், நிலம், பசுமாடு தானம் செய்யுங்கள். இயலாதவர்கள், 108 முறை மந்திரத்தைச் சொன்னாலே போதும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism