Published:Updated:

தேன் கொண்டு நாவில் எழுதி... சிறப்பு வழிபாடு!

ஶ்ரீ அட்சயபுரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீ அட்சயபுரீஸ்வரர்

கல்வி ஞானம் அருளும் இன்னம்பூர் அட்சயபுரீஸ்வரர்

தேன் கொண்டு நாவில் எழுதி... சிறப்பு வழிபாடு!

கல்வி ஞானம் அருளும் இன்னம்பூர் அட்சயபுரீஸ்வரர்

Published:Updated:
ஶ்ரீ அட்சயபுரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீ அட்சயபுரீஸ்வரர்

பொதுவாக புதனுடைய ராசிகளான மிதுனம், கன்னி; குருவுடைய ராசிகளான தனுசு, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் நிறைய படிப்பார்கள். அதேபோல், மேஷம், ரிஷபம், துலாம் ராசியினர் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்வார்கள். இந்த ஏழு ராசிக்காரர்கள்தான் படிப்பில் ஜொலிக்க முடியும் என்றில்லை. எல்லா ராசியினருக்குமே கல்வி நன்றாக வரும். அந்த கல்வியின் நிலை என்ன என்பதை ஜாதகத்தை வைத்துதான் அறிந்து கொள்ள முடியும்.

தேன் கொண்டு நாவில் எழுதி... சிறப்பு வழிபாடு!

ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்கவேண்டும். அத்துடன் இந்த நான்கும் உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும் போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.

ஜாதகத்தில் கிரகநிலைகளை நன்கு ஆராய்ந்து, படிப்பு மற்றும் உத்தியோக நிலைகளை அறிந்து செயல்படலாம். அத்துடன் தெய்வபலமும் துணைநின்றால் வாழ்வில் ஜெயிக்கலாம்.

சிறந்த கல்வியையும் பலதுறைகளிலும் சிறந்த ஞானத்தையும் தரும் ஒரு திருத்தலம் கும்பகோணம் அருகில் உள்ளது. அந்தத் தலம் இன்னம்பூர். காவிரி வடகரையில் அமைந்த 54 தலங்களில் 45-வது தலம் இது. இங்குள்ள இறைவன் தாமாகவே தோன்றியவர். ஆகவே, தான்தோன்றீஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார். அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணத்தை உபதேசித்த காரணத்தால் அட்சயபுரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. இந்தத் தலத்தின் அம்பிகை அருள்மிகு நித்யகல்யாணி, கல்யாண பிராப்தம் தரும் அம்மையாக அருள்கிறாள்.

வாய் பேசமுடியாமை, திக்குவாய் பிரச்னை, கல்வியில் தடை, நினைவாற்றல் இல்லாமை ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி இங்கு வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். தான்தோன்றீஸ்வரர் அருளால் சிறந்த கல்வி, நினைவாற்றல், எழுத்தாற்றல், கணிதத் திறமை, நல்ல வேலை ஆகிய அனைத்தும் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

வேண்டுதல்களோடு வரும் பக்தர்கள் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ மற்றும் தேன் பாட்டில் ஆகிய பூஜை பொருள்களுடன் வரவேண்டும். மூலவர் சந்நிதியில் யாருக்கான பிரார்த்தனையோ அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவரின் நாக்கில், தேனை வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை அர்ச்சகர் எழுதுகிறார்.

ஓம் ஶ்ரீஅக்ஷரபுரீஸ்வராய நம:
ஓம் அகஸ்தியாய நம:
ஓம் சரஸ்வதியே நம:


இந்த ஸ்லோகத்தை நாக்கில் எழுதியபின், அவர்கள் ஈசனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டு செல்கிறார்கள். ஒருமுறை வந்தால் போதும். இறையருளைப் பரிபூரணமாகப் பெறலாம். எந்தக் கிழமையில் வேண்டுமானாலும் இந்தப் பிரார்த்தனையைச் செய்து வழிபட்டுச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism