சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சுப கிரகங்கள் என்ற சிறப்புக்கு உரியவர்கள். இவர்களில் சுக்கிரனின் பலம் ரொம்பவே அதிகம். சுகபோகங்களை அனுபவிக்கிற சூழல் அமையவும், ஊர் உலகில் மதிப்பும் மரியாதையும் பெருகவும், இல்லற வாழ்க்கை இனிமையாக அமையவும், களத்திரகாரகனாகிய சுக்கிரனின் பலம் அவசியம்!

ஜாதகத்தில் குடும்பம்-தனம் மற்றும் கல்வி ஸ்தானமான 2-ஆம் இடம் நன்கு அமைந்திருந்தால், குடும்ப வண்டி தங்குதடையின்றி ஓடும்; கையில் பணமும், மனதுள் கணவன் அல்லது மனைவியின் பேரன்பும் நிறைந்திருக்கும். ஏழாமிடம் - களத்திர ஸ்தானம். இதில் பாப கிரகங்கள் எதுவுமின்றி, பகை-நீச்சம் பெறாமல், சுக்கிரனும் இடம்பெறாமல் இருந்தால்... சுக்கிர யோகம்தான்!
ஒருவரின் ஜாதகத்தில், தனசப்தமாதிபதி எனப்படும் இரண்டாம் வீட்டோனும், ஏழாமிடத்தோனும் பலமுடன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று அல்லது நட்புடன் அமைந்திருந்தால், மனைவியின் வருகைக்குப் பிறகு மிகப்பெரிய யோகக்காரராக மாறுவர்; திருமண வாழ்வு திருப்பம் தரும். அப்பேர்ப்பட்ட ஜாதகத்தை, களத்திர யோக ஜாதகம் என்பர். பெண்களுக்கு, ஏழாம் வீடு-மாங்கல்ய ஸ்தானம்! இந்த வீடு வலுவுடன் அமைந்திருப்பின், கணவருக்குச் சகல சௌபாக்கியங்களும் வந்துசேரும்;
இப்படி எந்தவொரு அமைப்பும் இல்லாமலும், ஜாதகம் பலம் இழந்த நிலையிலும் இருக்கிறதென்றால், வருத்தமோ கவலையோ வேண்டாம். இல்லறம் இனிக்க, தம்பதி ஒற்றுமை மேலோங்க அருள் தரும் ஒரு தலம் உண்டு. திருவாவடுதுறையில் சுமார் 1,400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஶ்ரீஅதுல்யகுஜாம்பிகை உடனாய ஶ்ரீகோமுக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற பெருமைமிக்க தலம் இது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கல் நந்தி இங்கு உள்ளது. திருமூலர் இங்குதான் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார் எனும் தகவல் உண்டு.
புத்திரப்பேறு வேண்டி இங்கு வந்த முசுகுந்த மன்னனின் வேண்டு கோளுக்கிணங்க, இந்தக் கோயிலில் புத்ர தியாகேசராக அருள்பாலிக் கிறார் இறைவன். இத்திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில், வடமேற்கில், தெற்கு நோக்கிய சந்நிதியில் உலோகத் திருமேனியராய் ஶ்ரீஅணைத்தெழுந்த நாயகர் காட்சியருள்கிறார். அம்பிகையை ஆட்கொண்ட கம்பீர மேனியராய் பெருமானும் நாணம் பொங்கும் முகத்தினளாய் பூரண அழகுடன் அம்பிகையும் காட்சித்தரும் இத்திருக்கோலம் கலையழகின் உச்சம்!
ஒருமுறை சாபத்தின் காரணமாக பசுவாக மாறிய அம்பிகை பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்று வழிபட்டாள். அவ்வாறு இங்கும் வந்து இத்தலத்தின் இறைவன் ஶ்ரீமாசிலாமணீசரை மனமுருகி பணிந்து வணங்கினாள். அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவளைத் தம் திருக்கரங்களால் தொட்டு அணைத்து எழுப்பிட, அன்னை பசு உருவம் நீங்கப் பெற்று பழைய திருவுருவில் மிக்க எழிலுடன் காட்சியளித்தாள்.
அவ்வாறு அணைத்த நிலையிலேயே தம்பதி சமேதராய் ‘அணைத்தெழுந்த நாதர்’ என்ற திருப்பெயருடன் சகலருக்கும் சிவபெருமான் காட்சியளித்தார். மேலும், பசுவுருவம் நீங்கச் செய்தருளியமையால் இத்தலத்துப் பெருமான் ‘கோமுக்தீஸ்வரர்’ எனவும் வழங்கபெற்றார் என்பது தல வரலாறு.
கயிலையில் பிரிந்த சிவபெருமானும், அம்பாளும் பூலோகத்தில் ஒன்றுசேர்ந்த திருத்தலம் இது. ஆகவே, இந்தக் கோயிலில் அணைத்தெழுந்த நாயகர் சந்நிதி முன்பு தீபமேற்றி, அர்ச்சித்து வழிபடும் தம்பதியர் எல்லா நலன்களும் பெற்று இல்லறத்தில் ஒற்றுமையுடன் சிறந்து விளங்குவர் என்பது கண்கூடு. நீதிமன்றக் கூண்டில் நின்ற தம்பதியர்கூட, இங்கு வந்து வழிபட்டதன் பலனாக, விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று வாழ்க்கையில் ஒன்றுசேர்ந்த சம்பவங்கள் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்!
