Published:Updated:

சந்திரனும் சனியும் இணைந்தால்...

சந்திர பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சந்திர பகவான்

சந்திரன் சிறப்புத் தகவல்கள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்!

சந்திரனும் சனியும் இணைந்தால்...

சந்திரன் சிறப்புத் தகவல்கள் மகா மகோபாத்யாய சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்!

Published:Updated:
சந்திர பகவான்
பிரீமியம் ஸ்டோரி
சந்திர பகவான்

மனதின் செயல்பாடுகளுக்குக் காரணமானவர் சந்திரன். அவரே மனோகாரகனாகத் திகழ்கிறார் என்கிறது ஜோதிடம். மட்டுமன்றி, உயிரினங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பவரும் சந்திரனே என்கிறது ஜோதிடம் (மனஸ்துஹினகு...). இங்ஙனம் சந்திரன் குறித்து மேலும்பல அபூர்வத் தகவல்களைத் தருகின்றன ஞானநூல்கள். அவற்றை அறிந்துகொள்வோம்.

சந்திரனும் சனியும் இணைந்தால்...
kdshutterman

ந்திரன், பரம்பொருளின் மனதிலிருந்து வெளி வந்தவர் (சந்திரமா மனஸோஜாத:). பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது. உலகின் மனமான சந்திரன், பருவங்களை உருவாக்கி, உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் என்கிறது வேதம்.

விண்ணில் தேய்ந்தும் வளர்ந்துமாக மாறுபவர், சந்திரன். தேய்ந்தும் வளர்ந்தும் மாறி மாறித் தென்படும் இயல்பு, மனித மனத்திலும் வெளிப்படும். மனதின் செயல்பாடுகளில் சந்திரனுக்குப் பங்கு உண்டு.

செடி- கொடிகளின் மருத்துவக் குணத்தை, சந்திரனின் கிரணங்கள் உருவாக்குகின்றன (ஸோமோவா ஓஷதீனாம் ராஜா...) பௌர்ணமியில், கடல் அலையை அதிகம் எழச் செய்பவர் சந்திரன். வெகு தொலைவில், விண்வெளியில் வலம் வந்தாலும், சந்திரனது தாக்கம் பிரபஞ்சத்தை மட்டுமன்றி, மனிதர்களையும் பாதிக்கும்.

சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தனது தட்பத்துடன் அதாவது குளிர்ச்சியுடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறார் சந்திரன் (ஸலிலமயே சசினி...).

தண்ணீருடன் தென்படுவதால், கடக ராசி யான ஜல ராசி அவன் இருப்பிடம் என்கிறது ஜோதிடம். கடகம் என்றால் நண்டு. அது, ஈரப்பதமான இடத்தில் வாழும். ஆகவே, ஈரமான மனம், கருணையுள்ளம் கொண்டவர் என்பதற்குப் பொருத்தமானவன் சந்திரன்.

அமாவாசையில், சூரியனில் மறைந்த சந்திரன், ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக கிரணத்தைப் பெற்று வளர்ந்து, 15-ம் நாளில் முழு நிலவெனக் காட்சி தருவார். அதனை பௌர்ணமி என்கிறது வேதம்.

பிரதமையில் இருந்து சூரியன், தனது கிரணத்தைத் திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பகுதியாகத் தேய்ந்து தேய்ந்து, சூரியனில் ஒன்றிவிடுவதை அமாவாசை என்பார்கள். ஒவ்வொரு பிறையாக வளர்வதால், வளர்பிறை; ஒவ்வொரு பிறையாகத் தேய்வ தால் தேய்பிறை என்றாகிவிட்டது.

ஒவ்வொரு பிறையிலும் தடங்கலின்றி வளர்வதால், செயல்களும் வளர்ந்தோங்க வேண்டும் என்று, சுபகாரியங்களுக்கு நல்ல தொடக்கத்துக்கு வளர்பிறையை ஏற்றனர். தேய்பிறையை தென் புலத்தார் பணிவிடைக்கு ஒதுக்கினர்.

சந்திர கிரகணத்தில்... கிரகணம் பிடிக்கும் வேளை வளர்பிறையா னதால், தான- தருமங் களைச் செய்யச் சொன்னார்கள். விடும் வேளையில் பிரதமை என்பதால், தேய் பிறையைக் கொண்டு தர்ப்பணம் செய்யப் பரிந்துரைத்தனர்.

ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரச்சூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் விநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறார் என்கிறது புராணம்.

ஶ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்கிறது எனச் சந்திரனைக் குறிப்பிடுவர். சந்திரனுடன் கூடிய சூரியனில், அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி, வேள்வி செய்ய வேண்டிய வேளை என்கிறது வேதம்!

முழு நிலவில் இணைந்த நட்சத்திரங்களை, அதன் பெயரைக் கொண்டே மாதங்களின் பெயர்களாக ஏற்றனர். பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரம் இணைந்து வர... சித்திரை என அந்த மாதத்துக்குப் பெயர் வந்தது. அதேபோல் மற்ற மாதங்களுக்கும் பௌர்ணமியைக் கொண்டே பெயர் வரும். அதாவது, காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவன் சந்திரன். அதனைச் சாந்திர மானம் என்பார்கள். விரதங்களையும் பூஜைகளையும் சாந்திரமானத்தைக் கொண்டே கணக்கிடுவார்கள்.

அமாவாசையில் சூரியனில் ஒடுங்கிவிடுவ தால், பலமிழந்து விடுவார் சந்திரன். ஆகவே அந்த வேளையில், மனநோய்கள் வலுப் பெறும் என்கிறது ஜோதிடம்.

மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை, நோயின் ஏற்றத்தாழ்வு சுட்டிக்காட்டும். சாதாரண நோய்கள்கூட, அமாவாசை நெருங்கும் நாட்களில் வலுப்பெறும்.

உடல், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் இணைப்பும் அதன் தொடர்ச்சியுமே வாழ்க்கை என்கிறது ஆயுர்வேதம். இதில் முக்கியமானது மனம். ஆகவே, வாழ்வில் சந்திரனுக்கு நிரந்தரப் பங்கு இருக்கிறது. நல்ல காரியங்களைச் செயலாற்ற, சந்திர பலம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (சந்திர பலம் ததேவ). சந்திர பலம் இருந்துவிட்டால், மனமானது ஈடுபாட்டுடன் செயலாற்றும்!

சந்திரனும் சனியும் இணைந்தால்...

ஆயிரம் பிறை கண்டவனை, சதாபிஷேகம் செய்வித்து மகிழ்விப்பவர், சந்திரன். மாசி பௌர்ணமியின் இரவில் சந்திர பூஜை நிகழும். அப்போது, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கும் அனைவருக்கும் அளிக்கிற வழக்கம், கிராமங்களில் இன்றைக்கும் உண்டு.

தென்புலத்தார், தேவர்கள், ரிஷிகள் ஆகியோருக்கான பணிவிடைகளில் சந்திரனின் பங்கு இருப்பதால், வாழ்வு சிறக்க அவரருள் வேண்டும். சந்திரன் இணைந் தால்தான், வேள்வியானது நிறைவுபெறும் (ஸோமாயஸ்வாஹா...).

நாம் அணியும் ஆடையில், அவருடைய சாந்நித்தியம் உண்டு. ஸோமஸ் என்றால் சந்திரன்; ஸோமஸ் என்றால் ஆடை என்றும் பொருள் உண்டு (ஸோமஸ்யதனூரஸி...). சதுர்த்தியில் சந்திரனைப் பார்க்க நேர்ந்தால், வீண் பழியேதும் வராமல் தடுக்க, ஆடையில் இருந்து ஒரு நூலை எடுத்து, சந்திரனுக்கு அளிக்கும் சம்பிரதாயம் உண்டு.

சந்திரகாந்தக் கல், சந்திர கிரணம் பட்டு குளிரும்; குளிர்ச்சியான சூழலை உருவாக் கும். ராவணன், குளியல் அறையில் சந்திர காந்தக் கல் உமிழும் நீரில் நீராடுவான் என்கிறது சம்பூர்ண ராமாயணம்.

விண்வெளியில் முதல் ஓடுபாதை, சந்திரனுடையது. ஆகவே, பூமிக்கு அருகில் இருப்பவர் அவர். ராசிச் சக்கரத்தில், சந்திரனுக்கு அடுத்த ராசியில், அதாவது சிம்மத்தில் சூரியனுக்கு இடமளித்திருக்கிறது ஜோதிடம். ஆன்மாவுடன் இணைந்து மனம் செயல் படுவது போல், சூரிய கிரணத்துடன் இணைந்து செயல்படுவார், சந்திரன். ஆகவே, அடுத்தடுத்த வீடு பொருத்த மாக அமைந்துள்ளது.

ஆன்மா ஒன்று; அதேபோல் மனமும் ஒன்று. ஆதலால், 12 வீடுகள் இருந்தும், சூரியன் சந்திரன் இரண்டுபேருக்கும் ஒவ்வொரு வீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகத்தை அதாவது மகிழ்ச்சியை மனம் அறியும். ஆகை யால், ராசி புருஷனில் 4-ஆம் வீட்டில் சந்திர னுக்கு இடமளித்தனர்.

வளர்பிறையில் சந்திரன் நல்லவர்; சுப பலனையே அளிப்பார். தேய்பிறையில் பலம் குன்றியவர்; அசுபர் - விருப்பமில்லாத பலனையே திணிப்பார்!

சந்திரபகவான் குருவுடன் இணைந்து பொருளாதாரத்தைச் செழிப்பாக்குவார். தன்னுடைய கேந்திரங்களில் குரு இருந்தாலும் அதாவது 4, 7, 10-ல் இருந்தாலும் பணத் தட்டுப்பாடின்றி காரியத்தை நிறைவேற்றி வைப்பார் சந்திரன். 5, 9-ல் குரு இருந்தால், ஆன்மிக வாழ்வில் ஆர்வத்தைத் தூண்டுவார்.

சசிமங்கள யோகத்தில், சந்திரனுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர் சனியோடு இணைந்தால் ஒருவனுக்குச் சிந்தனை வளம் குன்றிவிடும். விரும்பியதை அடைவதற்காக, தரம் தாழ்ந்த வழியைக் கூடப் பின்பற்றச் செய்வார் சந்திரன். சனியின் தாமஸ குண சேர்க்கையில்சோம்பல், அறியாமை, மோகம் ஆகியன மேலோங்கி, மனித இயல்பே அகன்றுவிடும்.

புதனுடன் இணைந்தால், சங்கடத்தில் சிக்கியபோதும் அறநெறியில் செயல்பட வைப்பார்; எந்தச் சூழலிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்கும் குணத்தைத் தருவார்!

சூரியனுடன் சந்திரன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும். சூரியன்- ஆன்மா; சந்திரன்- மனம். ஆன்மாவின் இணைப்பில் உலக சுகத்தை மறந்து, தனிமையில் மகிழ்ச்சியை உணரச் செய்வார் சந்திரர்.

ஶ்ரீராமன் என்று சொல்வதைவிட, ஶ்ரீராமச்சந்திரன் எனும்போது, நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு தோன்றும். சூரிய வம்சத்தில் உதித்தவர் ஶ்ரீராமச் சந்திரன். ஆன்மாவுடன் அதாவது சூரியனுடன் சந்திரனாகிய மனமும் இணைந்திருக்க... சந்திரனுடைய மறு பக்கத்தின் இயல்பான ஆன்ம சுகத்தை ஈட்டித் தருகிறது. ஈடு இணையற்ற ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதில், சந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு! சந்திர வம்சத்தில் இருந்து வந்தவர்கள் மகா பாரத நாயகர்கள். மனதின் மாறுபட்ட சிந்தனைகளை அவர்களிடம் காணலாம்.

சந்திரன் ராகுவுடன் இணையும்போது, மனதுள் அசுரக் குணம் தலைதூக்கும். அப்போது, பாபமும் தெரியாது; புண்ணியமும் தெரியாது. மனிதத் தன்மை அகன்று, வாக்குச் சுத்தம் போயே போய்விடும். கேதுவுடன் இணைந்தால், சிந்தனை வளம் குன்றும்; மனம் போன போக்கில் செயல்படச் செய்வார் சந்திரன்!

உச்சம், ஸ்வஷேத்ரம், வளர்பிறை, சுபயோகம், சுபதிருஷ்டி போன்ற அந்தஸ்தில் சந்திரன் வலுப்பெற்றிருந்தால், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியோரின் தாக்கம் இருப்பினும், கடும் புயலிலும் அசையாத மரம் போல் சிறப்புறத் திகழக் காரணமாவார், சந்திரன். நீசம், தேய்பிறை, அசுப சேர்க்கை, அதன் யோகம் ஆகியவற்றைப் பெற்றிருந்தால், சிந்தனை தடுமாறும்; சங்கடங் களையே சந்திக்க நேரிடும்.

உடலில் உறைந்திருக்கிற மனமே அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் அமைதிக்கும் காரணம். சுகாதாரம், ஆன்மிகம், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. மனத்தைத் தெளிவுபடுத்த, மகான்கள் பலரும் பல வழிகளைப் பரிந்துரைத்துள்ளனர். மனமது செம்மையாக சந்திர வழிபாடு அவசியம்.

திங்கள்கிழமை, சந்திரனுக்கு உரிய நாள். அன்றைய தினத்தில், ‘ஸம் ஸோமாயநம:’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களை நடைமுறைப்படுத்துங்கள். கைகள் புஷ்பத்தை அள்ள, மனம் அவரின் பெயரை அசைபோட, அவருடைய திருமேனியில், புஷ்பத்தைச் சமர்ப்பியுங்கள். சந்திரனை மனதார நினைக்க, சந்திரனின் சாந்நித்யம், மனதுள் வந்துவிடும்!

சந்திரனும் சனியும் இணைந்தால்...

வீட்டின் அறைகள்... கருட புராணம் தரும் வழிகாட்டல்!

சொந்த வீட்டில் வாஸ்து அமைப்பு குறித்து கருடபுராணம் சில அறிவுரைகளைச் சொல்கிறது: வீட்டின் வாசலில் சிறு கோயில் அமைதல் வேண்டும். நாம் கிழக்கு முகமாக நின்று பூஜைகளை நடத்தும் விதத்தில் அந்தக் கோயில் அமைந்திருக்க வேண்டும்.

பொருட்கள் வைக்கும் அறை, வீட்டின் வடக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். கிணறு, போர்வெல் போன்ற நீர்நிலைப் பகுதிகள் மேற்குப் பக்கமும், விருந்தினர்கள் தங்கும் இடம் தெற்குப் பக்கமும் அமைதல் வேண்டும். பொதுவாக ஒரு வீட்டில் எட்டுக் கதவுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் கருட புராணம் சொல்கிறது.

-கே.ஆனந்த், சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism