திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

மகான்களின் அவதாரம் நிகழும்... விவசாயம் செழிக்கும்! - 2022 குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023

14.04.2022 முதல் 22.04.2023 வரை

குருபகவான் என்றாலே மனதுக்குள் நம்மை அறியாமலேயே பக்தியுணர்ச்சி மேலோங்கும். குரு எங்கே இருக்கிறார்... அவரைப் பார்க்க முடியுமா, அவரிடம் ஆசீர்வாதம் வாங்க முடியுமா, அவரின் நயன தீட்சை பட்டாலே போதும்... கோடானுகோடி புண்ணியம் வாய்க்கும் என்று மனதுக்குள் வேண்டுதல் வைப்பவர்கள் ஏராளம்!

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023
குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 2022 - 2023

அன்பர்கள் சிலரைப் பார்த்ததுமே எழுந்து நின்று அவரை வணங்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வரும். எதனால்? அவர் நாலும் தெரிந்தவராக இருக்கலாம். `நாலும் தெரிந்தவர் என்றால்' அதன் உண்மையான பொருள்... அவர் நான்கு வேதங்களும் அறிந்தவர் என்பதுதான்.

நான்மறைகள், இதிகாசங்கள், உபநிடதங்கள், தெய்விக அறிவு, உயர்ந்த ஞானம் என அனைத்துக்கும் அதிபதியாக இருப்பவர் குருபகவான்தான். வேத பாடசாலைகள், பள்ளி, பல்கலைக்கழகங்கள் என்று அறிவுக்கண்களைத் திறக்க உதவும் இடங்களில் எல்லாம் குருவருள் இருக்கும். பணம், காசு புரளும் வங்கிகள், கஜானாக்கள், தங்கம் தங்கும் இடங்களிலும் குரு பகவானின் ஆதிக்கம் தங்குதடையில்லாமல் இருக்கும்.

ஆண் கிரகம் இவர். ஆண் வாரிசுகளுக்கும், அரசுப் பதவிகள் முதல் அரசர் நிலையை அடைவதற்கும் ஆதாரமாக இருப்பவர் குருபகவான்தான். ஜாதகத்தில் அனைத்து கிரகங் களும் கெட்டுப்போய் இருந்தாலும் குருபகவான் மட்டும் கெடாமல் இருந்தால், நம் ஒட்டுமொத்த வாழ்வும் உயர்ந்து நிற்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும், தனது 5, 7, 9-ம் பார்வையால் அந்த ஜாதகரை வாழவைப்பார்.

விவேகத்தால் வித்யா பீடங்களை எல்லாம் அலங்கரிப்பவர் குரு பகவான். நம் உடலில் தசைகள் மற்றும் நல்ல கொழுப்புக்கு அதிபதி குருபகவான். மேடையில் ஒருவர் கோடை இடி போன்று முழங்குகிறார் என்றால், அவருக்கு அந்தச் சிம்மக் குரலை வழங்குபவர் குருபகவான்தான். `குரு பார்த்தால் கோடி தோஷம் விலகும்', `குரு இல்லா வித்தை குருட்டு வித்தை' என்பதெல்லாம் அவரின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும் பழமொழிகள்.

குரு லக்னத்தில் நின்றாலோ, பார்த்தாலோ, சந்திரனைப் பார்த்தாலோ நம் முகம் தெய்வகடாட்சத்துடன் பிரகாசிக்கும். உலகமே போற்றி வணங்கும் குருபகவான் பிலவ வருடம் பங்குனி மாதம் 30-ம் தேதி, புதன்கிழமை - விடிந்தால் வியாழன் (14.4.22) அதிகாலை 4:08 மணிக்கு, தன் சொந்த வீடான மீனத்துக்குள் அமர்ந்து 22.4.23 வரை ஆட்சி செய்ய இருக்கிறார்.

நான்கரை வருடங்களுக்குப் பிறகு முழு பலத்துடன் குருபகவான் அமர்வதால், மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாகும்; வேலை வாய்ப்பு பெருகும். பதற்றமாக இருந்த வர்கள் இனி நிம்மதியாக இருப்பார்கள். மகப்பேறுக்காக காத்திருந்த அன்பர்களுக்குக் குருபகவானின் ஆசீர்வாதத் தால் இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வாகன உற்பத்தி அதிகரிக்கும். மூடிக் கிடக்கும் தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பிக்கும். விவசாயிகளை வாழவைக்கும்படி மழைப் பொழிவு இருக்கும். மகசூல் பெருகும். வங்கிகளில் புது சட்டதிட்டம் வரும். கடல் வளம் பாதுகாக்கப்படும். கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மீன் மற்றும் பவளப்பாறைகள் அதிகமாகும்.

இந்திய ராணுவத்தில் கப்பற்படை மேலும் வலுப் படுத்தப்படும். நாடெங்கும் நதிகள் இணைக்கப் பட்டு நீர்வளம், நிலவளம் பெருகும். ஆசிரியர்கள், வேத வல்லுநர்கள் பெரிய பதவியில் அமர்வர்; உயரிய விருதுகளும் பெறுவர். தங்கம் விலை உயரும். புகழ்பெற்ற துறவி ஒருவர் ஜீவசமாதி அடைவார். மகான்கள் அவதரிப்பார்கள்.

காலபுருஷ தத்துவப்படி குரு மீனத்தில் அமர்வதால் நவீன மருத்துவமனைகள் உருவாகும். சிறைகளில் உள்ள கைதிகளின் திறமைகளைக் கண்டறிந்து, அதில் அவர்களை ஊக்குவிக்கும்படி சட்டம் வரும்.

குருபகவான் கடக ராசியைப் பார்ப்பதால் சினிமா, கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர் கள் ஆதாயம் அடைவர்.

குரு கன்னி ராசியைப் பார்ப்பதால் புதுப்பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும். உடற்கல்வி, நீதிபோதனை கல்வி மீண்டும் பயிற்றுவிக்கப்படும். விளையாட்டுத் துறையில் குறிப்பாக துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் கிரிக்கெட்டில் இந்தியா சாதிக்கும்.

குருபகவான் விருச்சிக ராசியைப் பார்ப்பதால் ராணுவ மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்கப்படும். நம் நாட்டிலேயே அனைத்தும் தயாராகும். உள்நாட்டு உற்பத்தி பெருகும். உணவு மற்றும் ஆயுத ஏற்றுமதி அதிகரிக்கும். காடு மற்றும் வனவாழ் உயிரினங்களைப் பாதுகாக்கப் புது சட்டங்கள் வரும். வருமானவரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சியில் நம் தேசத்தில் மக்களிடையே மகிழ்ச்சி, வருமானம், பக்தி, நிம்மதி, தூக்கம் ஆகிய அனைத்தும் பெருகும்படியாக இந்த மீன குரு பகவானின் ஆட்சி இருக்கும்!