சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் காய் நகர்த்தி காரியத்தைக் கச்சிதமாக முடிப்பவர்களே... இதுவரை, உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்ந்து நல்லதையும், கெட்டதையும் கலந்து கொடுத்த குருபகவான் 14.04.2022 முதல் 22.04.2023 வரை 2-ம் வீட்டில் அமர்கிறார்.

அடிமனதில் இருந்த போராட்டம் விலகும். அலட்சியப் போக்கு மாறும். குடும்பத்தில் உங்களை ஒரு பொருட்டாக மதிக்காத நிலை இருந்ததே, அது மாறும். சந்தேகத்தால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள்.
செலவுகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் விழிபிதுங்கி நின்றீர்களே, இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை கால் வலி நீங்கும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தேவையில்லாமல் பேசி சில நல்ல நட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்...
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் தன, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதரர் உதவுவார். இங்கிதமாகப் பேசி பழையப் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் உண்டு. உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவைச் சரிப்பார்த்துக்கொள்வது நல்லது. நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள்.
8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால் திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமொழியினர், மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் சேமிப்புகள் கரையும். பழைய உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள்.
வியாபாரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறும். கடையை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றுவீர்கள். விளம்பரம், சலுகைகள் மூலம் பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைப்பீர்கள். வராமலிருந்த பாக்கிகள் எளிதாக வசூலாகும். அனுபவம் வாய்ந்த வேலையாட்கள் வந்துசேருவார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். மருந்து, கமிஷன், மர வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், இதுவரை இருந்து வந்த போராட்டம் நீங்கும். மேலதிகாரி உங்களைக் குறை கூறுவதைக் கைவிடுவார்; உங்களுக்கு ஆதரவாக மாறுவார். உங்களின் சம்பளம் உயரும். சகஊழியர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் கூடும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதுடன், புதிய முயற்சிகளில் வெற்றி தருவதாக அமையும்.