பிரச்சனையிலிருந்து பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும் நீங்கள், சமூக அவலங்களைத் தட்டிக்கேட்பவர். இதுவரை உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், கௌரவத்தையும், அதேநேரத்தில் அலைக்கழிப்பையும் தந்த குருபகவான், 14.04.22 முதல் 22.4.23 வரை, ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார்.

ஆகவே, எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். ஒவ்வொரு பணியையும் இரண்டு மூன்று முறை முயன்று போராடி முடிக்கவேண்டி வரும். வாயுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் வகையில் பிணக்குகள் வரலாம்.
வீண் கெளரவத்துக்காக சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அவசியம்; பயணத்திலும் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.
கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும், பார்க்காதபோது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்...
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் சேவக, விரயாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்கள் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் துரத்தும். வயிற்றுவலி, முதுகுவலி வந்து நீங்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததைத் தந்து முடிப்பீர்கள். வீரியத்தை விட காரியம்தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். சங்கம், இயக்கம் ஆகியவற்றில் சேர்ந்து பொது சேவைகள் செய்ய தொடங்குவீர்கள்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்களின் ரோக, பாக்கியாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், தந்தையுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். பிதுர் ராஜ்ஜிய சொத்துக்கள் வந்து சேரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். என்றாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாதீர்கள். சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் முரட்டுத்தனம் வேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுக்கத்தான் செய்வார்கள். மருந்து, ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில் கோபதாபங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் ஒப்படைப்பார். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை மட்டம்தட்டிப் பேசுவார்கள். திடீர் இடமாற்றமும் உண்டு. சில நேரங்களில் உங்களின் அடிப்படை உரிமைக்காகக்கூட போராட வேண்டி வரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேலைச்சுமை குறையும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி தைரியமாக முடிவெடுக்கும் சக்தியைத் தருவதுடன் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்