மேல்தட்டு மக்களைவிட குடிசையில் வாழ்பவர்களுக்காக அதிகம் யோசிப்பவர் நீங்கள். இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகள், ஏமாற்றங்கள், தூக்கமின்மையைத் தந்துக் கொண்டிருந்தார் குருபகவான். இனி 14.4.22 முதல் 22.4.23 வரை, உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக பலன் தரப் போகிறார். பொறுப்புகளும், வேலைச்சுமையும், தேடலும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்க்கும் சூழல் வரலாம்.

எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம். ஒருவேளை வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் தலைதூக்கும். எவரோ எப்போதோ உங்களைப் பற்றிப் பேசியதை நினைத்துப் புலம்புவீர்கள். சிலருக்கு ரத்த அழுத்தம் பாதிப்புக்குள்ளாகலாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தலைச் சுற்றல், உறக்கமின்மை ஏற்படலாம். அதற்காக வீண் பயம் தேவையில்லை. இயல்பு மற்றும் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தினால் போதும்; சகலமும் உங்களுக்குச் சாதகமாகும்; தெய்வ வழிபாடும் துணை நிற்கும்.
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். `தோற்றுவிடுவோமோ’ என்ற அவநம்பிக்கை அவ்வப்போது தலைதூக்கும்; தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியம். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
உறவுகளும் நட்புகளும் உங்களிடம் நடிப்பதாக எண்ணத் தோன்றும். உங்களின் தன்மானத்தைப் பாதிக்குமளவுக்குச் சில சொந்தபந்தங்கள் நடந்து கொள்வார்கள்; பேசுவார்கள். அவர்களின் நடவடிக்கைகளைப் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். எப்போதும் உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்...
14.4.22 முதல் 29.4.22 வரை உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான், தனது பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். வேலை கிடைக்கும். பணம் வரும். வயிற்று வலி, சைனஸ் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பதவி வரும். சம்பளம் உயரும். வி.ஐ.பிகள் நண்பராவார்கள்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் லாப, விரயாதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வீட்டு லோன் கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும். நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வீடு, வாகன வசதிகள் பெருகும்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்கள் சுக, சப்தமாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள், உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால், தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. மனைவியுடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உடல் நிலை பாதிக்கும். சிறு சிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்து நீங்கும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களை எதிர்கொள்வதாக எண்ணிக்கொண்டு, பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். வேலையாள்களை அவர்கள் போக்கிலே விட்டுப்பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களை மனம் கோணமல் நடத்துங்கள். புதுத் துறையில் கால் பதிக்க வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்தப் பாருங்கள். உணவு, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது பிரச்னை செய்தாலும் இறுதியில் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள்.

உத்தியோகத்தில் சவாலான காரியங்களை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். உயரதிகாரி உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பளம் உயரும். சலுகைகளும் உண்டு. சக ஊழியர்கள் உங்களைப் பற்றி குறை கூறவே செய்வர். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அலுவலக சூழ்நிலை சுமுகமாக இருக்கும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்வில் சில நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.