Published:Updated:

`மதிப்பு உயரும்' - ரிஷப ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22!

ரிஷப ராசியைச் சேர்ந்த வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் கலைஞர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 -ம் தேதி குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதுவரை ரிஷப ராசிக்கு 9 ம் இடத்தில் இருந்து நல்ல பலன்களைத் தந்துவந்த குருபகவான் 10 ம் இடத்துக்குப் பெயர்வது ரிஷப ராசி வியாபாரிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் கலைஞர்களுக்கு எந்த மாதிரியான பலன்களைக் கொடுக்கும் என்பதை அறிந்துக் கொள்வோம்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. சந்தையில் தற்போதைய தேவை அறிந்து கொள்முதல் செய்ய வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொண்டு கொள்முதல் செய்வீர்கள். ஆளாளுக்கு வந்து உங்களுக்கு ஆலோசனை சொன்னபடி இருப்பார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்டாலும் முடிவெடுக்கும் போது உங்கள் சொந்த முடிவையே மேற்கொள்ளுங்கள். பணியாளர்களிடம் கடுமை காட்ட வேண்டாம். அவர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். நிலுவையில் இருந்த பாக்கித் தொகைகள் வசூலாகும். அதைக் கொண்டு கடையை மேம்படுத்துவீர்கள். வேதிப்பொருள்கள் விற்பனை, தரகு, மின்னணு சாதனங்கள் மற்றும் துணிவகைகள் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலம் இது. பங்குதாரர்கள் உங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு வளைந்துகொடுத்துச் செல்வார்கள். புதிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதோடு எதிர்பாராத லாபமும் வந்து சேரும் காலம் இது.

உத்தியோகஸ்தர்களுக்கு: வழக்கத்தைவிட அதிகமான பணிச்சுமை இருக்க தான் செய்யும். சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். தேவையில்லாமல் அலுவலகத்துக்கு விடுப்பு எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். யார் குறித்தும் யாரிடமும் புகார் சொல்ல வேண்டாம். குறிப்பாக மேலதிகாரிகளின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியே பேச வேண்டாம். இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் உங்கள் மீதான மதிப்பு பணியிடத்தில் உயரத்தான் செய்யும். உங்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்களைப் பொறுத்த அளவில் இந்த குருப்பெயர்ச்சி முன்னேற்றத்தையே தரும். விமர்சனங்களைத் தாண்டி சாதிப்பீர்கள். புதிய படைப்புகளைப் போராடி வெளியிடுவீர்கள். அதன் மூலம் புகழ் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி வாழ்வில் தன் சொந்த அனுபவங்களைப் பயன்படுத்தி ஒருவர் எப்படி முன்னேற முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதாக அமையும்.

பரிகாரம்: தென்குடித்திட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சணாமூர்த்தியைச் சென்று வழிபடுங்கள். ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு உதவுங்கள். அவர்களின் கல்விக்குச் செய்யும் தானம் உங்கள் துன்பங்களைத் தூளாக்கிவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு