Published:Updated:

சிம்மம் ராசிக்காரர்களுக்குரிய குருப்பெயர்ச்சி பலன்கள்! #Video

சிம்மம்
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலத்தின் கதவு திறக்கக்கூடிய அளவில், இந்தக் குருப்பெயர்ச்சி அமையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாக நட்சத்திரம், தட்சணாயனப் புண்ணிய காலத்தில், அதிகாலை 3.40 மணிக்கு, திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் பூரண சுபகிரகமான குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிக ராசியிலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசியில் அமர்கிறார்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விரிவாகக் கூறுகிறார்.

கிரகங்கள்
கிரகங்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலத்தின் கதவு திறக்கக்கூடிய அளவில், இந்த குருப்பெயர்ச்சி அமையும். குரு பகவான் தன் சொந்த வீடான தனுசிலிருந்து ஒன்பதாம் பார்வையாக சிம்ம ராசியைப் பார்க்கிறார்.

கடந்த 3 ஆண்டுகளாக சிம்ம ராசிக்காரர்கள், அத்தனை சிறப்பாக இல்லை. குறிப்பாக, அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம். ஆனால், பதவி உயர்வு இல்லை என்கிற நிலையே நீடித்து வந்தது. அந்தக் குறைகள் அனைத்தையும் நீக்கும்விதமாக இந்தக் குருப்பெயர்ச்சி இருக்கும்.

கோட்சார ரீதியாக எப்போதோ ஒரு முறைதான் மிக நல்ல பலன்கள், ஒரு ராசிக்குக் கிடைக்கும். அந்தவிதத்தில் அப்படிப்பட்ட பலன்கள் இப்போது உங்களுக்குக் கிடைக்கும். இன்னும் சில வாரங்களில் சனி பகவான் ஐந்தாம் இடத்திலிருந்து ஆறாம் இடத்துக்குச் செல்கிறார். இதுவரை இருந்த கடன்தொல்லைகள் யாவும் முற்றிலும் விலகிவிடும்.

தற்போது 4-ம் இடத்திலிருக்கும் குரு பகவான் 5-ம் இடத்துக்கும், 5-ம் இடத்திலிருக்கும் சனி 6-ம் இடத்துக்கும், செல்கிறார்கள் 5-ல் குரு, 6-ல் சனி ஓர் அற்புதமான அமைப்பாகும்.

சிம்மம்
சிம்மம்

இந்த அமைப்பு இன்னும் 13 மாதங்களுக்கு நீடிக்க இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு பெரிய அளவில் வருமானம் சேர்ந்து எந்த பிரச்னையும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.

எதிர்காலத்துக்குத் தேவையான அத்தனை வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரக்கூடிய அஸ்திவாரமாக இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு அமைந்துவிடும்.

பிறந்த ஜாதகப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல தசா புத்திகள் இப்போது நடக்குமென்றால் அவர்களின் புகழ், வருமானம், கௌரவம் என்கிற உச்சநிலைக்குச் செல்லும். அதனால் இந்த 13 மாதங்களை நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தக் குருபெயர்ச்சியின் காரணமாகத் தொட்டது துலங்கும். நினைத்தது நிறைவேறும். மனதுக்குப் பிடித்த விஷயங்கள் எல்லாம் இப்போது உங்களின் வாழ்வில் நடக்கத் தொடங்கும்.

இதுவரைக்கும் உங்களுக்கு என்ன கிடைக்கவில்லையோ, அது இப்போது கிடைக்கும். ஒரு சில இடங்களில் நீங்கள் கேட்டு கிடைக்காமல் போனவை, இப்போது கேட்காமலேயே உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. சிம்மத்தின் கர்ஜனை காடு முழுவதும் ஒலிக்கின்ற அமைப்பாக இந்தக் குருப்பெயர்ச்சி இருக்கும்.

மூன்று, நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த சிம்ம ராசிக்காரர்கள் உயிர்கொண்டெழுந்து பரபரப்பாக இயங்கி, பல திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள்.

அவரவருடைய வயது, தகுதி இவற்றுக்கேற்றாற்போல மிக நல்ல பலன்கள் இப்போது நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மனதுக்குப் பிடித்தவரையே பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

பொதுவாகவே சிம்ம ராசிக்காரர்கள் 'எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும்' என்று நினைப்பார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன் முழுமையாக வெளிப்பட்டு முதன்மையானவர்களாகத் திகழ்வார்கள்.

இளைஞர்கள் எதிர்காலத்தில் தான் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டமாகும். அந்தத் தீர்மானத்தில் வெற்றிபெறக்கூடிய அமைப்பையும் பெறுவார்கள்.

வாழ்க்கையில் யாருடன் நீங்கள் இணையப்போகிறீர்கள், யார் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள், யார் உங்கள் வெற்றிக்குப் பின்புலமாக இருந்து செயல்படுவார்கள், உங்களுக்கு குருவாக இருந்து வழிநடத்துபவர் யார்? என்பவையெல்லாம் இந்தக் குருப்பெயர்ச்சியின் வாயிலாக மிகச் சிறப்பாகவே அமையவிருக்கிறது.

உங்களின் ஜாதகத்துக்குப் பஞ்சம ஸ்தானமான பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்துக்கு குரு பகவான் வரப்போகிறார். இவர் ஆயுள் முழுவதுக்கும் உள்ள அற்புதமான ஒரு வாழ்க்கை அமைப்பை ஏற்படுத்தித் தருவார். புகழ், அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றை இப்போது வழங்குவார்.

வீடு, அலுவலகம், உங்கள் ஏரியா அல்லது உங்கள் ஊர் ஆகியவற்றில் நீங்கள் முதல்வராக இருந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய நிலையில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களை அமர வைக்கும்.

சிவன் கோயில்
சிவன் கோயில்

அடுத்து வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சிகள் அத்தனை சிறப்பாக இல்லாமலிருப்பதால் இப்போதே சில நல்ல விஷயங்களை நீங்கள் செய்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.

பரிகாரம்

நீங்கள் வசிக்கும் ஊரின் அருகிலிருக்கும் சிவன் கோயிலிலுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது மிக நல்ல பலன்களை நிச்சயம் உங்களுக்குத் தரும்.

இது தவிர, நீங்கள் மதிக்கக்கூடிய குருவை சந்தித்து வியாழக்கிழமையில் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைப் பரிசளித்து மகிழ்வது போன்றவற்றைச் செய்தால், பெரிய அளவில் உங்களுக்கு நற்பலன்கள் நடக்கும்.

பின் செல்ல