Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

குருப்பெயர்ச்சி துலாம்

அடிக்கடிக் கோபப்பட்டுப் பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கினீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

அடிக்கடிக் கோபப்பட்டுப் பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கினீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

குருப்பெயர்ச்சி துலாம்

பொது :கள்ளம் கபடமில்லாதப்பேச்சால் கலங்கி நிற்கும் மனிதர்களை கலகலப்பாக்கும் துலாம் ராசி அன்பர்களே! எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் செயல்படுபவர்கள் நீங்கள்தான். பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் பரந்த மனசுடன் பழகும் நீங்கள், எப்போதும் எளிமையையே விரும்புபவர்கள். அப்படிப்பட்ட உங்கள் ராசிக்கு இதுவரை எதிரி வீடான ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்க வைத்து பஞ்சாய் பறக்கடித்த குரு பகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.

இனி குழம்பியிருந்த மனதில் தெளிவு பிறக்கும். நினைத்தபடி எந்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியவில்லையே என புலம்பித் தவித்தீர்களே! இதனாலேயே புது முயற்சிகளில் ஈடுபடவே அஞ்சினீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும்.

குருபகவான்
குருபகவான்

குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை ஒரு பொருட்டாக மதிக்காததால் அலைக்கழிக்கப்பட்டீர்களே... இப்போது குரு உங்கள் ராசியை நேருக்குநேர் பார்ப்பதால் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள். குடும்பத்தில் வீண் குழப்பங்கள் நீங்கும். வடதுருவம் தென்துருவமாக இருந்து வந்த கணவன் - மனைவிக்குள் இனி ஒற்றுமை பலப்படும். அந்நியோன்யம் அதிகரிக்கும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிந்ததே! இனி இங்கிதமாகப் பேசுவீர்கள். வழக்கால் அலைக்கழிக்கப்பட்டீர்களே... நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்டதை நம்மால் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று மனசுக்குள்ளேயே புழுங்கித்தவித்தீர்களே... இனி அவர்களின் ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்யுமளவிற்குப் பணவரவு அதிகரிக்கும். அவர்களால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைக்கும். பேசிமுடித்து பாதியிலேயே நின்று போன திருமணம் இனி நல்ல விதத்தில் முடியும். வெகுநாள்களாக வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததே, இனி வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் பதவி பட்டம் பெறுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். இளைய சகோதர, சகோதரி சாதகமாக நடந்துக்கொள்வார். பாகப்பிரிவினை மற்றும் சொத்துப் பிரச்சனைகளில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். புதிய சொத்தும் வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களை இகழ்ந்து பேசியவர்களெல்லாம் இனிப் புகழ்ந்து பேசுவார்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும்.

குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் எதிலும் நிம்மதி பிறக்கும். கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பழகிக் கொண்டே உங்களைப் பாழ்படுத்த முயல்பவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மூத்த சகோதரர் பாசமாக இருப்பார். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். அடிக்கடிக் கோபப்பட்டுப் பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கினீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள்
துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் இந்தக் காலக்கட்டங்களில் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்து பலன் தர இருப்பதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். அண்டை மாநிலக் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்குத் திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நாள்களில் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். அவ்வப்போது தலைசுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்து செல்லும். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

வியாபாரம் : கடுமையான போட்டிகளும், சூழ்ச்சிகளும் நிலவியதே! சிலரின் தவறான வழிகாட்டுதலால் கடன் வாங்கி முதலீடு செய்தும் லாபம் பார்க்க முடியாமல் திண்டாடினீர்களே! உங்களுக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் உங்களைவிட அதிகம் சம்பாதித்தார்களே! அந்த நிலையாவும் மாறும். அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலையாட்கள், தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்த உங்களையே பதம் பார்த்தார்களே! சில நேரங்களில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப் போனார்களே! இனி அந்த நிலை மாறும். அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.

கடையைக் கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். படித்த அனுபவமுள்ள வேலையாட்களைக் கூடுதலாக நியமிப்பீர்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வந்துசேரும்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்

வேலை : ஓடி ஒடி உழைத்தும் கெட்டப் பெயர்தானே மிஞ்சியது, இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை எடுத்தெரிந்து பேசினார்களே! இனி நட்புக் கரம் நீட்டுவார்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினி துறையினர்கள் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முணகிக் கொண்டிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சை அருகே உள்ள தலம் தென்குடிதிட்டை. வியாழக் கிழமைகளில் இந்தத் தலத்துக்குச் சென்று, வசிஷ்டேஸ்வரரை வழிபடுவதுடன் குருபகவானுக்குத் தயிரன்னம் சமர்ப்பித்து வணங்கி வாருங்கள்; சகல யோக வாய்ப்புகளும் கைகூடும்.