Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: விருச்சிக ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

குருப்பெயர்ச்சி விருச்சிகம்

'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி எதிலும் சின்னச்சின்னத் தடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் குருவின் பார்வை நற்பலன்களை வழங்கும்.

Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: விருச்சிக ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி எதிலும் சின்னச்சின்னத் தடைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் குருவின் பார்வை நற்பலன்களை வழங்கும்.

குருப்பெயர்ச்சி விருச்சிகம்
பொது : கலகலப்பாக பேசிப் பழகினாலும் காரியத்தில் கறாராக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே... கலை இலக்கியங்களை வெகுவாக ரசிப்பீர்கள். அனுசரித்து போகும் குணம் கொண்ட நீங்கள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் படி எதையாவது சாதிப்பவர்கள்.

கொடுத்துச் சிவந்த கைகளை உடைய நீங்கள், நெஞ்சில்படுவதை முகத்துக் நேராகப் பேசுவீர்கள். இப்படிப்பட்ட உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் பணப்புழக்கத்தையும், ஓரளவு வசதி வாய்ப்புகளையும் தந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை 6-ம் வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.

குருபகவான்
குருபகவான்

'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி எதிலும் சின்னச்சின்னத் தடைகள் இருக்கத்தான் செய்யும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகம் போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் அடிக்கடிக் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்துபோகும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் கையிருப்புகள் கரையும். ஒரு கடனை அடைக்க மற்றொரு இடத்தில் கடன் வாங்க வேண்டியது வரும். வெளிமாநிலப் புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தை செலவு செய்து தக்க வைத்துக் கொள்வீர்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் பேச்சில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கி ஒரு நிதானம் பிறக்கும். சில நேரங்களில் கோபப்பட்டுப் பேசிவிட்டுப் பல நேரங்களில் இப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது என வருந்தினீர்களே இனி பக்குவத்துடன் பேசுவீர்கள். வெகுநாள்களாகியும் வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி தங்கும். என்றாலும் அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே வந்து நீங்கும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப்பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் உடனே முடியும்.

குருபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் சுபச்செலவுகளால் கையிருப்பு கரையும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன மகளின் கல்யாணத்தைப் பிரபலங்களின் முன்னிலையில் நடத்துவீர்கள். பாதியிலேயே நின்று போன கட்டட வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையால் அடிக்கடி நீதிமன்றம் செல்லவேண்டி வந்ததே... இனிப் படிப்படியாக வழக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் என ஒருபக்கம் தொந்தரவு கொடுத்தாலும், மற்றொரு பக்கம் புது வாகனம் வாங்கும் யோகமுண்டு. சிலர் வாடகை வீட்டிலிருந்து, புதிதாக கட்டிமுடித்த வீட்டுக்குக் குடிபுகுவார்கள். என்றாலும் புது சொத்துக்கள் வாங்கும்போது பத்திரங்களை வழக்கறிஞர்கள் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது. உறவினர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. குலதெய்வத்திற்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செய்யாமலிருந்தீர்களே, இனி குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

குருப்பெயர்ச்சி விருச்சிகம்
குருப்பெயர்ச்சி விருச்சிகம்

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். ஊர்த் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலக்கட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். அவசரத்திற்குக் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்து பலன் கொடுக்க இருப்பதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.

விருச்சிகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
விருச்சிகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சரிக்க இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வாழ்க்கைத்துணைக்குப் புது வேலை கிடைக்கும். அவரின் ஆதரவு பெருகும். அவர்வழி சொத்துகளும் கைக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

வியாபாரம் : போட்டியாளர்களை சமாளிக்க அதிகம் போராட வேண்டியது வரும். எந்த ஓர் அதிரடி மாற்றமும் இப்போது வேண்டாம். வேலையாட்களை நீங்கள் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாக நடத்துபவர்கள்தான். ஆனால் அதுவே சில நேரங்களில் தர்ம சங்கடமாகும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் அன்பான பேச்சால் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வராது என்றிருந்த கடனெல்லாம் வசூலாகும். அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, பெட்ரோகெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போகவேண்டியது இருக்கும்.

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் தட்சிணாமூர்த்தி
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் தட்சிணாமூர்த்தி

வேலை : வேலைச்சுமை வாட்டியெடுக்கத்தான் செய்யும். முக்கிய ஆவணங்களைக் கையாளும்போது நிதானம் தேவை. அலுவலகம் பற்றியோ, அதிகாரிகள் பற்றியோ வெளியில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டி வரும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். கணினித் துறையினருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேறு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த குருபெயர்ச்சி புதிய முயற்சிகளைப் போராடி முடிக்கச் செய்வதாகவும், அன்றாட வாழ்வில் சில படிப்பினைகளையும், நாசூக்காக நடந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அரக்கோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் உள்ளது தக்கோலம். இந்தத் தலத்துக்குச் சென்று ஶ்ரீஜலநாதீஸ்வரரையும், ஶ்ரீகிரிராஜ கன்னிகாம்பாளையும், உத்குடி ஆசனத்தில் அருளும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்; சுபிட்சங்கள் கூடும்