Published:Updated:

`வியாபாரம் சிறக்கும்'- மேஷ ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷ ராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

இந்த ஆண்டு (2021) நவம்பர் 13 ம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் பெயர்ச்சியில் இதுவரை நீசமடைந்து மகரத்தில் இருந்த குருபகவான் ஸ்திர ராசியான கும்பத்துக்குப் பெயர்ச்சியாகிறார். இதுவரை மேஷ ராசிக்குப் பத்தாம் இடத்தில் இருந்து நற்பலன்களைத் தடுத்துவந்த குருபகவான் இப்போது 11 ம் இடம் எனப்படும் லாபஸ்தானத்தில் அடி எடுத்துவைக்கிறார். இது மேஷ ராசியைச் சார்ந்த வியாபாரிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் கலைஞர்களுக்கும் என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

வியாபாரிகள்: வியாபாரத்தில் புதிய வேகம் பிறக்கும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இதுவரை இடஞ்சல் கொடுத்துவந்த பணியாளர்கள் இனி உங்கள் விருப்பம்போல் நல்லவிதமாகப் பணியாற்றுவார்கள். லாபம் தரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் தங்களின் மோதல்போக்கை மாற்றிக்கொண்டு உங்களோடு நன்கு இணைந்து செயல்படுவார். இந்த குருபெயர்ச்சி மேஷ ராசி வியாபாரிகளுக்கு மிகவும் லாபகரமானதாக அமையும்.

உத்தியோகஸ்தர்கள்: எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களே, இந்த குருப்பெயர்ச்சி உங்கள் உழைப்புக்கான மரியாதையைத் தர இருக்கிறது. இதுவரை நீங்கள் எது செய்தாலும் அதைக் குறை கூறிக்கொண்டிருந்த மேலதிகாரி இப்போது அடங்கிப்போவார். அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். தடைப்பட்டிருந்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். பதவி உயர்வும் தேடிவரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். பணிச்சுமையை சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். புதிய பொறுப்புகள் தேடிவரும். தயங்காமல் ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுங்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். நல்ல சம்பளத்தோடு வேலை கிடைக்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

கலைஞர்களுக்கு இது பொன்னான காலம். புதிய வாய்ப்புகள் உங்கள் வாசலைத் தட்டும். பழைய பொலிவைப் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இதுவரை தடுமாற்றதோடு இருந்த உங்களைத் தாங்கிப் பிடித்து வெற்றிப்பாதையில் நடத்தும்.

பரிகாரம்: தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வாழ்வில் ஆதரவில்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். குருவின் அருள் உங்களோடு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு