லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்
News
குருப்பெயர்ச்சி பலன்கள்

15.11.2020 முதல் 13.11.2021 வரை

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 15.11.2020 அன்று இரவு 9 மணி 34 நிமிடத்தில் மிதுனம் லக்னத்தில் (நாவம்ச சக்கரத்தில் கும்பம் லக்னத்தில்) பிரகஸ்பதி என்னும் குரு பகவான் தன் சொந்த வீட்டிலிருந்து (தனுசு) சர வீடாகிய சனி பகவானின் வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.

மேஷம் - 60%

குருப்பெயர்ச்சி பலன்கள்

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அதிகமுள்ளவர்களே! குரு பகவான் 15.11.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். `10-ம் இடம் பதவியைக் கெடுக்குமே, அந்தஸ்தைக் குறைக்குமே' என்றெல்லாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக்கூடும். முக்கிய விஷயங்களுக்கெல்லாம் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவருடன் வாக்குவாதங்கள் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத்துக்காக அலைய வேண்டியிருக்கும். பணவரவு குறையாது. வருமானம் உயரும். வியாபாரத்தில் பெரிதாக முதலீடு செய்ய வேண்டாம். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத நெருக்கடிகள் இருக்கும். அனைவரையும் அனுசரித்துப்போவது நல்லது. சகிப்புத்தன்மையுடனும் நாவடக்கத்துடனும் செயல்பட்டால் இந்த குரு மாற்றம், ஓரளவு நன்மையைத் தருவதாகவே அமையும். பரிகாரம்: முருகரை வணங்குங்கள்.

ரிஷபம் - 65%

குருப்பெயர்ச்சி பலன்கள்

யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் ஈர்ப்பவர்களே! 15.11.2020 முதல் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் நுழைக்கிறார். உங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களும் யோகங்களும் அடுத்தடுத்து நடக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வசதி, வாய்ப்புகள் கூடும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார். பிள்ளைகளிடம் இருந்துவந்த பிடிவாதப்போக்கு நீங்கும். உறவினர்களின் உதாசீனப்போக்கு மாறும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த நிலை மாறும். அதிரடி லாபம் கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகள் உதவுவார்கள். அதிக சம்பளத்துடன் நல்ல வேலையும் கிடைக்கும். பலவிதப் பிரச்னைகளால் வதங்கிப்போயிருந்த உங்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்குவதாக இருக்கும் இந்த குரு மாற்றம். பரிகாரம்: குரு பகவானை வணங்குங்கள்.

மிதுனம் - 80%

குருப்பெயர்ச்சி பலன்கள்

வாய்மையே வெல்லும் என்பதை உணர்ந்தவர்களே! குரு பகவான் 15.11.2020 அன்று உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். `8-ல் குரு வந்தால் எல்லாம் தள்ளிப்போகுமே' என்று கவலைப்பட வேண்டாம். அவர் முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தவிர்க்க முடியாத பயணங்கள் அமையும். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். உறவினர் வகையில் அலைச்சல், செலவுகள் வரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். யதார்த்த மாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வியாபாரத்தில் முன்னர் ஏற்பட்ட தவறுகளை இப்போது சரிசெய்வீர்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி விற்பனை மூலமாகவும் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இந்த குரு மாற்றம் வேலைச்சுமையைத் தந்தாலும் வெற்றியையும் உற்சாகத்தையும் அள்ளித்தருவதாக அமையும். பரிகாரம்: குரு பகவானை வணங்குங்கள்.

கடகம் - 70% 

குருப்பெயர்ச்சி பலன்கள்

கற்பனை வானில் பறப்பவர்களே! 15.11.2020 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டுக்குள் வந்தமர்கிறார். கவலை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி ரேகைகள் மலரத் தொடங்கும். சின்னச் சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்கி அதனால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களை எதிர்த்துக்கொண்டிருந்த உறவினர்களெல்லாம் அடங்குவார்கள். வருமானம் உயரும். வசதிகள் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். தன்னிச்சையாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவரும் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் சகோதர வகையில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்னைகளெல்லாம் விலகும். இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்கவைப்பதுடன் பணவரவையும் தருவதாக அமையும். பரிகாரம்: முருகரை வணங்குங்கள்.

சிம்மம் - 68%

குருப்பெயர்ச்சி பலன்கள்

தலைமைப் பண்பு அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிலிருந்த குரு பகவான் 15.11.2020 முதல் 6-ம் வீட்டில் மறைகிறார். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். கணவருடன் கருத்து மோதல்கள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தைக் குறைக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். ஓரளவு பணவரவு உண்டு. நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் நிலவும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். இந்த குரு மாற்றம் உங்கள் இமேஜை ஒருபடி குறைத்தாலும், உடல்நலக் குறைவைத் தந்தாலும் சகிப்புத்தன்மையாலும் சாதுர்யமான பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும். பரிகாரம்: குரு பகவானை வணங்குங்கள்.

கன்னி - 73%

குருப்பெயர்ச்சி பலன்கள்

பழைமையிலும் புதுமையை விரும்புபவர்களே! குரு பகவான் உங்கள் ராசிக்கு 15.11.2020 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளும் தடுமாற்றங்களும் நீங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். குடும்பத்தினர் ஒன்றுசேருவார்கள். வழக்கு சாதகமாகும். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். லாப வீட்டை குரு பார்ப்பதால் சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அக்கம்பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவு நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. புகழ்பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த குரு மாற்றம் எதிர்பாராத திடீர் யோகங்களையும், செல்வச் செழிப்பையும் அந்தஸ்தையும் உங்களுக்கு அள்ளித் தரும். பரிகாரம்: குரு பகவானை வணங்குங்கள்.

துலாம் - 66%

குருப்பெயர்ச்சி பலன்கள்

பிறர் உழைப்பில் வாழ விரும்பாதவர்களே! 15.11.2020 முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் குரு பகவான் அமர்கிறார். கடந்த ஆண்டைவிட இனி நல்லது நடக்கும். தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். தாழ்வுமனப்பான்மை விலகும். இடமாற்றமும் இருக்கும். கணவரிடம் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பூர்வீகச் சொத்து பிரச்னையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உறவினர் வகையில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மற்றவர்களின் பெயர்களில் உள்ள வாகனத்தைப் பயன்படுத்த வேண்டாம். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். மருந்து, உணவு, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சிறுசிறு கௌரவக் குறைவான சம்பவங்களும் வந்து விலகும். இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும் பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் ஓரளவு உங்கள் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும். பரிகாரம்: குரு பகவானை வணங்குங்கள்.

விருச்சிகம் - 64%

குருப்பெயர்ச்சி பலன்கள்

எல்லோரையும் நெறிப்படுத்துபவர்களே! 15.11.2020 முதல் குரு பகவான் 3-ம் வீட்டில் சென்று அமர்கிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு தொடரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலர் தனிக்குடித்தனம் செல்வீர்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். உங்களிடம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அலைச்சலும் வேலைச்சுமையும் இருந்தாலும் செல்வாக்கு கூடும். உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இந்த குரு மாற்றம் சின்னச் சின்ன அலைச்சலையும் செலவினங்களையும் தந்தாலும் உங்களைத் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்க உதவும். பரிகாரம்: முருகரை வணங்குங்கள்.

தனுசு - 77%

குருப்பெயர்ச்சி பலன்கள்

போராட்ட குணம் அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 15.11.2020 முதல் 2-ம் வீட்டில் குரு பகவான் நுழைக்கிறார். சோர்வு, களைப்பு நீங்கும். கடன் பிரச்னையிலிருந்து மீள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். நல்ல வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வேலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வி.ஐ.பி-க்களின் சந்திப்பு நிகழும். மாமனார், மாமியாரின் எதிர்ப்பு நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அயல்நாடு செல்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பாராமுகம் நீங்கும். சமூக அந்தஸ்து கூடும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் தழைக்கும். வரவு உயரும். புது ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் நெருக்கடி தந்தவர்கள் மாறுவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் இனி தடையில்லாமல் வந்து சேரும். இந்த குரு மாற்றம் பதுக்கிக்கிடந்த உங்களைப் பிரபலப்படுத்துவதாகவும், வசதி வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும். பரிகாரம்: முருகரை வணங்குங்கள்.

மகரம் - 58% 

குருப்பெயர்ச்சி பலன்கள்

ஒழுக்கம் உயர்வானது என்பதை உணர்ந்தவர்களே! குரு பகவான் 15.11.2020 முதல் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஜன்ம குரு என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கணவருடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். சாதாரண விஷயத்தையெல்லாம் பெரிதாக்காதீர்கள். ஆனால், இந்தப் பெயர்ச்சியால் ஓரளவு கெடுபலன்கள் குறையும்.

வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். அரசியல் செல்வாக்கு கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு கணவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஜன்ம குருவாக இருப்பதால் பணப்பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். குறிப்பாகப் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகளும் வசூலாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சிலர் உங்கள்மீது வீண் பழி சுமத்துவார்கள். சூழ்ச்சிகளையும் தாண்டி அலுவலகத்தில் மதிப்பு கூடும். பதவி உயர்வு உண்டு. இந்த குரு மாற்றம் சற்றே மனநிம்மதியற்ற போக்கையும் ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும் ஓரளவு வளர்ச்சியையும் தருவதாக அமையும். பரிகாரம்: குரு பகவானை வணங்குங்கள்.

கும்பம் - 61%

குருப்பெயர்ச்சி பலன்கள்

ஆத்மார்த்தமாகப் பழகுபவர்களே! குரு பகவான் 15.11.2020 முதல் உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் நுழைக்கிறார். பயணங்கள் அதிகமாகும். செலவினங்களும் கூடிக்கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப்போய் முடியும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். கணவரை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாம். மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றி வெற்றிபெறுவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருப்பவர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு, பிள்ளைகள் உங்களைவிட்டு பிரிவார்கள். வியாபாரத்தில் லாபம் குறையாது. ஆனால், வேலைச்சுமை அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்து கொள்வார்கள். இந்த குரு மாற்றம் அவ்வப்போது செலவுகளையும் பயணங்களையும் தந்தாலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியதாக இருக்கும். பரிகாரம்: பெருமாளை வணங்குங்கள்.

மீனம் - 83%

குருப்பெயர்ச்சி பலன்கள்

எதிர்நீச்சல் போட்டு எதையும் சாதிப்பவர்களே! 15.11.2020 முதல் உங்கள் லாப வீட்டில் குரு பகவான் நுழைகிறார். ஆழ்மனத்தில் இருந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். நல்ல வேலை அமையும். அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சொந்தங்களெல்லாம் வலியவந்து பேசுவார்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் சம்பாதிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். வழக்கு சாதகமாகும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களிடமிருந்த கற்பனைத்திறன், கலைத்திறனை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்த செல்வாக்கையும் லாபத்தையும் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். வேலையாட்களின் பிரச்னை குறையும். உத்தியோகத்தில் கடந்த ஓராண்டுக் காலம் ஏற்பட்ட அவஸ்தைகள், நெருக்கடிகள், அவமானங்களெல்லாம் நீங்கி பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு மாற்றம் ஒடுங்கியிருந்த உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுடன் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும். பரிகாரம்: முருகரை வணங்குங்கள்.