Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: மகரம் - தடைகள் விலகும்!

மகர ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021 -22!

தான் கொண்ட கருத்தில் விடாப்பிடியாக நின்று சாதித்துக் காட்டும் வல்லமை கொண்ட மகர ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசியிலிருந்து 13.11.2021 அன்று பெயர்ச்சியாகி கும்பராசிக்குச் செல்கிறார். குருபகவான் உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தில் அமர்வது இதுவரை இருந்த உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். மனப்போராட்டங்கள் விலகும். வீண்செலவுகள் குறையும். ஈகோ பிரச்னையாலும் வீண் சச்சரவாலு பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பணபலம் அதிகரிக்கும்.

வீட்டில் நிம்மதி உண்டாகும். சுபநிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கனிந்துவரும். உறவினர்கள் விருந்தினர்கள் வீடுதேடி வந்து மகிழ்ச்சியான செய்திகளைச் சொல்வார்கள். இல்லத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் உண்டாகும். உடல் நலக்கோளாறுகள் படிப்படியாகக் குறையும். கடன்கள் தீரும். ராசிக்கு ஆறாம் வீடான மிதுனத்தை குரு பகவான் பார்ப்பதால் எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்களைப் பற்றிய வதந்திகள் காணாமல் போகும். மருத்துவச் செலவுகள் குறையும். குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அயல்நாடுப் பயணங்கள் கூடி வரும்.

ஆலங்குடி குருபகவான் கோயில்
ஆலங்குடி குருபகவான் கோயில்

பத்தாம் வீடான துலாத்தின் மீது குருபகவானின் பார்வை படுவதால் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பதவி கிடைக்கும்.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் தடைகள் ஓரளவு நீங்கும். பிரபலங்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். சண்டை பிடித்த சகோதர உறவுகள் இனி இணக்கமாவார்கள். வழக்குகள் வெற்றியாகும். கடன்களைப் படிப்படியாக அடைத்துவிடுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடிவரும். தாயாரின் உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் மட்டும் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள்.

குருபகவான்
குருபகவான்

சதய நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்:

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் செல்கிறார். இதனால் வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். உறவுகளுக்கு நடுவே உங்கள் மதிப்பு உயரும். திருமண வயதில் இருக்கும் மகர ராசி அன்பர்களுக்குத் திருமணம் கை கூடும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். வேலையில் பணிச்சுமையும் தொந்தரவான இடமாற்றமும் வந்து செல்லும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணத்தின் போது உரிய பாதுகாப்பு தேவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் சுபபலன்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அதனால் பணப்பற்றாக்குறையும் ஏற்படலாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும் என்றாலும் அது அவர்களின் நலன் சார்ந்தே இருக்கும். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதைத் தவிருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். விலையுயர்ந்த நகை மற்றும் செல்வத்தைக் கவனமாகக் கையாளுங்கள். சகோதரர்கள் உதவுவது ஆறுதலாக இருக்கும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி இருந்த பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவித்து வசந்தமான வாழ்வுக்கு உங்களை வழிகாட்டுவதாக அமையும்.

பரிகாரத் தலம்: திருக்கஞ்சனூர்

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அக்னீஸ்வரர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு