Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: தனுசு - லாபஸ்தானத்தைப் பார்க்கும் குரு!

தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22.

வாழ்வின் சுக துக்கங்களை சமமாகப் பார்க்கப் பழகி அனைவருக்கும் பயன்படுமாறு வாழும் தனுசுராசி அன்பர்களே!

13.11.2021 அன்று குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான மகரத்தில் இருந்து மூன்றாம் இடமான கும்பத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். குருபகவான் உங்களின் ராசி அதிபதி மட்டுமல்ல உங்களின் சுகஸ்தானமான 4 ம் வீட்டுக்கும் அதிபதி. அப்படிப்பட்ட குருபகவான் மூன்றில் சென்று மறைவு பெறுவது அத்தனை நல்ல அமைப்பு என்று சொல்வதற்கில்லை. எதை எடுத்தாலும் நிதானித்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலகட்டமாக இது இருக்கப்போகிறது.

அடுத்தவர் பேச்சைக் கேட்டு எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் இந்தக் காலகட்டத்தில் இறங்கக் கூடாது. ஆனை அளவு கிடைக்கும் பூனை அளவு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி உங்களைப் பலரும் இழுக்கப் பார்ப்பார்கள். ஒருபோதும் அவற்றுக்கு மயங்க வேண்டாம். குடும்பத்துக்குள் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது ரொம்பவே அவசியம். சகோதர உறவுகளுடன் பேசும்போதும் பெரியவர்களிடம் பேசும்போதும் பதற்றம் இல்லாமல் பேசுங்கள். அதன்மூலம் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க முடியும்.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

அதே வேளையில் குருபகவான் தன் பார்வையால் நற்பலன்களை வாரிவழங்க இருக்கிறார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மிதுனத்தை குருபகவான் பார்ப்பதால் மறைந்திருந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் காட்டும் அன்புகாட்டினால் அது ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பிக் கிடைக்கும். அதனால் இல்லறம் இனிக்கும்.

குருபகவானின் பார்வை ஒன்பதாம் வீடான சிம்மத்தின்மீது படுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்துத் திரும்ப வராத தொகை வசூலாகும். நீங்கள் வாங்கியிருந்த கடனை திரும்பச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் தந்தையுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மகன் அல்லது மகளுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். அவர்களின் திருமணமுயற்சிகளும் பலிதமாகும். நண்பர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். கொடுப்பதற்கு முன் வாழ்க்கைத் துணையோடு ஆலோசித்துச் செய்யுங்கள்.

குருபகவான் பதினொன்றாம் வீடான துலாமைப் பார்ப்பதால் செயல்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். பாராட்டுகள் குவியும். சகோதரர்கள் உதவுவார். சொத்துப் பிரச்னைகளில் இருந்த வில்லங்கங்கள் தீரும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்துப் போவது அவசியம். பயணத்தின் போதும் கூடுதல் கவனம் தேவை.

அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் செல்கிறார். இதனால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கூடிவரும்.

சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்

31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் செல்கிறார். இதனால் புகழ், கௌரவம், சொல்வாக்கு, செல்வாக்கு கணிசமாக உயரும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பு ஆகும்.

குருபகவான்
குருபகவான்

குருபகவானின் பூரட்டாதி நட்சத்திர சஞ்சாரம்:

02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதனால் நன்மைகளே நடைபெறும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். முடிக்கமுடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்களை மகிழ்ச்சியாக செய்துமுடிப்பீர்கள். தாய்க்கு ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைவுகள் நீங்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சியில் குருபகவான் தன் பார்வை மற்றும் நட்சத்திர சஞ்சார பலத்தால் மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறார். சின்னச் சின்ன அலைச்சல்கள் ஏமாற்றங்கள் இருந்தாலும் அவை எல்லம் உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்துவதற்காகவே இருக்கும்.

பரிகாரத்தலம்: காஞ்சிபுரம்

வழிபட வேண்டிய தெய்வம்: ஏகாம்பரநாதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு