Published:Updated:

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22: மேஷம் - 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் யோக காலம்!

ராசிக்கு 7 - ம் வீடான துலாமை குரு பகவான் பார்ப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் சோர்வு முதலியன முடிவுக்கு வரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செயல்களையும் விரைந்துமுடிப்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு.

எப்போதும் எதிலும் முதன்மை இடமே பெற விரும்பும் மேஷ ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் பத்தாம் வீடான மகரத்தில் அமர்ந்து பல சங்கடங்களைத் தந்துகொண்டிருந்த குருபகவான் இப்போது பதினொன்றாம் இடமான கும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார். இது மிகவும் யோகமான அமைப்பாகப் பார்க்கப்படுகிறது.

13.11.2021 அன்றுமுதல் குருபகவான் கும்பராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கும்பராசி என்பது தங்கள் ராசிக்கு லாபஸ்தானம் ஆகும். எந்த கிரகமும் 11 ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போது நற்பலன்களையே தரும். அதிலும் சுபகிரகமான குருபகவான் 11 ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது மிகவும் விசேஷமான அமைப்பாகும்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

தசம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் செயல்கள் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார். வேலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கேற்ற பலன் இல்லாமல் திண்டாடினீர்கள். தேவையற்ற அவச்சொல்லுக்கும் ஆளானீர்கள். அந்த நிலை இப்போது மாறும்.

இனி உங்களை நீங்களே மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். உங்களுக்குள் மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புகழின் வெளிச்சம் இல்லாமல் பதுங்கியிருந்த நீங்கள் தற்போது அனைவரின் கவனத்துக்கும் வருவீர்கள். தேவையான பணத்தைக் கூடப் புரட்டமுடியாமல் திண்டாடினீர்களே, இனி அந்தத் தடைகள் எல்லாம் அகலும். படிப்படியாகக் கடன்களை அடைப்பீர்கள். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம் சில காரியங்களில் ஆதாயம் உண்டாகும்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் இருந்துவந்ததே அந்த நிலை இனி மாறும். குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். தங்கையின் திருமணத்தை முடிக்க முயன்று பல தடங்கல்களை சந்தித்தீர்களே... அந்தத் தடங்கல்கள் எல்லாம் விலகும். நல்ல இடத்தில் வரன் அமையும்.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் பார்வை பலன்கள்:

குருபகவான் கும்பராசியில் அமர்ந்து 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். அதாவது உங்களின் மூன்றாம் வீடான மிதுனத்தையும், சிம்மத்தையும் துலாம் ராசியையும் பார்க்கிறார். குருபகவானின் மூன்றாம் பார்வையால் சகோதர வகையில் குறிப்பாக இளைய சகோதர வகையில் இருந்துவந்த பிரச்னைகள் அனைத்தும் விலகும். குடும்பத்துக்குத் தேவையான மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களின் பெயர், புகழ் ஆகியன வீட்டிலும் வெளியிடும் அதிகரிக்கும்.

குருபகவான் சிம்மராசியைப் பார்ப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே காதல் பெருகும். இல்லறம் நல்லறமாகும். குழந்தைச் செல்வத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேஷராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பதிலைத் தரும். வாரிசு உருவாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். தந்தைவழி சொத்துகளில் இருந்த குழப்பங்கள் வில்லங்கங்கள் தீரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராசிக்கு 7 - ம் வீடான துலாமை குரு பகவான் பார்ப்பதால் மனதில் இருந்த சிக்கல்கள் சோர்வு முதலியன முடிவுக்கு வரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செயல்களையும் விரைந்துமுடிப்பீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கும் வாய்ப்புண்டு.

கே.பி.வித்யாதரன்
கே.பி.வித்யாதரன்

நட்சத்திர சஞ்சார பலன்கள்:

அவிட்ட நட்சத்திரத்தில் குருவின் சஞ்சாரம்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். அவிட்டம், உங்கள் ராசி அதிபதியான செவ்வாயின் நட்சத்திரம். எனவே எடுத்த காரியங்களில் வெற்றிகிடைக்கும். போட்டிகளில் வெற்றிவாகை சூடுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள்.

பேச்சில் ஒருவிதத் தெளிவும் தீர்க்கமும் உண்டாகும். சொந்த வீடு அல்லது மனை வாங்க விரும்பியவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் கனிந்துவரும். இருக்கும் பிதிர்ராஜ்ஜிய சொத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டுப் புதிய சொத்தை வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். தொல்லைதந்த பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வழக்குகளில் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அன்புக்குரிய தாயாரின் உடல் நலனின் இருந்த குறைபாடுகள் நீங்கி நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

சதய நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்:

31.12.2021 முதல் 2.3.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சதயம் ராகு பகவானின் நட்சத்திரம். எனவே இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுட்துப் போவது நல்லது. குடும்பத்தில் பொறுமையைக் கையாள்வது அவசியம். தேவையற்ற சந்தேகம், ஈகோ பிரச்னைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். ஒற்றுமையாக வாழ்ந்தால் மகிழ்ச்சி என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் இது.

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்

பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம்:

2.3.2022 முதல் 13.4.2022 வரை குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியிலே சஞ்சாரம் செய்ய இருக்கிறார். எனவே நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். இதுவரை தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண வயதில் இருக்கும் மகன் அல்லது மகளுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். நல்ல வரன் அமையும். புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை சென்று தரிசனம் செய்ய விரும்பித் தட்டிக்கொண்டேபோன புனிதத் தல யாத்திரை இப்போது கைகூடும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இதுவரை தடுமாற்றதோடு இருந்த உங்களைத் தாங்கிப் பிடித்து வெற்றிப்பாதையில் நடத்தும்.

பரிகாரத் தலம்: தக்கோலம்

வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு