Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: கும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள்

மூன்றில் குரு அமர்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே அனைத்துவிஷயங்களிலும் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்தோம் என்று செயல்பட வேண்டாம். அதே வேளையில் குருவின் பார்வை அமோக பலன்களை வழங்க இருக்கிறது.

Published:Updated:

Gurupeyarchi Palangal 2023: கும்ப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்!

மூன்றில் குரு அமர்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே அனைத்துவிஷயங்களிலும் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்தோம் என்று செயல்பட வேண்டாம். அதே வேளையில் குருவின் பார்வை அமோக பலன்களை வழங்க இருக்கிறது.

கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள்
பொது : காசுபணத்திற்கு விலை போகாமல் தன்மானத்துடன் வாழ விரும்பும் கும்பராசிக்காரர்களே... வலுவான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழும் நீங்கள் வழுக்கி விழுபவர்களை வாழ வைப்பவர்கள். நல்லதே செய்து நலிந்த நீங்கள் நாலுபேர் நாலுவிதமாகப் பேசினாலும் கலங்க மாட்டீர்கள்.

அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு பணப்புழக்கத்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை மூன்றாவது வீட்டில் அமர்ந்து சஞ்சரிக்க இருக்கிறார்.

மூன்றில் குரு அமர்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எனவே அனைத்துவிஷயங்களிலும் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்தோம் என்று பேசாமல் சில விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள். எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். வீண் அலைச்சல், டென்ஷன் வரக்கூடும். வசதி, செல்வாக்கு உள்ளவர்களின் பேச்சை கண்டு மயங்கி தவறான பாதையில் சென்றுவிடவேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் கூட பெரிய சண்டையில் போய் முடியும். முக்கிய விஷயங்களைப் பெரியவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். வெளியிடங்களிலும் நிதானமாக பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. கண்வலி, பல்வலி வந்துபோகும்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

அதேவேளையில் உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். நாடாளுபவர்கள், வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சோகமே வடிவாய் இருந்த உங்கள் மனைவி முகத்தில் இனி லஷ்மி குடிகொள்வாள். கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. வட்டிக்கு வாங்கிய பெரிய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று முழிபிதுங்கி இருந்தீர்களே... இனி முழுக் கடனையும் பைசல் செய்யும் அளவிற்குப் பணவரவு இல்லாவிட்டாலும், ஒரு பகுதியைப் பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்

குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தந்தையாருடன் அடிக்கடி விவாதங்கள் வெடித்தே, இனி பாசம் கூடும். அவர்வழிச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பிள்ளைகளின் பிடிவாதம், அலட்சியப் போக்கு மாறும். உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். மகனை அவர் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். அவர்களிடம் உங்களின் பிரச்னையைத் தெளிவாக எடுத்துரைப்பது நல்லது. வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசவேண்டாம். சிறு விபத்து ஏற்படும். விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்களை கவனமாக கையாளுங்கள்.

உங்களது லாப வீடான 11 - வது வீட்டை குரு பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயமுண்டு. அக்கம்பக்கம் வீட்டாருடன் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குருப்பெயர்ச்சி கும்பம்
குருப்பெயர்ச்சி கும்பம்

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரித்துப் பலன் தரும் இந்தக் காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர்ப் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை உங்கள் சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமார்ந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்வதால் மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரம் மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சரித்துப் பலன் தர இருப்பதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. செல்வம், செல்வாக்குக் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

வியாபாரம் : பெரிய முதலீடுகளைப் போட்டுவிட்டு நட்டப்படாமல், இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது அறிந்து கொண்டு முடிவெடுங்கள். உங்கள் ரசனைக்கேற்பக் கடையை அழகுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களைப் பணியிலிருந்து நீக்குவீர்கள். இனி பழைய வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். ஆனால் பழைய பாக்கிகளைப் போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி வேலை வாங்குங்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியமாக இருந்து விடவேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுங்கள். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் வரத்தான் செய்யும். விட்டுக் கொடுத்துப் போங்கள்.

பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்

வேலை : மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். என்றாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். ஆனால் சக ஊழியர்கள் உங்களை மட்டம்தட்டிப் பேசுவார்கள். அவர்களிடம் உஷாராக பழகுங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சிலர் எதிர்பாராத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்தால் தீரயோசித்து முடிவெடுங்கள். மே, டிசம்பர் மாதங்களில் வேலைச்சுமை குறையும். புதிய சலுகைகளுடன், சம்பள உயர்வும் உண்டு. கணினித் துறையினர்களுக்கு பதவி உயரும். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். தூக்கமின்மை, பைல்ஸ் தொந்தரவு வரக்கூடும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களைச் சில நேரங்களில் புலம்ப வைத்தாலும் ஒருசிலவற்றில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஶ்ரீராகவேந்திரர், ஷீர்டி ஶ்ரீசாயிபாபா, ஶ்ரீபாம்பன் சுவாமிகள் என மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; சாதுக்களுக்கு அன்னதானம் வழங்க இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்; சகல நலன்களும் உண்டாகும்.