பொது : தவற்றைத் தயங்காமல் தட்டிக் கேட்கும் மகர ராசி அன்பர்களே... கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டு அதற்கேற்ப வருங்காலத்தை வடிவமைத்துக் கொள்வதில் வல்லவர்கள் நீங்கள்தான்.
ஆனால் கோபம் வந்தால் நிதானம் இல்லாமல் கொட்டித் தீர்ப்பவர்களும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களுக்கு இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, எந்த ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கி வைத்த குரு பகவான் 22.4.2023 முதல் 1.5.2024 வரை நான்காவது வீட்டில் அமர்ந்து பலன் தர இருக்கிறார்.
நாலில் குரு செலவுகளை அதிகம் கொடுப்பார். சேமிப்புகள் கரையும். உங்களின் கோபதாபங்களையும், கூடாப்பழக்க வழக்கங்களையும் வாழ்க்கைத்துணை சில நேரங்களில் சுட்டிக் காட்டுவார். அதற்காக வருத்தப்படாமல் திருத்திக் கொள்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். நண்பர்கள், உறவினர்களிடம் விவாதங்களை குறைத்து விட்டுக்கொடுத்துப் போங்கள். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் யோசித்து முடிவெடுங்கள். மகளுக்கு திருமணம் திடீரென ஏற்பாடாகும். மகனுக்கு அயல்நட்டில் வேலை கிடைக்கும். பிள்ளையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்
குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளிடம் அதிகம் கெடுபிடி காட்டாமல் அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி,உத்தியோகத்தின் பொருட்டுப் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரிடும். உணவு விஷயங்களில் நாக்கைக் கட்டுபடுத்துங்கள். எந்த வேலையைச் செய்தாலும் நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். சொத்து வாங்குவது விற்பது லாபத்தில் முடியும். ஆனால் புதிதாக சொத்துவாங்கும் போது அதற்குரிய ஆவணங்களை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக்கொள்வது நல்லது. பால்ய சிநேகிதர்களால் சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
உங்களின் 10-ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் உந்தியோகத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டுப் புது வண்டி வாங்குவீர்கள். பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக்கொள்ளப் பாருங்கள். உடன்பிறந்தவர்களுடன் சின்னச் சின்ன உரசல்கள் வந்து நீங்கும். சில நேரங்களில் அவர்களால் அலைச்சலும் கூடும். உதவிகளை வாங்கிக் கொண்டு வேறுமாதிரியாக உங்களை விமர்சனம் செய்வார்கள். எனவே சகோதரவகையில் உரிமையெடுத்துக் கொள்ளவேண்டாம். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வீடு,வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களில் சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளவேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து பலன் கொடுக்கும் இந்தக் காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்கள் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இந்தக் காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. புது வேலை கிடைக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.
17.4.2024 முதல் 1.5.2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நாள்களில் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
11.9.2023 முதல் 20.12.2023 வரை குருபகவான் அஸ்வினி, பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
வியாபாரம் : கண்டபடி கடன் வாங்கித் தொழிலினை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு, வாயில் தோசை என்று கறாராக இருங்கள். மற்றவர்களை நம்பிப் புது முதலீடுகள் வேண்டாம். பழைய பாக்கிகளைக் கனிவாக பேசி வசூலியுங்கள். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களை முழுமையாக நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தப் புதிய அணுகுமுறைகளையும், விளம்பர யுக்திகளையும் கையாளுவது நல்லது. கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் முரண்பாடாகப் பேசுவார்கள். நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள்.
வேலை : பல வேலைகளைக் காலநேரம் பார்க்காமல் நீங்களே இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரி பாராட்டும்படியாக நடந்து கொவீர்கள். ஆனால் நேரடி அதிகாரி உங்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். பதவியுயர்வு, சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டுப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். அயல்நாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

குருபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டாலும், அவற்றை முறியடித்துவிடுவீர்கள். கணினித் துறையினர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.
இந்த குருப்பெயர்ச்சி ஓய்வெடுக்க முடியாதபடி உங்களை உழைக்க வைப்பதுடன், புதிய பாதையில் சென்று ஓரளவு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதாக அமையும்
பரிகாரம்: சஷ்டி தினங்களிலோ, வியாழக் கிழமைகளிலோ திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரையும், அங்கே பிராகாரத்தில் அருளும் குரு பகவானையும் நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபடுங்கள்; ஏற்றங்கள் உண்டாகும்.